216 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 31) பண்டார வன்னியன் துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டான்.
பண்டார வன்னியன் வழியில் போரிடுகிறோம் - மேதகு வே.பிரபாகரன்..
முள்ளிவாய்க்கால் இறுதிகட்ட போரின் நாட்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார்...
விடுதலைபோராட்டத்தில் ஒருவேளை நாங்கள் தோற்றுப்போகலாம். ஆனால் நாங்கள் விட்டுச்செல்லும் வாள், ‘கூர்மையானதாக’ விட்டுச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் பண்டார வன்னியன் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடினான். அவன் காட்டிய வழியில் நாங்கள் போரிடுகின்றோம். எங்களால் முடியாவிட்டால் நாளை இன்னொரு சந்ததி வரும். அது எமது போராட்டத்தினைத் தொடர்ந்து கொண்டுசெல்லும்.” என்றார் பிரபாகரன்.
வன்னி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடங்காத சுதந்திர பூமி...
தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவர்கள் ஈழத்து வன்னிய அரசர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட அக்கபோதிமன்னன் காலத்திலேயே வன்னியர்கள் வன்னியை ஆண்டுள்ளனர் என சில ஆய்வுகள் கூறுகின்றனர். சோழர்கள் காலத்தில் வன்னியர்கள் ஈழத்துக்கு வந்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. வன்னி பெருநிலத்தில் வன்னியர் ஆட்சி, 1803 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீண்டிருந்தது.
அன்னியருக்குக் கட்டுப்படாமல் மிகநெடுங்காலம் வன்னிய ஆட்சி நீடித்ததால், அப்பகுதி அடங்காப்பற்று என்று அழைக்கப்பட்டது. போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என எல்லா அன்னியர்களையும் முறியடித்த மாவீரர்கள் வன்னியர்கள். (விடுதலைப் புலிகளின் ஈழப்போர் கடைசிவரை நீடித்திருந்ததும் வன்னியில்தான்).
1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.
டச்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும் வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் பண்டாரவன்னியன். ஆயிரமாண்டு வன்னிய அரசப் பாரம்பரியத்தின் கடைசி மன்னர். இவரது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்.
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.
1782-ல் வன்னியை கைப்பற்ற டச்சுக்காரர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் வன்னியர்களைப் போன்று இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை”
வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி லெப். வொன் டெரிபோர்க்கினால், இதே நாளில் 31.10.1803 அன்று தோற்கடிக்கப்பட்டான்.
பண்டார வன்னியன் கொலை செய்யப்படவில்லை..
பண்டார வன்னியன் நினைவு நாள் "1803 ஆகஸ்ட் 25" என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஏனெனில், முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளும் ஆகும்!
பண்டார வன்னியன் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை. பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவன் இறந்த நாள் (அக்டோபர் 31) என்று கணக்கிடுகின்றனர். ஆனால், 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில், பண்டார வன்னியனின் வரலாறும் பிரபாகரனின் ஒன்றாக இருப்பது வியப்பானதாகும்.
அழிகப்படும் வன்னியின் வரலாற்று அடையாளம்...
இலங்கை அரசு வன்னியர்களின் வரலாற்று இடங்களை முஸ்லிம்களுக்கு அளிக்கத்தொடங்கியிருக்கிறது. இது ஈழத்தின் வரலாற்றை சிதைக்கும் முயற்சி ஆகும்.
தமிழீழத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழர்களாக கருதப்படுவது இல்லை. விடுதலைப் போரின் போது 1990 ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1000 முஸ்லிம் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்களை வெளியேறும் நிலை ஏற்பட்டது தவறு என்று பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு, முஸ்லிம்களை மீண்டும் வருகை தருமாறு அழைத்தனர். பின்னர் போரினால் எல்லாம் சின்னபின்னம் ஆனது.
இப்போது, முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் நடக்கின்றன. ஆனால், கரைதுறைப்பற்று எனும் பிரிவில் மட்டும் 1032 குடும்பங்கள் தாங்கள் விட்டுச்சென்ற இடத்துக்கான ஆதாரங்களை அளித்ததன் அடிப்படையில் அவர்களது பழைய நிலம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 1455 குடும்பங்கள் நிலமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு - அவர்களுக்கு புதிய நிலத்தை அளிக்கும் பணியை அரசாங்கம் செய்கிறது. இதற்கு மேலும் 448 குடும்பங்கள் புதிதாக நிலத்தைக் கோரியுள்ளன.
ஆக மொத்தத்தில், 1990 ஆம் ஆண்டில் 1000 குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேறிய நிலையில் - இப்போது கரைதுறைப்பற்று என்கிற ஒரு பகுதியில் மட்டும் சுமார் 3000 குடும்பங்கள் உரிமை கோருகின்றனர். அவர்களில் சுமார் 2000 குடும்பங்கள் புதிதாக நிலம் கோருகிறார்கள். இதற்காக வன்னிக்காட்டை அழித்து, புதிய நிலத்தை அளிக்கிறது இலங்கை அரசு.
இவ்வாறு முஸ்லிம்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நிலங்களில் ஒரு பகுதி 'வன்னியன் மேடு' என்கிற இடம் ஆகும்! வன்னியர்கள் 'அடங்காபற்று முள்ளியவளை வன்னியர்கள் என்றுதான் அழைக்கப்பட்டனர். அவர்களது ஆதிக்கம் மிகுந்திருந்த பகுதிதான் இப்போது முஸ்லிம்களுக்கு அளிக்கப்படுகிறது.
வன்னியன் மேட்டு பகுதியில்தான் பண்டார வன்னியன் தனது படைகளை நிறுத்தியிருந்தார். இதே காட்டுப்பகுதிக்கு படையெடுத்து வந்த வொன் டெரிபோர்க் என்ற ஆங்கிலேய படைத்தளபதியை பண்டார வன்னியனின் தளபதி குலசேகரன் கைது செய்தார். தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட வொன் டெரிபோர்க்கை - பண்டார வன்னியன் மன்னித்து விடுதலை செய்த இடம்தான் வன்னியன் மேடு. பின்னாளில் அதே வொன் டெரிபோர்க் தான் பண்டார வன்னியனை தோற்கடித்தான்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வன்னியன் மேடு பகுதியை, முஸ்லிம்களின் குடியேற்றப் பகுதியாக மாற்றி வருகிறது இலங்கை அரசு.
இந்த வரலாற்று அழிப்பு தடுக்கப்பட வேண்டும்...