24/06/2018

தன்னைபோல் யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது - சம்பாதித்த பணத்தை கல்விக்காக செலவு செய்யும் மாற்றுத்திறனாளி...


வசதி வாய்ப்பாக இருக்கும், உடல்நிலை நன்றாக இருக்கும் நம்மில் பலரே அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை. ஆனால், மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் தான் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலைக்குப் போய் சம்பாதித்த 7,000 ரூபாய் பணத்தில் பேனாக்கள் வாங்கி அதை தனது பகுதி சார்ந்த குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வழங்கி அதிசயிக்க வைத்திருக்கிறார். 'தன்னைப் போல் யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது' என்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு பேனா வழங்கியதாக குறிப்பிடுகிறார் அவர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் கள்ளப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகராஜன். மாற்றுத்திறனாளி இளைஞரான இவர், சமூக நோக்கம் கொண்ட மனிதர். மாதம் முழுக்க சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து வைத்து, சாப்பாட்டுக்குப் போக மீதமுள்ள பணத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில்தான், நூறுநாள் வேலைக்குப் போய் தான் சம்பாதித்த பணம் 7,000 ரூபாயில் பேனாக்கள் வாங்கி அவற்றை கள்ளப்பள்ளி, லாலாப்பேட்டை பகுதிகளில் வீடு வீடாக வழங்கி அசத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில் ``எனக்குச் சின்ன வயதில் நல்லா படிக்கனும்ன்னு ஆசை. ஆனா, ஊனமா பொறந்த என்னை எங்க வீட்டுல யாரும் கண்டுக்கலை. 'நான் நல்லா படிக்கனும்'ன்னு சொன்னதுக்கு, 'நீயே ஒரு சுமை...உனக்கு படிப்பு ஒரு கேடா?'ன்னு என்னை நோகடிச்சாங்க. வெறுப்பா ஆயிடுச்சு. மனசு முழுக்க ரணமாயிட்டு. அந்த கோபத்துலேயே சின்ன வயதிலேயே வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். அதில் இருந்து சொந்தமா வேலை செஞ்சு காலத்தை ஓட்டுறேன். அதோடு, அப்துல்கலாம் அறக்கட்டளை என்ற பெயரில் பொதுநல அமைப்பை ஆரம்பித்து, மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து தீர்க்க வைக்கிறேன். அதோடு, கூலி வேலைக்குப் போய் அதில் கிடைக்கும் பணத்தில் எனக்குத் தேவையானது போக மீதமுள்ள பணத்தில் மாணவர்களுக்கு உதவுறேன். 'நல்லா படிக்க முடியலையே'ங்கிற ஏக்கம் இன்னமும் மனசுல வடுவா இருக்கு. என்னை மாதிரியான நிலைமை இந்த பகுதி மாணவர்களுக்கு வந்துவிடக்கூடாதுங்கிறதாலதான் அவர்களுக்கு என்னாலான உதவிகளை பண்றேன்" என்றபோது, அவரது வார்த்தைகளில்,' படிக்கலையே' என்கிற ஆதங்கம் அப்பட்டமாக தெரிந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.