இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும்.
ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவமாலையில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
திருக்குறளின் பெருமையை உலகம் அறியும். குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்” என்று பாடினார்.
இதையே ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்’ என்றார் ஒளவையார். அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.
அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி” என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள். ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.
“இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள்” என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது. அதை இறுதியில் காண்போம்.
அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fission) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fission) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.
இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும். பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் “உலகம் அணுக்களால் ஆனது” என்றும் “அணுச் செறிந்த உலகம்” என்றும் எழுதியுள்ளனர்.
இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிற்¢ய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.
ஒரு கடுகில் 2,62,144 அணு!
ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.
8 அணு = ஒரு தேர்த்துகள்
8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
8பஞ்சிழை = ஒரு மயிர்
8 மயிர் = ஒரு மணல்
8 மணல் = ஒரு கடுகு
8 கடுகு = ஒரு நெல்,
8 நெல் = ஒரு விரல்
12 விரல் = ஒரு சாண்
2 சாண் = ஒரு முழம்
4 முழம் = ஒரு கோல்
500 கோல் = ஒரு கூப்பீடு
4கூப்பீடு = ஒரு காதம்
“அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
லச்சாணிரண்டு முழமாம்.”
- செந்தமிழ் தொகுதி 12 P127
70 ஆண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.
திருமூலர் கணக்கு...
உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான்.
ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
100 x 1000 x 100 000=100 000 00 000
அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.
“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே”
-திருமந்திரம்`1974
(சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்)...