19/01/2019
தமிழ்மொழி மீட்புப் போராளி ப.சீவானந்தம் நினைவு நாள் - 18.1.1963...
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி களான தமிழர்களின் ஆதி புராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீய, ஆரிய, கிரேக்க, இலத்தீன், மெக்ஸிக்கன், பெருவியன் மொழிகள் வழக்கொழிந்து போய் விட்டன. அத்துணைத் தொன்மையான தமிழ் மொழி இன்னும் உயிரோடு கன்னித் தமிழாக விளங்குகிறது.
மொழியை முதலாளி மொழியன்றோ, தொழிலாளி மொழியன்றோ எந்த ஒரு வர்க்கமும் தனி உரிமை கொண்டாட முடியாது. மொழி சமுதாய மக்களின் ஒவ்வொரு துளிக்கும் முழுக்கடலுக்கும் சொந்தம்.
எந்த மொழியும் ஒரு தனி வர்கத்தின் கருவியல்ல.
சமுதாய மக்கள் பரஸ்பரம் சகல விதத்திலும் ஈடுபாடு கொள்வதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் இன்றியமையாத கருவி மொழி.
புதிய புதிய சமூக அமைப்புகள் தோன்றும் பொழுது, புதிய புதிய உற்பத்தி முறைகளும், ஒட்டுறவுகளும், ஆட்சி அமைப்புகளும், வாணிபப் போக்குகளும், பண்பாட்டு வெளியீடுகளும், இன்னோரென்னவைகளும் தோன்றும். மொழி இவைகளை எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். மொழி அல்லது சொல்லகராதி சர்வசதா மாறுதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற தொழிலும், விவசாயமும், வர்த்தகமும், போக்குவரத்தும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் தாங்கள் செயல்படும் பொருட்டுப் புதிய சொற்களாலும், வெளியீடுகளாலும் ஒவ்வொரு மொழியும் சொல்லகராதியைப் பெருக்கிச் செழிப்படையச் செய்ய வேண்டுமென்று தேவைப்படுகின்றன. தேவைக்குத் தக்கபடி வேர்ச்சொல் தொகுதியைப் பெருக்கவோ சொல்லகராதியை வளப்படுத்தவோ கொஞ்சமும் தயக்கம் காட்டுதல் கூடாது.
இவ்வாறு செய்தால்தான், எந்த மொழியும் சமுதாயத்தின் சகல ஈடுபாடுகளுக்கும், உறவு முறைகளுக்கும் பயன்படும். அவ்வாறு பயன்படாத மொழி அழிந்தொழிந்து போகும்.
அன்றிருந்த தமிழர்கள் அன்றைய நிலைமைக்குத் தக்கபடி சொற்களை உற்பத்தி செய்தனர். அதே போல் இன்றையத் தமிழர்களும் இன்றைய வளர்ச்சிக்குத் தக்கபடி தமிழில் சொற்களை உற்பத்தி செய்ய முடியும். சிறந்த வேர்ச்சொல் தொகுதியும் அற்புதமான இலக்கண முறையும் கொண்டது நமது தாய்மொழியாம் தமிழ்மொழி.
டாக்டர் நீரா.சீனிவாசன் போன்ற புதிய புதிய எழுத்தாளர்கள் சகல விஞ்ஞான உண்மைகளையும் தமிழில் கூற முடியுமென்று முன் வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண யந்திரத் தொழிலாளியிடம் பேசிப்பார்த்தால் அவன் நவீன தொழில் முறை நுட்பங்களைத் தமிழில் அனாயாசமாக வெளியிடுவதைப் பார்க்கலாம். எத்தகையப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் தமிழில் பேசவும் எழுதவும் வல்லார் எண்ணிக்கைத் தமிழர்களிடையில் பெருகி வருகிறது.
சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் மட்டுமல்ல, அண்மையில் வளர்ச்சியடைந்த உக்ரேனியன், பைலோரஷ்யன், எஸ்டோனியன், லாட்வியன், லிதுவேனியன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்ல, மத்திய ஆசிய மொழிகளான உஸ்பெக், காஷக், அர்மேனியன், தாத்தார், அஜர்பைஜான், பாஷ்கீர், டாக்மென் மொழிகளிலும் சகல பொருள்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.
