ஒரு அழகான கடவுள் சிலையை உருவாக்க சிற்பி அந்தப் பாறாங்கல்லில் உள்ள சிலையை தவிர்த்த மற்றப்பகுதிகளை பொறுமையாக செதுக்கி நீக்கிவிடுகிறார். நல்ல சிலை உருவாகிவிடுகிறது. அதேபோல் நம்மிடமுள்ள தேவையில்லாத, இருக்கக்கூடாத வினைப்பதிவுகளை (முன்னோர்களால் வந்தது + நாம் சேர்த்துக் கொண்டது) யோகப் பயிற்சிகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிக்கொள்கிறோம்.
முக்கியமான, ஆனால் விடுபட்டுள்ள இயற்கை கல்வியான, நமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்த்தும் கல்வியை யோகாவில் கற்றுக் கொள்கிறோம்.
அதன் மூலம் புதிய பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும், ஏற்கனவே உள்ள பதிவுகளை போக்கி கொண்டும் அமைதி பெறுகிறோம்.
பொதுவாக நாம் நமது பிரச்சனைகளை நமக்கு வெளியே உள்ள மனிதர்கள் மற்றும் பொருள்களின் உதவியால் சரி செய்து கொள்ள முயலுகிறோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும், அதைவிட இன்னொரு முறையான, தவத்தின் மூலம் நம்முள்ளே சென்று, நோய்களும், வேண்டாத குணங்களும் உற்பத்தி ஆவதற்கு மூலமான நம் உயிரின் தன்மையையே மாற்றிக் கொள்வதே சிறப்பு. இதன் மூலம் நிரந்தரமான மாற்றம் உடலில், மனதில், உயிரில் ஏற்படுகிறது.
இதுவே யோகாவிற்கும், மருந்து மாத்திரைகள் உட்கொண்டு நோய்களை சரி செய்து கொள்வதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு..
மருந்து மாத்திரைகள் நம் உடல் செல்களில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தி நோயை தீர்க்க முயலுகின்றன. ஆனால் அகத்தவமோ, விஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளாத, கருவிகளுக்கு என்றும் புலப்பட முடியாத, மறைபொருளான உயிரின் தன்மையையே மாற்றி, நோயை அடியோடு நீக்குகிறது.
ஒரு மரத்தில் உருவாகும் பழத்தின் சுவையை கூட்ட, பழம் தோன்றியபிறகு அதில் சில ரசாயனங்களை செலுத்தி மாற்ற முயலுவதைவிட, அந்த மரத்தின் வேர் பகுதியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி பழத்தின் ருசியை மாற்றுவதே சிறந்த முறை.
நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தின் மூலம் தீர்வு பெறுவது தற்காலிகமானதே. தவத்தின் மூலம் உயிரை தூய்மைபடுத்தி முழுமையாக நாளடைவில் நோயிலிருந்து விடுபடுவதே நிரந்தர தீர்வு. இதற்கு கால தாமதம் ஆனாலும் நிரந்தர தீர்வாக அமையும். மேலும் நம் முன்னோர்கள் வழி வந்த நோய்களுக்கு தவமே சரியான தீர்வு.
சென்ற காலத்தைப்பற்றி நினையாமல் இப்பொழுது இருக்கும் என் உடல், மனதை மேலும் கெட்டுப் போகாமல் எப்படி காப்பாற்றிக் கொள்வது என நினைந்து செயல்படுவோம்.
எனவே நாமும் கீழ்கண்ட சங்கல்பங்களை மேற்கொள்வோம்...
1. இறைஆற்றலால் இந்த அற்புதமான உலகத்தில் பிறப்பிக்கப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கேட்டு இந்தப்பிறவி எனக்கு கிடைக்கவில்லை.
2. பிறந்துவிட்ட காரணத்தினால் என் உயரிய ஆறாவது அறிவை புனிதமான என் உடல் மற்றும் மனதைப்பற்றி அறிந்துகொள்ளவும், எனக்கும் பிரபஞ்த்திற்கும் உள்ள பிரிக்கமுடியாத உறவினை உணர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்துவேன்.
3. என் உடல், உயிர், மனம் கெடக்கூடிய செயல்களை செய்வதை முடிந்தவரை தவிர்ப்பேன். என் பிறப்பு, வாழ்வு, இறப்பு இவைகளை தீர்மானிப்பது இறை ஆற்றலே என்கிற நினைவில் வாழ்வேன்.
4.என் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளான இருதயம், மூளை, சிறுநீரகங்கள், இரைப்பை, நுரையீரல்கள் இவைகளை காத்துக் கொள்வேன் என்று தவ முடிவில் சங்கல்பம் மேற்கொள்வேன்.
5. எவ்வளவு நாள் வாழ்வோம் என்பதைக் கணிப்பது கடினம். ஆனால் முடிந்த வரையில் மகிழ்ச்சியாக, இன்பமாக, அமைதியாக, நோயில்லாமல் வாழ முயற்சிப்பேன்.
6. மனிதனால், விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து செயற்கை மாற்றங்களையும் வெறுக்காமல், அளவு முறையோடு அனுபவித்து அவைகளினால் என் உடல் மனம் கெடாதவாறு வாழ்வேன்.
7. இயற்க்கை விதியை உணர்ந்து அதற்க்கு முரண்படாதவாறு என் செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வேன். இயற்கை விதி என்பது “நானும் மற்ற மனிதர்கள், உயிர்கள், அசேதனப்பொருட்கள், பஞ்ச பூதங்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் உடமைகள். இவைகளை கெடுக்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது”. எந்த அளவிற்கு இதில் நான் முரண்பட்டு வாழ்கிறேனோ அந்த அளவிற்கு இயற்க்கை விளைவாக அளிப்பது துன்பம் மற்றும் நோயாகும்.
யாரெல்லாம் யோகப்பயிற்சிகளை தன் உடல், மனம் அதிகமாக கெடாமல் இருக்கும் போதே செய்ய தொடங்கி விட்டார்களோ, அவர்கள் எல்லாம் யோகசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் சிறிது அதிக முயற்சி செய்து பழக்கப்பதிவுகளை சிரமப்பட்டு மாற்றி அமைத்துக்கொண்டு நலம் பெறமுடியும்.
எந்த விதத்தில் பார்த்தாலும் யோகப்பயிற்சிகள் நன்மையையே தரும். இப்போது சிறு வயதினராக இருந்து உடல் நலம், மன ஆற்றல் இருந்தாலும், இந்த வயதில் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அவைகளை இப்போது அதிகமாக பயன்படுத்தாவிட்டாலும், பிற்கால வாழ்க்கையில் தேவைப்படும் போது அதிக சிரமம் இன்றி கற்ற பயிற்சிகளை செய்து உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம்.
வாகனத்தை ஓட்டுவதை ஒருமுறை நன்றாக கற்றுக்கொண்டால், அது வாழ்நாள் முழுவதிலும் எப்போது வேண்டுமானாலும் உபயோகமாவது போல கற்ற யோகப் பயிற்சிகளும் பயனைத்தரும்.
நாம் மனவளக்கலை பயிற்சிகள் செய்து, உடல், நலம், மனவளம், மற்றும் மனநிறைவு பெற்று வாழ்வோம்...