அந்தமான்-நிக்கோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,
வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%
1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்.
அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான் நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது.
ஐந்தாண்டுத் திட்டம் போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210,
உணவுக்கு ரூ70,
வீடுகட்ட ரூ800,
மாடு வாங்க ரூ700,
பண்டங்கள் வாங்க ரூ180,
விதைகள் வாங்க ரூ100
என வாரிவழங்கியது ஹிந்திய அரசு.
(அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்று வரை தரப்படவில்லை).
1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது.
இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்.
ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்.
அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்.
இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது.
அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது.
பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன.
வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது.
தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்.
வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக, சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும் இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்.
தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன.
1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்த போது அப்போது பெரும் பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை.
1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா (எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது..
உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்.
அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்.
தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை
வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன.
இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது.
இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
அந்தமான்-நிகோபரில் தமிழர்:
'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்.
சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்த போது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது.
நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்.
முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக் கொண்டு வந்த உண்மை,
அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனின் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன.
தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான் நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.
1895ல் ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்.
ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்.
அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது
(திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல)
1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்.
இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.
(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)
தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:
அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது.
தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை.
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்.. பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்) அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்.
தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை.
பிழைத்துதான் வருகின்றனர்.
அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன, இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து வருவதெல்லாம் அழிவைத்தான்.
வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்.
ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.
ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்.
வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக் கொண்டுள்ளது.
ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை.
தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
தமிழீழம் - தமிழகம் - அந்தமான்- நிக்கோபர்... ஆகியவை தமிழர்களுக்கான நாடு என்பதை மறந்து விட வேண்டாம்...