ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு..
தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.
கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.
திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட கடலோரம் ஒட்டிய சாத்தான்குளம், திருச்செந்தூர், திசையன்விளை பகுதியில் வித்தியாசமான சிகப்பு நிற மண்ணுடன் விரிந்த பகுதிதான் தேரிக்காடுகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வயதுள்ள வளர்ந்த பனைமரங்கள் இப்பகுதியில் அதிகமாக தென்படும்.
தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.
மன்னார் வளைகுடாவை நோக்கி தெற்கு, தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையில் காணப்படும் இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும்.
ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.
அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும்.
தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.
நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.
திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.
ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள்.
தேரிக்காட்டின் மற்ற இடங்களில் முந்திரி செடிகள் அங்கும் இங்குமாக வளர்ந்து இருக்கும். அவ்வப்போது வீசும் பலமான காற்று, மணலை அள்ளி வந்து அந்த முந்திரிச் செடிகள் மீது கொட்டிவிடும்.
அதுபோன்ற நேரங்களில் முந்திரிச் செடியின் மேல் கிளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் காட்சி, சமாதிக் குழியில் இருந்து ஏதோ எட்டிப்பார்ப்பது போன்ற பயங்கர தோற்றத்தைத் தரும்.
இங்குதான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டு மக்கள் போராட்டத்தால் அந்த திட்டம் நிறுத்திவைக்கப்படவில்லை. ஆனால் முடக்கப்படவில்லை. அதன் கோப்புகள் அப்படியேதான் இருக்கின்றன.
இதற்கு மேற்கே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆரல்வாய் கணவாய் மூலம் வருகின்ற காற்று காற்றாடிகளுக்கு மின் உற்பத்தியை பெருக்க உதவியாக உள்ளது. மழைகளும் பெரிதாக இப்பகுதியில் பெய்வதில்லை.
இங்குதான் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைத்து கால்வாய் வெட்டி, திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகள் பாசன வசதிக்கு திட்டமிடப்பட்டது. இந்த மண்ணில் வாழை, கொய்யா, மா, முந்திரி, முருங்கை, போன்ற பணப் பயிர்களும் வளர்கின்றன. இந்த விவசாய பூமிக்கு கிழக்கே கடற்காற்றும், மேற்கே இருந்து மழைக் காற்றும் இந்த பயிர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன.
இந்தத் தேரிக்காட்டில் வரலாற்று ரீதியாக அரேபியர்கள், கிறிஸ்து மார்க்கத்தை பரப்ப வந்த சவேரியர், ஜி.யு. போப், கால்டுவெல் போன்ற ஆளுமைகள் உளவிய மண்ணாகும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக இந்த தேரிக்காடு அமைந்து இருக்கிறது.
ஏறக்குறைய ஒரு பெரிய வட்டமான பகுதிபோல இது காட்சி அளிக்கிறது...