12/08/2018

காளத்திக்கும் தெலுங்கருக்கும் என்ன தொடர்பு?


தற்போது ஸ்ரீ காளஹஸ்தி (sri kalahasti) என்று அழைக்கப்படும் காளத்தி புகழ்பெற்ற சைவ திருத்தலம் ஆகும்.

கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர் "சந்தமார் அகிலொடு" என்று தொடங்கும் பதிகமும் "வானவர்கள் தானவர்கள்" என்று தொடங்கும் பதிகமும் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் "விற்றூணொன் றில்லாத" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

கிபி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரர் "செண்டா டும்விடையாய்" என்று தொடங்கும் பதிகம் இத்திருத்தலத்தின் மீது பாடியுள்ளார்.

இக்கோவில் உள்ள மலை (கைலாசகிரி என்று ஆவணங்கள் குறித்தாலும்) சிவனுக்கு கண்கொடுத்த கண்ணப்ப நாயனார் பெயரால் "கண்ணப்பர் மலை" என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

இது பண்டைய தமிழ்நாடான தொண்டைநாட்டின் பகுதியென்பதால் காளத்திக்கு அருகே தொண்டமநாடு அல்லது தொண்டைமான் நாடு எனும் ஊர் உள்ளது.

கிபி 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரதேவ நாயனார் "கயிலை பாதி காளத்தி பாதி" எனும் அந்தாதி பாடியுள்ளார்.

இது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

இதே ஆசிரியர் எழுதிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

இதே நூற்றாண்டில் வாழ்ந்த "கல்லாட தேவ நாயனார்" இயற்றிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" எனும் அதே பெயரைக் கொண்ட இன்னொரு நூலும் பதினோராம் திருமறையில் உண்டு.

கிபி 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழன் இத்தலத்தை கோவிலாகக் கட்டினான்.

இங்கே உள்ள கண்ணப்பர் கோவிலுக்கு மண்டபமும் தாழ்வாரமும் ராஜேந்திர சோழன் காலத்து வேளிர் மன்னன் "கங்கைகொண்டான் இருங்கோளன்" என்பவரின் தாயார் "புத்தங்கையார்" கட்டிக்கொடுத்துள்ளார்.

முதலாம் குலோத்துங்கன் காலத்தில் "காளத்தி உடையான் மரக்கால்" என்ற அளவுக் கருவி பயன்பாட்டில் இருந்ததாகக் கல்வெட்டு உள்ளது.

இக்கோவிலின் கல்வெட்டுகள் இறைவனை "தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார்" என்று குறிக்கின்றன.

இப்பகுதியில் ஓடும் ஆறு தற்போது "சொர்ணமுகி" என்று அழைக்கப்படுகிறது.

இது கிபி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் நாயன்மார்களின் வரலாற்றினைத் தொகுத்து படைத்த திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்) கண்ணப்ப நாயனார் பற்றிய பகுதியில் "பொன்முகலி" என்று குறிக்கப்பட்டுள்ளது. (தேவாரம் "முகலி" என்று மட்டும் குறிக்கிறது).

கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் காளத்திநாதரைப் புகழும் பாடல் "சிரத்தானத்தில்..." என்று தொடங்கி "திருக்காளத்திப் பெருமாளே" என்று முடிகிறது.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த "சேறைக் கவிராயர்" (கவிராச பிள்ளை அல்லது ஆசுகவிராயர் என்றும் அறியப்படுபவர்) பாடிய உலா ஒன்று உள்ளது.

"திருக்காளத்திநாதர் உலா" அல்லது "காளத்தியாள்வார் உலா" என்று இது அழைக்கப்படும். சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட படைப்பு ஆகும்.

அதே புலவர் "திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை" எனும் நூலையும் எழுதியுள்ளார்.

இதைக் கண்டெடுத்து பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா ஆவார்.

கிபி 16 ஆம் நூற்றாண்டில் "வேளாக்குறிச்சி ஆதின" சீடரான "வீரை ஆனந்தக் கூத்தர்" இத்தலத்தின் மீது இயற்றிய "திருக்காளத்திப் புராணம்" புகழ்பெற்றது.

கிபி 17ஆம் நூற்றாண்டில் சிவப்பிரகாசர் என்பவரும் அவர் தம்பியும் சேர்ந்து இயற்றிய "சீகாளத்தி புராணம்" எனும் படைப்பும் உண்டு.

இதன் தலபுராணம் 18 ஆம் நூற்றாண்டில் கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரால் சேர்ந்து பாடப்பட்டுள்ளது.

பொன்முகரி ஆற்றுக்கு செல்லும் படித்துறை முகப்பில் ஒரு சிலை உள்ளது.
1912 ஆம் ஆண்டிலேயே 9 லட்சம் செலவில் திருப்பணி செய்த "தேவக்கோட்டை இராமநாதன் செட்டியார்" என்பவரின் சிலைதான் அது.

"பொங்கல்" அன்றும் திருவிழா அன்றும் ஆக ஆண்டின் இரண்டு நாட்களில் மட்டும் உற்சவர் மலையை வலம் வரும் சடங்கு நடக்கிறது.

தமிழக எல்லையில் இருந்து வெறும் 64கி.மீ தொலைவில் இருக்கும் காளத்தி தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதி ஆகும்.

திருப்பதி போல காளத்தியும் தமிழகத்தின் பகுதியே ஆகும்.

இது ஆந்திராவுக்கு போனது ஏன்?

கிபி 1516 ல் கிருஷ்ணதேவ ராயர் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று கட்டியுள்ளார்.

63 நாயன்மார் சிலைகளுக்குப் போட்டியாகத் தொடர்பேயில்லாமல் பாண்டவர் சிலைகளை கொண்டுவந்து வைத்தார்.

கிருஷ்ண தேவராயரின் அவைப்புலவர் தூர்ஜாட்டி "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர மகாத்யம்" எனும் நூலும் "ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சதகம்" எனும் நூலும் இயற்றியுள்ளார்.

அதன்பிறகு அச்சுதராயர் ஒரு பதினாறுகால் மண்டபம் கட்டியுள்ளார்.

இது தவிர தெலுங்கருக்கும் காளத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.