17/10/2018

தமிழகத்திற்கு வேண்டாம் ஹைட்ரோ கார்பன் திட்டம்.. 10 காரணங்கள் - பாமக...


இந்தியாவின் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

இதன் மூலம் தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் திணிக்கப்படலாம். இது மிக மிக ஆபத்தான திட்டம் ஆகும்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசங்கம் நிரந்தரமாக கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டை நீரியல் விரிசல் முறை திட்டங்கள் இல்லாத பகுதியாக (Frack Free Tamil Nadu) அறிவிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் என்றல் என்ன?

பெட்ரோல், டீசல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் ஹைட்ரோகார்பன் ஆகும்.

கச்சா எண்ணெய், எரிவாயு கிடைக்கும் இடங்களில் அவற்றை நேரடியாக குழாய்கள் மூலம் எடுப்பார்கள்.

நேரடி எண்ணெய் வளம் இல்லாத பகுதிகளில், நிலத்தடி பாறைகளில் சிக்கியுள்ள ஹைட்ரோகார்பனை நீரியல் விரிசல் முறையில் (hydraulic fracturing) எடுப்பதை ஹைட்ரோகார்பன் திட்டம் என்கிறார்கள்.

மேலிருந்து கீழாக சில கிலோ மீட்டர் ஆழத்திற்கு குழாயை அமைத்து, பின்னர் பக்கவாட்டில் ஓரிரு கிலோ மீட்டர் குழாயை செலுத்தி, அதற்குள் நன்னீரும் ரசாயனமும் கலந்த கரைசலை மிகுந்த அழுத்தத்தில் பலமுறை செலுத்தி, பாறைகளில் விரிசலை ஏற்படுத்தி ஹைட்ரோகார்பனை எடுக்கும் திட்டம் இதுவாகும்.

நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோகார்பன் எடுப்பது ஒரு புதிய முறை ஆகும். அமெரிக்கா, கனடா போன்ற மிகச்சில நாடுகளில் மட்டுமே இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து, பல்கேரியா உள்ளிட்ட பலநாடுகள் இத்திட்டத்தை நிரந்தரமாக தடை செய்துவிட்டன.

இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்...

1. தண்ணீர் பற்றாக்குறை: நீரியல் விரிசல் முறையில், நிலத்தடியில் மிக ஆழத்தில் பாறைகளில் உள்ள ஹைட்ரோகார்பனை எடுக்கும் திட்டத்திற்கு ஏராளமான அளவில் நன்னீர் தேவை. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளாகவும், கடல்நீர் உட்புகும் பகுதிகளாகவும் இருக்கும் தமிழகக் கடலோரங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்.

2. தண்ணீர் மாசு: நீரியல் விரிசல் முறையில் 90% தண்ணீர், 9.5% மணல் 0.5% நச்சு ரசாயனம் கலந்த கரைசல் அதிக அழுத்தத்தில் நிலத்துக்குள் செலுத்தப்படுகிறது. இவற்றில் கணிசமான கலவை கழிவு நீராக வெளிவருகிறது. இந்த நச்சுக்கழிவு நீர் எளிதில் தூய்மை செய்ய முடியாதது ஆகும். இதனால் நீரும், நிலமும், நிலத்தடி நீரும் நஞ்சாகும்.

3. உடல்நலக்கேடுகள்: நீரியல் விரிசல் முறைக்காக பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனங்களும், கழிவு நீரும் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக் கூடியனவாகும். கூடவே, காற்றுமாசுபாட்டையும் ஹைட்ரோகார்பன் கிணருகள் உருவாக்குகின்றன. புற்றுநோய், மூச்சுக்குழல் நோய்கள், குறைபிரசவம் எனப் பலக்கேடுகள் இவற்றால் உருவாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. விவசாயம் அழிவு: தமிழ்நாட்டின் மிக முதன்மையான உணவு உற்பத்தி மண்டலமான காவிரிப் படுகை ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பேரழிவை சந்திக்கும். இதனால், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு தகர்க்கப்படும்.

5. காலநிலை மாற்றம் அதிகரிப்பு: புதைபடிவ எரிபொருட்கள் அனைத்தும் புவி வெப்பமடைய காரணமாக உள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டங்களால் வெளியாகும் மீத்தேன் மிக அதிக அளவு வெப்பத்தை பிடித்துவைக்கும் சக்தி வாய்ந்தது. இத்திட்டங்களால் காலநிலை மாற்ற ஆபத்து அதிகமாகும்

6. சமுதாய வாழ்க்கை அழிவு: மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமைக்கும் முயற்சி உலகில் வேறெங்கும் இல்லை. நிலப்பரப்பில் அமையும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் வரிசையாக பல ஊர்களில் அமைக்கப்படும். இதனால் ஏற்படும் சத்தமும், காற்று மாசும், நீர் மாசும் மக்களின் இயல்பான வாழ்க்கை முறையை பாதிக்கும்.

7. மீனவர்கள் வாழ்க்கை பாதிப்பு: கடல் பரப்பில் அமையும் ஹைட்ரோகார்பன் கிணருகள் மீன் வளத்தையும், மீன்பிடி தொழிலையும் பாதிக்கும்.

