திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?
வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.
“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.
இந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.
புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அகிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.
திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.
அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..
பேச முடியவில்லை……
சிரிக்க முடியவில்லை………
ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?
முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் (ளு.ழு.டு.வு) சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.
“சிந்திய குருதியால்
சிவந்த தமிழ் மண்ணில்
சந்ததி ஒன்று
சரித்திரம் படைக்க….
முந்திடும் என்பதால்….
முளையிலே கிள்ளிட…..
சிந்தனை செய்தவர்
சிறுநரிக் கூட்டமாய்….
‘இந்தியப்படையெனும்’
பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற…
திலீபனின் உயிரைப்
பறித்திட எண்ணினால்…..
பாரிலே புரட்சி…..
வெடித்திடும் என்று….
வெறியுடன் அவர்களை…..
எச்சரிக்கின்றேன் !”
மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.
இரத்த அழுத்தம் – 80/50
நாடித் துடிப்பு – 140
சுவாசம் – 24
11ஆவது நாள்:
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.
‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.
அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.
“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…
பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம் அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.
இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரை, சாரையாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.
வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.
கடைசி நாள்(12ஆவது நாள்):
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.
இப்படி தமிழர்கள் உயிரை மாய்த்து போராடிய அறவழி போர் மனிதமிழந்த வல்லாதிக்க நாடுகளுக்கு புரியவே இல்லை, திலீபனின் ஐந்து கோரிக்கைகளை இந்தியா மதிக்கவே இல்லை இந்திய அமைதிப்படை தமிழர் இன அழிப்பை நிருத்தவும் இல்லை.
2009திலும் தமிழின படுகொலையை நிருத்தக்கோரி பல தமிழர்கள் அறவழியில் தீக்குளித்து மாண்டனர், அப்போதும் இந்தியா தமிழர்களின் அறவழி போராட்டத்தை மதிக்காமல் சிங்கள வடுகர்களோடு சேர்ந்து தமிழர் இன அழிப்பை மேற்கொண்டது. இன்று வரை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் இந்தியா மற்றும் இலங்கை அறவழிப் போர் புரிந்த மறவர்களின் உயிர் தியாகத்தை அலட்சியப்படுத்தியே வருகிறது.
'திலீபனினை வாட்டி வதக்கி துடிதுடிக்க வேதனையுற்று தேகம் இழைத்து உயிரை குடித்தது தனிதமிழ் ஈழ பசி'
தமிழர்களின் தாகமும் தனித்தமிழ் ஈழம் தான்.
திலீபனின் தம்பிகள் நாம் நம் அண்ணனுக்கு பெரும் படையல் வைப்போம் தமிழ் ஈழத்தால்.
"வலியை கொடுத்தவனுக்கே அதை திருப்பிக் கொடு"
-தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்
'தமிழரின் அறவழிப்போர் கொன்றொழிக்கப்பட்ட நாள் இன்று'