(தமிழர் வரலாறு அமையும் வகை) - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்..
9. தமிழர் வரலாறு அமையும் வகை..
காட்சிப் பொருள், கருத்துப்பொருள் ஆகிய ஒவ்வொன்றற்கும் தனித்தனி வரலாறுண்டு. ஆயின், ஒரு நாட்டின் (National) அல்லது மக்கள் வகுப்பு வரலாறே பொதுவாக வரலாறெனப்படுவது.
அதுவும், மக்கள் வரலாறு, மொழி வரலாறு, அரசியல் வரலாறு, சட்ட அமைப்பியல் வரலாறு முதலியனவாகப் பலதிறப்படும். அவற்றுள், அரசியல் வரலாறே கல்வித் துறையில் வரலாறெனச் சிறப்பாக வழங்குவது.
வரலாற்று மூலங்கள் (Sources of History)
பொதுவாக ஒரு நாட்டு வரலாற்று மூலங்கள் பின்வருமாறு எழுவகைப்படும்:
1. தொல்பொருள்கள் (Antiquities) பழங்காலக் கருவி, ஏனம் (கலம்), கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மாந்தனெலும்பு முதலியன.
2. இலக்கியம் வெட்டெழுத்து (Epigraph), திருமுகம் (Royal letter or order), திருமந்திர வோலைச்சுவடி, நாட்குறிப்பு (Diary), வழிப்போக்கர் வண்ணனை, வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுப் பனுவல்கள் அல்லது பொத்தகங்கள் முதலியன.
வெட்டெழுத்தும் பட்டைப் பொறிப்பு, (சுடுமுன்) களிமட் குழிப்பு, கல்வெட்டு, செப்புப் பட்டையம் முதலியனவாகப் பல திறப்படும்.
3. செவிமரபுச் செய்திகள் (Traditions).
4. பழக்கவழக்கங்கள்.
5. மொழிநூற் சான்றுகள்.
6. நிலநூற் சான்றுகள் (Geological evidence).
7. கடல்நூற் சான்றுகள் (Oceanographic evidence) நிலம், தட்பவெப்பநிலை, பழக்கவழக்கம், தொழில், உணவு முதலியவற்றால் மக்கள் உடலமைப்பும் நிறமும் வேறுபடுவதனாலும், ஒரேயினத்தில் மட்டுமன்றி ஒரே குடும்பத்திலும் நீள்மண்டை (Dolichocephalic), குறுமண்டை (Brachycephalic), இடைமண்டை (Mesaticephalic) என்னும் மூவகை மண்டையர் பிறப்பதனாலும், இங்ஙனமே ஏனை யுறுப்புகளும் நிறமும் இயற்கையாலும் செயற்கையாலும் வேறுபடுவதனாலும், மாந்தன் மெய்யளவியலும் (Anthropometry), குலவரைவியலும் (Ethnography) ஒரு மக்களின வரலாற்றிற்குப் பிற சான்றுகள்போல் அத்துணைத் தேற்றமாகப் பயன்படுவனவல்ல.
தமிழன் பிறந்தகமும் பழம்பாண்டிநாடுமாகிய தென்பெரு நிலப்பரப்பு மூழ்கிப்போனமையால், தொல்பொருளியற் சான்று(Archaeological evidence) இன்று அறவே இல்லாத தாயிற்று.
நீலமலை, ஆனைமலை, சேரவரையன்மலை முதலிய மலைகளிலுள்ள இற்றைப் பழங்குடி மாந்தரெல்லாம், கொள்ளைக்கும் போருக்குந் தப்பிக் கீழிருந்து மேற்சென்றவரே.
அவர் மொழிகளெல்லாம், செந்தமிழ்ச் சிதைவான கொடுந்தமிழுங் கொச்சைத் தமிழுமே யன்றிக் குமரிநாட்டுத் தமிழ் வளர்ச்சி காட்டும் முந்துநிலைகளல்ல. கற்றார் தொடர்பும் நாகரிக மக்களுறவு மின்மையால், மலைநிலத்திற் கேற்றவாறு அவர்களின் வாழ்க்கைநிலை தாழ்ந்துள்ளது. தமிழரின் கற்கால நிலையெல்லாம் குமரிநாட்டிலேயே கழிந்துவிட்டது.
எந்தக் காலத்திலும், நாகரிக மக்கள் வாழும் நாட்டில் அநாகரிக மாந்தரும் வதியலாம்.