தமிழ் நாட்டில் தேசியக்கல்வி நடைபெற வேண்டுமாயின் அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ்பாசையில் நடத்த வேண்டும் என்பது பொருள் என்று பாரதி 'தேசியக் கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.. என்று பாரதி தமிழ் மக்களை அழைக்கிறார்.
- ப.சீவானந்தம்.
- 14.4.1962இல் சீவானந்தம் எழுதியது...
பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்...
புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும்.
பித்தத்தைக் குறைக்கும்
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்...
மெரினாவில் காணாமல் போன கணவன்கள், மனைவிகளால் பரபரப்பு...
காணும் பொங்கலைக் கொண்டாடுவதற்காக சென்னை மெரினாவில் லட்சக் கணக்கானோர் திரண்டனர். இந்த சமயத்தில்தான் உழைப்பாளர் சிலை அருகே இருந்த காவல் உதவி மையத்தில் தொடர்ச்சியாக வந்த சில புகார்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தன. கணவன்களைக் காணவில்லை என்று மனைவிமார்களும் மனைவிகளைக் காணவில்லை என்று கணவன்மார்களும் தொடர்ந்து புகார் கொடுத்தவண்ணம் இருந்தனர்.
அதாவது 12 பெண்கள் தம்முடைய கணவன்களைக் காணவில்லை என்றும், 9 கணவன்கள் தமது மனைவிகளைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்க போலீசாரே அதிர்ந்தனர். பிறகு காணாமல் போன ஒவ்வொருவரின் பெயராக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருந்தனர் போலீசார். அவர்கள் அறிவிக்க அறிவிக்க காணாமல் போன ஒவ்வொருவரும் காவல் உதவி மையம் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
ஒருவழியாக காணாமல்போன கணவன்களையும் மனைவிகளையும் கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறை அவர்களின் பெயர்களை பதிவு செய்துகொண்டதோடு அறிவுரையும் கூறி அனுப்பினர். இதேபோல் காணாமல் போன 11 சிறுவர், சிறுமிகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வருடா வருடம் காணும் பொங்கலால் களைகட்டும் மெரினா கடற்கரை இந்த வருடம் காணாமல் போனவர்களால் பரபரப்பில் மூழ்கியது...
மனம்...
பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.
அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.
வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.
புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.
ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.
ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.
நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.
ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.
மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.
மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.
மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.
முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும். வேறு வழியே இல்லை...
அரச மரத்தின் வேரிலிருந்து வெளிப்பட்ட அதிசய சிவலிங்கம்...
பல்லாண்டு காலமாக பரந்து விரிந்திருக்கும் அரச மரத்தின் வேர்களுக்கு இடையே, பழைமைவாய்ந்த சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருக்கிறது. கிராமத்தைக் காக்க சிவபெருமான் திருவுளம்கொண்டு, காட்சி தந்திருப்பதாகக் கருதி, பொதுமக்கள் பக்திப் பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, இளங்கானூர் கிராமத்தில் அரசமரத்தின் வேர்களுக்கிடையே சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது. 3 அடி உயரமுள்ள இந்த சிவலிங்கம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்த லிங்கம் முழுவதும் அரசமர வேரின் அடியில் உள்ளது. இந்த மரத்தைச் சுற்றி கோயில் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிந்த, கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமி, இக்கிராமத்துக்கு வந்து, சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். அப்போது 'விரைவில் வேர்களை அகற்றி, சிவலிங்கத்தை வெளியில் எடுத்து, இங்கு மிகப்பெரிய சிவன் கோயில் கட்டும் திருப்பணி துவக்கப்படும்' என்று அறிவித்திருக்கிறார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், இந்த இடத்தில் கன்னியம்மன் கோயில் இருந்ததாகவும், அருகிலிருந்த ஆலமரம் வளர, வளர கோயில் இடிபாடுகளில் சிக்கி சிதிலமடைந்ததாகவும், அதிலிருந்து 7 செங்கல்லை மட்டும் எடுத்து கன்னியம்மனாக கருதி எங்கள் முன்னோர் வழிபட்டு வந்துள்ளனர். சில நாள்களுக்கு முன் எதேச்சையாக சிவலிங்கம் கண்ணில் பட, நாளடைவில் அதன் மேல் தோற்றம் தெரிய ஆரம்பித்தது. எப்போதோ மறைந்த சிவபெருமான், எங்க கிராமத்தைக் காக்க, தற்போது அருள்புரிய வந்திருப்பதாக கருதுகிறோம். இதைக் கேள்விப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தினம்தோறும் கூட்டம் கூட்டமாக வந்து சிறப்பு வழிபாடு செய்து தரிசனம் செய்கிறார்கள். எங்கள் காலத்தில் சிவபெருமான் காட்சியளித்து இருப்பது பெரும் பாக்கியம். விரைவில் சிவாலயம் கட்டும் பணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம்...
