தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.
பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.
வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,
''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)
வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.
இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?
கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)
கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.
பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.
''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship
ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்.
''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.
''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.
நாவாய் - NavY - Navy
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.
கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.
தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?