8. சுற்றுச்சூழல் வளம் அழிவு: பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் என அரிதான இயற்கை வளப்பகுதிகள் காவிரி வடிநிலப்பகுதியில் உள்ளன. இவையெல்லாம் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாதிக்கப்படும்.

9. நிலநடுக்க ஆபத்து: ஹைட்ரோகார்பன் திட்டம் அமையும் பகுதிகளில் மெல்லிய நிலநடுக்கும் ஏற்படுவது பல இடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரிய நிலநடுக்கங்கள் வரும்போது இப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.

10. பண்பாட்டு அழிவு: கரிகாலனும் ஆர்தர் காட்டனும் உருவாக்கிய மிகச்சிறந்த நீர்ப்பாச திட்டங்களுடன், தமிழ்நாட்டின் உன்னதமான கலாச்சார சின்னங்கள் உள்ள பகுதி காவிரிப் படுகை ஆகும். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களின் புனித இடங்கள் இங்குள்ளன. இந்த பகுதி அழிவுக்குள்ளானால், தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும் அழியும்.

என்ன செய்ய வேண்டும்?

கடலூர், நாகை மாவட்டங்களின் நிலப்பகுதியிலும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களின் கடல் பரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டை நீரியல் விரிசல் முறை திட்டங்கள் இல்லாத பகுதியாக (Frack Free Tamil Nadu) அறிவிக்க வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் 3 ஹைட்ரோகார்பன் திட்ட பகுதிகள்...

தமிழ்நாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு நிலப்பரப்பின் மீது ஒரு பகுதி (CY-ONHP-2017/1) அளிக்கப்பட்டுள்ளது. பரப்பளவு 731 சதுர கிலோமீட்டர். கடலூர் மற்றும் நாகை மாவட்ட நிலப்பரப்பில் 85 இடங்கள் உள்ளன.

கடலூர் மாவட்ட கிராமங்கள்...

சாமியார் பேட்டை, மடவாபள்ளம், சிலம்பிமங்கலம், வேளங்கிராயன் பேட்டை, பரங்கிப்பேட்டை, எம்ஜிஆர் திட்டு, முடசல் ஓடை, கிள்ளை, வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், தா.சோ.பேட்டை, வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, அத்திப்பட்டு, நந்திமங்களம், பூலாமேடு, சிவாயம், சி. வீரசோழகன், கண்ணங்குடி, சி. பரமேஸ்வரநல்லூர், லால்புரம், மேலமூங்கிலடி, பு. ஆதிவராகநல்லூர், ஆயிபுரம், சித்தேரி, மனவெளி, ஆலம்பாடி, பு. உடையூர், உளுத்தூர், பிரசன்னராமாபுரம், கொளக்குடி, அரங்கமங்களம், கல்குணம், ராசாகுப்பம், குருவப்பன் பேட்டை, விருப்பாட்சி, பெத்தநாயக்கன் குப்பம், அன்னதானம்பேட்டை, கேசவநாராயணபுரம், இடங்கொண்டம்பட்டு, ஆயிக்குப்பம், ரங்கநாதபுரம், குள்ளஞ்சாவடி, சமுட்டிக்குப்பம், கீரப்பாளையம், வழுதம்பட்டு, பெரிய காரைக்காடு, சங்கொலிகுப்பம், ராசாப்பேட்டை, நொச்சிக்காடு, ரெட்டியார்பேட்டை, திருச்சோபுரம், பெரியக்குப்பம், காயல்பட்டு

நாகை மாவட்ட கிராமங்கள்...

கொடியம்பாளையம், பழையாறு, தாண்டவன்குளம், புதுப்பட்டினம், புலியந்துறை, மகேந்திரபள்ளி, நாணல்படுகை, முதலைமேடு, நாதல்படுகை, ஆச்சாள்புரம், அனுமந்தபுரம், கொள்ளிடம்

குறிப்பு: இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஊர்கள் விவரத்தை வெளியிடவில்லை. எனினும், CY-ONHP-2017/1 திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தின் அட்சரேகை - தீர்க்கரேகை (GPS) குறியீடுகளில் இந்த கிராமங்களும், ஊர்களின் கடலோரமும் உள்ளன.

வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனம்...

வேதாந்தா நிறுவனத்திற்கு இரண்டு பகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. முதலாவது பகுதி (CY-OSHP-2017/1) பரப்பளவு 1794 சதுர கிலோமீட்டர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி, கடலூர் மாவட்டம் பிச்சாவரம் வரை கடல் பரப்பில் 123 இடங்கள் உள்ளன.

இரண்டாவது பகுதி (CY-OSHP-2017/1) பரப்பளவு 2574 சதுர கிலோ மீட்டர். கடலூர் மாவட்டம் பிச்சாவரம் தொடங்கி நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை கடல் பரப்பில் 47 இடங்கள் உள்ளன.

பசுமைத் தாயகம்
நிறுவனர்: மருத்துவர் ச. இராமதாஸ்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.