நாகரிகம் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், தமிழ்நாட்டு வேட்டுவப் பெண்டிர் தழையுடையும் மலையாள நாட்டுத் தந்தப் புலைமகளிர் கோரையுடையும் அணிந் திருந்தனர். இதனால் தமிழப் பெண்டிர் அனைவரும் அங்ஙனமே அணிந்திருந்தனர் என்று கூறிவிட முடியாது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே, பஞ்சு மயிர் பட்டு நூலால் நூற்றுக்கணக்கான ஆடை வகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டன. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு, சிறந்த ஆடைவகைகளெல்லாம் தமிழகத்தினின்றே மேலை நாடுகட்கு ஏற்றுமதியாயின.
துடவரையும் கோத்தரையும் முந்தியல் (Primitive) தமிழராகக் கொண்டு, நீலமலையைத் தமிழன் பிறந்தகம் போலப் பேரா. எக்கேல் (Haeckel) கூறுவதும், திரு. புரூசு பூட்டு (Bruce foote) தொகுத்த பழம் பொருள்களைக் கற்காலத் தமிழர் கருவிகளுங் கலங்களுமென்று கருதுவதும், இங்ஙனமே ஆதிச்சநல்லூர் முதலிய பிறவிடத்துப் பொருள்களை மதிப்பிடுவதும், தமிழின் தொன்மையறியார் தவறாகும்.
மலைவாழ் குலத்தாரெல்லாம் முந்தியல் மாந்தரல்லர். புதைந்து கிடக்கும் கற்கருவிகளெல்லாம் கற்காலத்தன வல்ல. கடைக் கழகக் காலத்தில் ஓரி, பாரி முதலிய சிற்றரசரும் அவர் படையினரு மாகிய நாகரிக மக்களே பறம்பு, கொல்லி முதலிய மலைகளை அரணாகக் கொண்டு, அவற்றின்மேல் வாழ்ந்திருந்தமையை நோக்குக. தென் மாவாரியில் மூழ்கிக் கிடக்கும் குமரி மாநிலம் மீண்டும் எழுந்தாலொழிய, கற்காலத் தமிழரின் கருவிகளைக் காணமுடியாது. இன்று கிடைக்கும் கற்கருவிகளெல்லாம் பிற்காலத்துக் காடுவாழ் குலங்கள் செதுக்கிப் பயன்படுத்தினவையே.
இனி, பல்துறைப்பட்டனவும் அயற்சொல்லுங் கருத்தும் அறவே யில்லவுமான முதலிரு கழக ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களும், இயற்கையாலும் செயற்கையாலும் அழியுண்டு போனமையாலும்; அவற்றிற்குப் பிற்பட்ட கிறித்துவிற்கு முன்னைத் தமிழ்நூல்களும் ஒன்றிரண்டு தவிர ஏனைய வெல்லாம், சிதலரித்தும் அடுப்பி லெரிந்தும் குப்பையிற் கலந்தும் பதினெட்டாம் பெருக்கில் வாரியெறியப்பட்டும் பல்வேறு வகையில் இறந்துபட்டமையாலும்; முதுபண்டை வரலாற்றிற்கு அக்காலத்து இலக்கியச் சான்றும் இல்லாது போயிற்று.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் இலக்கியம் அனைத்தும் அழியுண்டு போயினும், தொல்காப்பியம், இறையனாரகப்பொருளுரை முதலிய நூல்களிலுள்ள வரலாற்றுக் குறிப்புகள் குமரிநாட்டுத் தமிழர் வாழ்க்கையையும் அந் நாட்டியல்பையும் பற்றியனவாதலால், அவை தமிழரின் முது பண்டை வரலாற்றிற் குதவுவனவே.
தொல்காப்பியம் கி.மு. 7ஆம் நூற்றாண்டு நூலேயாயினும் அதிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் கி.மு. 50ஆம் நூற்றாண்டிற்கு முந்தினவையாகும்.
"முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்"
என்று தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனார் கூறி யிருப்பதோடு, நூல்முழுவதும் "என்ப" "என்மனார் புலவர்" எனச் சார்பிற் சார்பு நூன்முறையில், முன்னூலாசிரியரைத் தொல்காப்பியர் தொகுத்துக் குறித்திருத்தல் காண்க.
உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்னும் உண்மையை, பேரா.
இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள 'தமிழரின் தோற்றமும் பரவலும்' (Origin and Spread of the Tamils) என்னும் நூலிற் கண்டு தெளிக.