கமல் ஹாசன் ஒரு கன்னட பிராமணன்.. அதாவது திராவிடன்...
கமல் ஹாசன் என்பவர் ஹாசன் என்ற குலப் பட்டப் பெயரைக் கொண்ட கர்நாடகத்தை சேர்ந்த ஒய்சல பேரரசின் வடுக பிராமணர்..
எனவே இவர் தன்னை திராவிடர் என அடையாளப்படுத்துவதில் தவறில்லை...
விசயநகர படையெடுப்பால் ஊடுருவியவர்கள் திராவிடர்கள் அவர்களுக்கும் தமிழர் நாட்டின் தொல் குடியான தமிழகத்தை தாயகமாக கொண்ட தமிழருக்கும் எந்த தொடர்பும் இல்லை...
தமிழர் முன்னெடுக்கும் தமிழிய தமிழர் ஆளுமையை மட்டும் தான் ஏற்போம்...
இவரின் அரிய சேவையை நீங்களும் வாழ்த்துங்கள்...
திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார்(வயது 70). இவர் பேராவூரணி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
நாள்தோறும் இவருடைய கடையின் முன்பு உள்ள கரும்பலகையில் ஒரு திருக்குறளும், அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பதற்காகவே பலர் இவருடைய கடைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.
நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் தங்கவேலனாரின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை நடந்தது. உலக பொது மறையாக திகழும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது...
கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் டீ வழங்கி வருகிறேன். இன்று (நேற்று) மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு டீ விற்பனை செய்தேன். தமிழக அரசு இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், சில்வர் குவளையில் டீ வழங்கினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். என்று கூறினார்...
இறந்த தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் : சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் வராத சோகம்...
ஒடிசாவில் சாதியை காரணம் காட்டி உதவிக்கு யாரும் முன்வராததால் இறந்த தாயின் உடலை சைக்கிளில் வைத்து இடுகாட்டுக்கு மகன் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் கர்ப்பாபஹல் கிராமத்தில் தன் தாயுடன் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் தாய் இறந்ததை அடுத்து, அவரை நல்லடக்கம் செய்ய அக்கம்பக்கத்தினரை அணுகி உள்ளார். ஆனால், சாதியை காரணம் காட்டி உதவிக்கு அவர்கள் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, தனது சைக்கிளின் பின்புறத்தில் தாயின் உடலை வைத்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்து சென்ற மகன், அருகிலிருந்த வனப்பகுதியில் அவரை நல்லடக்கம் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது. அதில் அந்த சாலையில் பலர் இரக்கமற்ற வகையில் வாகனங்களில் கடந்து செல்லும் அவலத்தையும் காண முடிகிறது...
கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...
1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.
2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
3. கனகச்சிதமாகத் தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.
4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.
5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.
6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.
7. உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.
8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள்.அமைதி தான் ஆற்றல்.
9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.
10. வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத் தான் நடக்கிறது...
Subscribe to:
Posts (Atom)