12/08/2018

வன்மம் எனப்படுவது யாதெனில்...


காலையில் தினத்தந்தியில் திருமுருகன் கைது செய்தியை படித்தபோதே அவ்வளவு ஆத்திரமாக இருந்தது.

ஒரு செய்திக்குள் ஒளிந்திருக்கும் வன்மம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு இந்த செய்தியை உதாரணமாக சொல்லலாம்.

இந்த செய்தியில் இருக்கும்.. `தலைமறைவாக இருந்தவர்.. சிக்கினார்...’ போன்ற வார்த்தைகளை கவனியுங்கள்..

அந்த வார்த்தைகள் உருவாக்கும் தோற்றத்தை உள்வாங்கினால்.. திருமுருகன் காந்தி ஒரு மாபெரும் ரவுடி.. அல்லது மக்கள் பணத்தை ஆட்டையப் போட்டு விட்டு தலைமறைவாக இருந்தவர் என்ற எண்ணத்தை உருவாக்கும்.

தினத்தந்தியின் நோக்கமும் அதுதான்.

திருமுருகன் அரசியல் மீது நமக்கு கருத்தியல் உடன்பாடு இருக்கலாம்.. முரண்பாடு இருக்கலாம்..

ஆனால் மக்களுக்காக களத்தில் வேலை பார்க்க கூடிய ஒரு இயக்கத்தை வழிநடத்தக் கூடியவர்.

அதுவும் நாசகார ஸ்டெர்லைட் குறித்தும் அதற்காக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்தும்.. சேலம் எட்டு வழிச்சாலை மக்கள் எதிர்ப்பு குறித்தும் ஐநா.வில் பேசிவிட்டு இந்தியா வரும்போது கைது செய்திருக்கிறது போலீஸ்.

தேசத்துரோக வழக்கில் தலைமறைவாக இருந்தவராம்..

தலைமறைவாக இருக்கும் வார்த்தைக்கு பொருள் தெரியுமா.. தெரியாதா..

கடந்த மே மாதத்தில் இருந்து ஜெனிவாவில் இருக்கிறார் திருமுருகன். அங்கு ஐ.நா. மனித உரிமை கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்..

தலைமறைவாக இருப்பவர் செய்யும் வேலையா இது..

ஆக.. தினத்தந்திக்கு இதெல்லாம் தெரியாமல் எழுதுவது இல்லை.. இந்த செய்தி திருமுருகன் மீதான வன்மத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.

2009 ஈழப்படுகொலைக்குப்பின் தீவிர அரசியல் களத்திற்கு வந்திருக்கும் இன்றைய தலைமுறை இயக்க செயல்பாட்டாளர்களில்.. வெறுமனே.. ஏ.. வந்துப்பார்.. என்றெல்லாம் சவுண்ட் விடாமல் தர்க்க ரீதியாக ஆதாரங்களுடன் விவாதம் செய்வதில் திருமுருகன் முக்கியமானவர்.

எதிரியை அவன் பயன்படுத்தும் அதே யுக்த்தியை கொண்டு எதிர்கொள்வது மிக முக்கியமான அரசியல் பணி. அதை திருமுருகன் செய்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை இத்தனை உயிர் பலிகளுக்குப்பின்னரும் மீண்டும் இயக்கப்படுவதற்கான காய் நகர்த்தல்கள் தென்படுகின்றன.. ஆலையின் நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த புள்ளியில் இருந்துதான் நாம் இந்த செய்தியை அணுக வேண்டும்.

தினத்தந்தியின் இந்த வன்மத்திற்கு காரணம் ஸ்டெர்லைட் காரன் தூக்கிப்போடும் விளம்பரம் எனும் எலும்புத்துண்டுகளும் காரணமாக இருக்கலாம்...

- கார்ட்டூனிஸ்ட் பாலா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.