தமிழிலக்கணம், தமிழிலக்கியப் பாகுபாடு, தமிழ் மரபு, குமரிநாட்டுத் தமிழர் வகுப்புகள், அவர் தொழில்கள், அவர் மணமுறை, அவர் பழக்கவழக்கம், அக்காலத்து அரசியல், அக்காலப் போர்முறை முதலியன தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ளன.
இறையனா ரகப்பொருளில், முக்கழக வரலாறும், தென்மதுரை கதவபுரம் (கவாடபுரம்) என்னும் பழம் பாண்டிநாட்டுத் தலைநகர்ப் பெயர்களும், கழகப் பாண்டியர் புலவர் தொகையும்; சிலப் பதிகாரத்தில், பஃறுளியாறும் குமரிமலையும் முதற் கடல்கோளும் பாண்டிய ஆள்குடி முன்மையும்; அடியார்க்குநல்லாருரையில்,
முழுகிப்போன பழம்பாண்டி நாட்டு நிலப்பரப்பும், அதன் தென்வட வெல்லைகளும், அவற்றிடைப் பட்ட பல்வேறு நாடுகளும்; புறநானூற்றில் பஃறுளியாறும் அவ் வாற்றையுடைய பாண்டியன் பெயரும்; கலித்தொகையில், இரண்டாங் கடல்கோளும் அதற்குத் தப்பிய பாண்டியன் செய்கையும் குறிக்கப்பட்டுள்ளன.
முதலிரு கழகமும் வரலாற்றிற்கு முற்பட்ட நெடுஞ் சேய்மைக் காலத்தன வாதலின், அக்காலத்துப் புலவர் பெயர்களும் நூற்பெயர் களும் தவறாகக் கூறப்பட்டுள்ளன. குமரிநாட்டின் தொன்மையையும் அந் நாட்டை யாண்ட பாண்டியர் தொகையையும் தமிழின் முன்மையையும் நோக்கின், முக்கழக வரலாற்றிற் குறிக்கப்பட்டுள்ள கால அளவுகள் நம்பத்தகாதனவும் நிகழ்ந்திருக்கக் கூடாதனவும் அல்ல. கடைக்கழகத்திற்குக் குறிக்கப்பட்டுள்ள கால அளவில், இடைக் கழகத்திற்கும் அதற்கும் இடைப்பட்ட காலமும் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.
பஃறுளியா றென்பது திருவாங்கூர் நாட்டிலுள்ள பறளியா றென்றும், அதன் கயவாயில் கடலரிப்பாற் கரைநிலங் கரைந்து போனதையே, இளங்கோவடிகளும் பிறரும் ஒரு தென்பெரு நிலத்தைக் கடல்கொண்டதாகக் கூறிவிட்டன ரென்றும், தமிழ்ப்பகைவரான சில ஆரியர் ஒரு புரளியை உண்டுபண்ணி யுள்ளனர். தென்பாலிமுகம், தென்மதுரை, பன்மலைத் தொடரான குமரிமலை, ஏழேழ்நாடுகள், பிறநாடுகள், குமரியாறு, எழுநூற்றுக் காதவழி முதலிய செய்திகளுள் ஒன்றுகூட அவர் கூற்றால் விளக்கப்படாதிருத்தல் காண்க.
இடைக்கழகத்தில் எண்ணாயிரத் தெச்சம் தமிழ்நூல்கள் இருந்தன என்பது போன்றவை செவிமரபுச் செய்திகள்.
பழக்கவழக்கங்கள் என்பன, இலக்கியத்திற் சொல்லப்பட்டுள்ளனவும் இன்று நடைமுறையிற் காண்பனவுமான பல்துறை மரபுவினைகள்.
தமிழின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு, (சொல்) வளம், தொன்மை, முன்மை, தாய்மை, தலைமை முதலிய நிலைமைகளை யுணர்த்தும் சொற்களும் சொல்லமைப்பும் சொற்றொடரமைப்பும் மொழியியற் சான்றுகளாம்.
பல்வேறு ஊழிகளில், நீர்வினையாலும் நெருப்புவினையாலும் தோற்றமும் மாற்றமுமடைந்த நிலப்படைகளும் பாறைகளும் மலைகளும் நிலநூற் சான்றுகளாம்.
நாடும் நகரும் ஆறும் மலையும் கடற்குள் மூழ்கியிருப்பதும், கடலின் பரப்பும் எல்லையும் ஆழமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வகையில் மாறியிருப்பதும் கடல்நூற் சான்றுகளாம்.
கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட தமிழக வரலாறு, ஆள்குடி (Dynasty) வாரியாகவும், ஆள்நில (Territory) வாரியாகவும் நூற்றாண்டு வாரியாகவும், அரச வாரியாகவும் வெவ்வேறு வரலாற்றாசிரியரால் இயன்றவரை காலக்குறிப்புடன் விளத்தமாக வரையப்பட்டுள்ளது. ஆதலால், கடைக்கழகத்திற்கு முற்பட்டது மக்கள் வரலாறாகவே யிருக்க, பிற்பட்டதே மக்கள் வரலாற்றோடு அரசியல் வரலாறாகவும் அமைதல் கூடும்.
கி. பி. 900-க்கு முற்பட்ட தென்னாட்டுத் தமிழரையங்களின் துல்லியமான காலக்குறிப்போடு கூடிய தூய கிளத்தியல் (Narrative) அரசியல் வரலாற்றை இன்றெழுத வியலாது. இதற்கு மறுதலையாக, துல்லியமான காலக்குறிப்பை நீக்கியமைவோமாயின், திரவிடரின் குமுகாய வரலாற்றைத் தொகுத்து வரைதற்கு வேண்டிய கருவிச் சான்றுகள் பேரளவில் உள்ளன என நம்பு கின்றேன். அத்தகைய வரலாறு, திரவிட இனங்களின் மொழிகளிலும் இலக்கியங்களிலும் பழக்கவழக்கங்களிலும் போதிய அளவு தேர்ச்சிபெற்ற புலவரால் வரையப்பெறின், அது அனைத்திந்திய வரலாற்றாசிரியனுக்கு இன்றியமையாத துணையாயிருப்பதுடன், இந்திய நாகரிக வளர்ச்சி மாணவன் தன் துறைப்பொருளை உண்மையான அமைப்பிற் காணவுஞ் செய்யும் என்று வின்சென்று சிமிது வரைந்திருத்தல் காண்க்.10 அவர் காலத்திற்குப்பின் பல கருவி நூல்கள் வெளிவந்துள்ளமையால்.
இன்று தமிழக அரசியல் வரலாற்றை 7ஆம் நூற்றாண்டினின்று தொடங்குதல் கூடும்.
தமிழ்மொழி, குமரிநாட்டு மாந்தர் தம் கருத்தை யறிவித்தற்கு முதன்முதலாக வாய்திறந் தொலித்த காலந்தொட்டு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வழங்கிவருவதனாலும்; இயற்கையாலும் செயற்கையாலும் சிதைவுண்டு மிக வளங்குன்றியுள்ள இந் நிலையிலும், தமிழரின் கொள்கை கோட்பாடுகளையும் நாகரிகப் பண்பாடுகளையும் மதிநுட்பத்தையும் பேரளவு தெரிவிப்பதனாலும்; எழுவகை வரலாற்று மூலங்களுள்ளும் தலைசிறந்தது மொழியியலே யாம். அதனால், பெரும்பால் அதனையும், சிறுபால் இலக்கியத்தில் ஆங்காங்குள்ள வரலாற்றுக் குறிப்புகளையும், துணைக்கொண்டே இந் நூல் எழுதப்படுகின்றது.
தொடக்கந்தொட்டு இன்றுகாறும் தமிழ்மக்கள் வரலாற்றையே இந் நூல் கூறுவதால், கிளத்தியல் முறையல்லாது வண்ணனை (Descriptive) முறையிலேயே இருக்குமென்றும், நாகரிகக் காலத்திற்கு முந்திய கற்காலச் செய்திகள் சில உத்திக்கும் இயற்கைக்கும் ஒத்த உய்த்துணர்வாகவே யிருத்தல் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.
ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ்க்காலச் செய்திகளைக் கூறும் தனிநிலைக் காண்டம், ஆரியர் வந்தபின் ஆரியச் சொல்லுங் கருத்தும் தமிழிலும் தமிழிலக்கியத்திலும் தமிழர் வாழ்க்கையிலும் கலந்ததைக் கூறும் கலவுநிலைக் காண்டம், ஆங்கிலர் வந்தபின் தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் தமிழர் உள்ளமும் ஆரியக் கலப்பு நீங்கித் தெளிந்ததைக் கூறும் தெளிநிலைக் காண்டம் என முப்பெரும் பகுதிகளைக் கொண்டது இந் நூல்...