மாணிக்கவாசகர்… இத்தனை வருடங்களுக்குப் பின் நாம் இப்பொழுது அவரைப் பற்றிப் பார்ப்பதற்கு இரண்டுக் காரணங்கள் உள்ளன.
ஒன்று… இவர் வாழ்ந்தக் காலம்.
இரண்டு… இவர் எழுதிய வரிகள்.
முதலில் இவர் வாழ்ந்தக் காலத்தினைப் பற்றிப் பார்ப்போம்.
இவர் காலம் ‘பக்தி இயக்கக்’ காலம்.
பக்தி இயக்கமா அப்படினா? என்கின்றீர்களா. சொல்கிறேன்.
சென்றப் பதிவில் இந்தியா முழுவதும் எவ்வாறு சமணமும் பௌத்தமும் பரவி இருந்தன என்பதனைப் பார்த்தோம்.
கடவுள் இல்லை என்றக் கோட்பாடு தமிழகத்திலும் பரவி இருந்தது.
சைவ வைணவச் சமயங்கள் என்ன ஆகுமோ என்றுப் பலரும் எண்ணிக் கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்தக் காலம் வந்தது.
திடீர் என்று சைவக் கருத்துக்கள் ஒரு எழுச்சியைக் கண்டன. கூடவே வைணவக் கருத்துக்களும்.
இறைவனின் திருவிளையாடல்கள் பற்றியச் செய்தி இங்கும் அங்குமாக கேட்க ஆரம்பித்தன.
இறை பக்தர்கள் ஊர் எங்கிலும் தோன்றத் தொடங்கினர்.
காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், அப்பர், சுந்தரர், திருமூலர் போன்ற நாயன்மார்களும் ஒவ்வொருக் காலத்தில் தோன்றி சைவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.
அதைப் போலவே நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்களும் வைணவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.
தத்துவக் கருத்துக்கள் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடின.
மன்னர்கள் மாறத் தொடங்கினர்.
“கடவுள் இல்லையா… எம்பிரானை உணர்ந்த பின் நான் எவ்வாறு ஐயா அவ்வாறு சொல்லுவேன்… அவனின் திருவிளையாடல்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?… அவனது செய்திகள் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?… பின் எவ்வாறு ஐயா அவன் இல்லை என்கின்றீர்?”
என்று மன்னர்கள் கூற சமணமும் பௌத்தமும் பின் வாங்கத் தொடங்கின.
“உனக்கு தெரியுமா, சோழன் வைணவத்திற்கு மாறி விட்டாராம்… பாண்டியரும் சைவத்திற்கு மாறி விட்டாராம்…” என்று மக்களும் மாறத் தொடங்கினர்.
பக்தி இலக்கியங்கள் முன்பில்லா அளவிற்கு வளர்ச்சி அடைந்தன.
திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் போன்ற நூற்கள் இறைவனை மக்களிடத்துக் கொண்டுப் போய் சேர்த்துக் கொண்டு இருந்தன.
கோவில்களில் தேவாரங்கள், திருவாசகப் பாடல்கள் பக்தியினைப் பறைசாட்டிக் கொண்டு இருந்தன.
மக்கள் இறைவனை உணர்ந்துக் கொண்டு இருந்தனர்.
இறைவன் உணர்த்திக் கொண்டு இருந்தான்.
அத்தனையும் நடந்தது தமிழில்…. தமிழ்நாட்டில்.
தமிழ்நாட்டில் எழுந்த இவ்எழுச்சி இந்தியா முழுவதும் பரவுகின்றது.
சமணமும் பௌத்தமும் இந்த எழுச்சியின் முன் நிற்க முடியாது கரைகின்றன.
இந்தியா மாறுகின்றது…
கடவுள் இல்லை என்ற நிலையில் இருந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலைக்கு.
இந்தக் எழுச்சியின் காலம் தான் பக்தி இயக்கக் காலம் (கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை).
இந்த எழுச்சியைப் பரப்பியது தான் ‘பக்தி இயக்கம்’.
அடடே, இவ்வளவு நடந்து இருக்கு ஆனா நமக்கு எதுவுமே தெரியலையே என்று எண்ணுகின்றீர்களா?
தவறில்லை. இது நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தான்.
ஏனெனில்,
சைவ வைணவ மதங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியப் பகுதியான இந்த பக்தி இயக்கக் காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இருட்டடிப்பா ஏன் என்றுக் கேட்பவர்களுக்கு…
ஏங்க நாங்க சமசுகிருதம் தான் இறைவன் மொழி அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்…. அப்படி இருக்கும் போது ஏன் சைவ வைணவ சமயங்கள் சமசுகிருதத்தில் எழுச்சி பெறாமல் தமிழில் எழுச்சி பெற்றன அப்படின்னு நீங்க கேட்டா நாங்க என்னங்க விடை சொல்றது. கேள்வி கேட்குறது சுலபம்… விடை சொல்றது தான் கடினம்… புரிஞ்சிக்கோங்க..
வடநாட்டில் வடமொழியில் உருவான மதம் என்று சொல்லப்படும் ஒன்று ஏன் தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் எழுச்சிப் பெற வேண்டும் என்றக் கேள்விக்கு வடமொழியின் புகழினைப் பாடுபவர்களிடம் இருந்து விடை இல்லை என்பதே உண்மை.
நிற்க..
சரி… பக்தி இயக்கத்தினை கண்டாயிற்று.
கடவுள் இல்லை என்ற நிலைமை தமிழால் தமிழ் நாட்டில் கடவுள் இருக்கின்றார் என்ற நிலையாய் மாறிவிட்டது.
இப்பொழுது நாம் மாணிக்கவாசகரிடம் மீண்டும் செல்லலாம்.
அவர் சில வரிகளை கூறி இருக்கின்றார்.
அந்த வரிகள் நம் பயணத்திற்குரிய அடுத்தக் கதவினை திறக்கும் சாவிகள்.
பயணிப்போம்…