2018 ஜனவரி - இந்திய நீதித்துறையின் வரலாற்றிலேயே இல்லாதபடி, நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமாகிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நான்கு பேர் பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டி, நீதித் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்துப் புகார் சொல்கிறார்கள். அமித் ஷா சம்பந்தப்பட்ட சோராபுத்தீன் கொலை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மரணமும் (கொலையும்), வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தன்னிச்சையான போக்கும் அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களில் அடங்கும். அந்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகோய் ஒருவர்.
2018 ஜூன் - ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதி ஆகிறார்.
2019 ஏப்ரல் - உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், 2018 அக்டோபர் 10-11 தேதிகளில் ரஞ்சன் கோகோய் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டுகிறார். அவர் வேலை நீக்கம் செய்யப்படுகிறார். தில்லி போலீசில் பணியாற்றி வந்த அவருடைய கணவரும், மைத்துனரும் கவைக்குதவாத காரணம் காட்டி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். அந்தப் பெண்ணின் இன்னொரு மைத்துனர் உச்சநீதிமன்ற நீதிபதியின் தனியுரிமைப்படி அக்டோபர் மாதம் நீதிமன்றப் பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தார், அவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டார். கடைசியாக, அந்தப் பெண் லஞ்சம் வாங்கினார் என்று ஒரு குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதுபோல குற்றச்சாட்டுகள் எழுந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் அல்லாதவர்களைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், கோகோய் தானாகவே ஒரு குழுவை நியமிக்கிறார். அதில் அவரும் பங்கேற்கிறார்.
2019 மே - அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவரே நியமித்த குழு, பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரிக்காமலே அவர் மீது தவறு இல்லை என்று சொல்லி விடுகிறது. அந்தக் குழுவுக்கு தலைமை வகித்தவர் நீதிபதி போப்டே. அவர்தான் பிற்பாடு கோகோய்க்குப் பிறகு தலைமை நீதிபதி ஆகிறார். நாக்பூரில் பாஜக தலைவர் ஒருவரின் ஹார்லே பைக்கை இரவல் வாங்கி உட்கார்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாக சர்ச்சை ஆனதே, அதே போப்டேதான் இவர்.
2019 மே-நவம்பர் - இந்த சம்பவத்திற்குப் பிறகு கோகோய் ஓய்வு பெற்ற நவம்பர் 17ஆம் தேதிக்கு இடையில் முக்கியமான பல தீர்ப்புகளை தலைமை நீதிபதி கோகோய் வழங்குகிறார். குறிப்பாக, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் அவரும் பங்கேற்ற பெஞ்சுகள் முக்கியமான தீர்ப்புகளை வழங்கின. அவற்றில் குறிப்பிடத் தக்கவை —
நவம்பர் - அயோத்தியில் பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரிய இடம் ராமருக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதான் வழக்கு. இடம் ராமருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளித்ததுடன் நில்லாமல், ராமர் கோயிலைக் கட்டுவதற்கு மூன்று மாதங்களுக்குள் ஒரு டிரஸ்ட் உருவாக்க வேண்டும் என்றும் அந்த பெஞ்ச் தீர்ப்பளித்தது.
நவம்பர் - ரஃபேல் ஊழல் குறித்தான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. 2018இல் ரபேல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டபோது, அரசு தவறான தகவல்களை முன்வைத்திருந்தது என்பதால், மீள் விசாரணை தேவை என்று பிரசாந்த் பூஷண், முன்னாள் பாஜக தலைவர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கோரியிருந்தனர். அனைத்தையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
கஷ்மீரில் 370 பிரிவை செல்லாது என அறிவித்த மோடி அரசு, கஷ்மீரின் அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாரையும் கைது செய்தது அல்லது வீட்டுக் காவலில் வைத்தது. அங்கே என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாத நிலை. தனது கட்சி எம்எல்ஏ குறித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யச்சூரியும் மற்றொரு மாணவரும் தொடுத்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவை விசாரித்த கோகோய் நீதிமன்றம், தலைவர்களை கைது செய்து வைத்திருப்பது சரியா தவறா என விசாரிக்க மறுத்து விட்டது. சீதாராம் யச்சூரி வேண்டுமானால் கஷ்மீருக்குப் போய் அவரை சந்திக்கலாம். ஆனால் சந்திப்பைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடாது என தீர்ப்பளித்தது. ஹேபியஸ் கார்ப்பஸ் என்பதே ஆள்கொணர்வு மனுதான். சம்பந்தப்பட்ட நபரைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆனால் கோகோய் நீதிமன்றம் விந்தையான தீர்ப்பளித்தது.
அசாமில் என்ஆர்சி நடைமுறைப் படுத்த உத்தரவிட்ட பெஞ்சில் கோகோய் முக்கியமானவர். அசாமின் என்ஆர்சியில் சுமார் இருபது லட்சம் பேர் விடுபட்டு விட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள். அவர்களைப் பாதுகாக்க - முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை தருவதற்கு மோடி அரசு உருவாக்கியதுதான் சிஏஏ.
பண மசோதா - ஒன்றிய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் முன்வைக்க வேண்டும். ஆனால், ஒரு சட்டம் பண மசோதாவாக (மனி பில்) முன்வைக்கப்பட்டால், மாநிலங்களவையின் ஒப்புல் தேவையில்லை. மத்தியில் ஆளும் கட்சி, மாநிலங்களவையில் தனக்கு மெஜாரிட்டி இல்லை என்கிறபோது, எந்தவொரு சட்டத்தையும் பணமசோதாவாக முன்வைத்து நிறைவேற்றிக் கொள்கிறது. ஆதார் அட்டை விவகாரமும் பணமசோதாவாகவே நிறைவேற்றிக் கொண்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற பெஞ்ச் 2018இல், பணமசோதாவாக நிறைவேற்றியதில் தவறில்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பண மசோதா விவாகரத்தை இன்னும் பெரிய பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று ஒத்தி வைத்து விட்டது. (இன்றுவரை அதன் கதி என்னவென்று தெரியவில்லை.)
ஆக, கோகோய் தலைமை நீதிபதியாக இருந்தவரையில், மோடி அரசுக்கு, பாஜகவுக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்கி வந்தார். அதற்குப் பரிசாக, அவர் ஓய்வு பெற்றதும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பதவிகளில் அமர்த்தப்படுவதை விமர்சித்த அதே கோகோய், ஓய்வு பெற்ற பிறகு வெட்கமே இல்லாமல் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
இதெல்லாம் பழைய கதைகள். இப்போது எதற்கு என்று கேட்பீர்கள்.
பிகாசஸ் உளவு விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்ட தொலைபேசி எண்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அதில் கோகோய் மீது குற்றம் சாட்டிய பெண், அவரது உறவினர்களின் எண்களும் இருந்துள்ளன. அவர் குற்றம் சாட்டிய அடுத்த சில நாட்களில் அவருடன் தொடர்புடைய 11 எண்களும் உளவுபார்க்கப்பட்டுள்ளன.
(ஒரு நீதிபதியின் எண்ணும் உளவுபார்க்கப்பட்டுள்ளதாகத் தகவல். கோகோய்தானா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை.)
2018இல் நீதித்துறை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்த கோகோய், 2019இல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, மோடி அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததையும், அதே காலத்தில் இந்தத் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ......