17/10/2018

சித்தர் ஆவது எப்படி - 14...


மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை...

ஆதியும் அந்தமும் இல்லா ஆண்டவன் இறைவன், அடிமுடி காணமுடியாத இறைவன், உலகளந்த உத்தமன் என்றெல்லாம் வர்ணிக்காத, போற்றி புகழாத மத நூல்களே இல்லை..

ஆனால் அப்படியான தோற்றத்திற்கு புலப்படாத, புலப்படமுடியாத இறைவனை, ஒரு தோற்றத்திற்கு கொண்டு வந்து, தொழுவதும் பிரார்த்தனை செய்வதும், ஒரு முறையற்ற செயல் என்பதும் அதுவே ஒரு மிகப் பெரிய ஒழுங்கற்ற செயல் என்பதும் இன்றைய கால கட்டத்தில் மனிதன் உணரவே முடிவதில்லை..

எல்லா மதங்களும், கடவுளை மறுக்கும் புத்த மதம் உள்பட ஏதோ ஒரு தோற்றத்தை மையப் படுத்திதான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன..

அப்படி இயங்காத ஒரு கோட்பாட்டை உடைய ஒரு மதத்தை உலகில் ஒருவரேனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..

இந்த சூழ்நிலையில் அறியாதவர்களுக்கு முதலில் இப்படி தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் கடவுளை பற்றிய மிக பெரிய ஒழுங்கின்மையை மையப் படுத்தி உருவநிலைகளில் ஆரம்ப நிலையிலே வேர் ஊன்றியவர்கள் மிக பெரிய பிரமாண்டமான கோவில்களையும் சர்ச்களையும் மசூதிகளையும் கட்டி அதை நிர்வாகிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கி விட்டனர்..

அதனால் பிழைத்து கொண்டு இருப்பவர்கள், தங்கள் பிழைப்பு எங்கே கெட்டு விடுமோ என்ற அச்சத்தில், தங்கள் ஒழுங்கின்மையை, எந்த வகையிலாவது நியாயப் படுத்தவே முயற்சி செய்வார்கள்..

இந்த சூழ்நிலையில் இறைவனின் உண்மை நிலையாகிய தோன்றா நிலை பற்றிய கருத்து முற்றிலுமாக மறந்து விட்ட ஒன்று மட்டும் அல்ல, முற்றிலுமாக மறுக்கப் பட்ட ஒன்றாய் போய் விட்டது..

இன்றைய கால கட்டத்தில் தோன்றா நிலையின் முக்கியம், சற்று பண்பட்டவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்து கொள்ளவோ, அறிந்ததை ஏற்றுக்கொள்ளவோ, குறைந்த பட்சம் அப்படி அறிந்ததற்கு எதிராக பேசாமல் இருக்க, முடியாத சூழ் நிலையே இன்று எங்கும் உள்ளது..

அப்படியே வாசியோகத்திலும்
தோன்றா நிலையை உணர வைக்க முற்பட்ட சித்தர்களின் முயற்சிகளை எல்லாம் நாசப் படுத்தி, அங்கும், ஆறு அல்லது ஐந்து சக்கரங்கள் என்ற தோன்றும் ஒரு மாயை ஒன்றை உருவாக்கி, தோன்றா நிலையை உணர்விலே தோற்று விக்காமலே செய்து விட்டனர்...

சித்தர்களை ஒரு வகையில் பித்தர்களாக்கி விட்டனர்..

அந்த தோன்றா நிலையிலே உணரப் படும் இறை ஆற்றலுக்கு இணையான ஒன்று இந்த பிரபஞ்சத்திலே எதுவும் இல்லை..

ஆற்றல் இன்றி ஒரு துரும்பும் அசையாது என்பதை உணர்ந்த பின் அதுவும் அந்த தோன்றா நிலையில் மட்டுமே கிடைக்கும் என்பது ஒரு நிலையான சத்தியம்..

தோன்றா நிலையில் மட்டுமே எல்லை கடந்த நிலையில் இருக்கும் அந்த இறைவனை அதே எல்லை கடந்த நிலையில் நாம் இருக்கும் போது உணர முடிந்து, அவனிடமிருந்து பேராற்றலை நாம் பெற முடியும்..

அவன் என்றால் தோற்றத்திற்கு வராத பிரபஞ்ச பேரண்டமே..

வேறு எந்த வகையிலும் அந்த ஆற்றலை பெற வேண்டிய அளவிற்கு பெற முடியாது..

அந்த தோன்றா நிலை ஒரு புரியாத நிலை தான்.. அது சதா உருவங்களிலே பழகி விட்ட மனதிற்கு மட்டுமே என்றும் புரியாத நிலை..

ஆனால் உணர்வாகிய புத்திக்கு அது உணர்வின் வழியாக புரியக் கூடிய ஒன்று..

ஆகவே புத்தி சொல்லுவதை மனம் ஏற்றுக் கொள்ளும் போது மனம் அந்த தோன்றா நிலையை, புரியாத ஒன்றை புரியாததாகவே ஏற்றுக் கொள்கிறது..

மனம், புரியாததை புரியாததாகவே ஏற்றுக்கொள்ளும் போது, தன்னை கடந்து செல்ல அனுமதிக்கின்றது..

அப்படி புத்தியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளாத மனம் புரியாததை புரியாததாகவே ஏற்றுக் கொள்ளாமல், மனிதனை மனம் தாண்டிய புத்தி நிலைக்கு அனுமதிக்காது..

ஆகவே தான் தோன்றா நிலையில் பிரபஞ்ச ஆற்றலை உணர்வாக அதாவது கனலாக பெற வேண்டிய அவசியம் ஆகிறது..

அந்த அனுபவத்திற்கு பிறகே மனம், ஒருவனை தன்னை கடந்து, புத்தி என்ற பூத நிலைக்கு செல்ல அனுமதிக்கும்..

மனம் தன் தோற்றப் பிடிப்பினை தளர்த்தி, புத்திக்கு வழி விடும்..

தோன்றா நிலையில் மட்டுமே புத்தியும் அறிவும் திறம் பட இயங்கத் தொடங்கும்...

ஆகவே நினைப்பு என்ற தோற்ற நிலையிலிருந்து, உணர்வு என்ற தோன்றா நிலைக்கு வரவேண்டியது மிக பெரிய இரகசியமாக கொள்ள வேண்டும்...

சித்தர்கள் உருவ வழிபாடுகளை கடந்து சென்றவர்கள்..

கடந்தவர்கள் என்றால் உருவ வழிபாட்டில் இருந்து அனுபவப் பட்டு பின் மேற் கொண்டு மேல் அனுபவ பெற தோன்றா நிலைக்கு செல்ல உருவ வழிபாட்டை விட்டவர்கள்..

வள்ளலார் போன்றவர்களே நம் சித்தர்கள்..

உருவ வழிபாட்டை தாண்டி செல்பவர்கள் ஒரு போதும் தோன்றா நிலைக்கு செல்ல முடியாது என்பது மற்றொரு இரகசியம்...

தோன்றா நிலை சூரிய கலை என்றால் தோன்றும் நிலையாகிய உருவ வழிபாடு சந்திர கலை..

ஒரு கலை இல்லையென்றால் மற்றொரு கலையும் இல்லாமல் போய் விடும் என்பதை மறக்கக் கூடாது...

தோன்றும் நிலையில் சிக்குண்டு இருப்பது மன்னிக்க முடியாத ஒழுங்கின்மை.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.