டெங்கு – இந்த பெயர் 2012 வரை தமிழக மக்கள் பரவலாக உச்சரிக்காத ஒரு நோயின் பெயர். 2012க்கு பின் தமிழகத்தின் குக்கிராமத்தில் இருக்கும் பாமரர் வரை உச்சரிக்கும் பெயராக மாறியது எப்படி?
முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி விட்டதா?
தமிழக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி திடீரென குறைந்து விட்டதா? அல்லது டெங்கு வைரஸ் புது வீறு கொண்டு எழுந்து விட்டதா? (அறிவியல்பூர்வமாக சொல்வதானால் mutation ஏற்பட்டுவிட்டதா? அதற்கான காரணி என்ன?).
இங்குதான் உயிரியல் ஆயுதப் போரினை (Biological warfare) பற்றியும், டெங்குவை உயிரியல் ஆயுதமாக (Bio weapon) பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும் நம்பகப்பூர்வமான ஆதாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அணுகுண்டுகளையும், துப்பாக்கிகளையும் ஆயுதமாக பயன்படுத்தி போரிட்ட காலம் மலையேறி விட்டது. இன்று நாம் உயிரியல் ஆயுத போர்களின் காலகட்டத்தில் இருக்கிறோம். டெங்கு ஓர் உயிரியல் போர் ஆயுதம் என்பது பரபரப்புகாக யாரோ சொன்ன செய்தி அல்ல. Indian Defence Studies and Analysis என்ற இந்திய அரசின் பாதுகாப்பு துறை சார் தன்னாட்சி நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் கடற்படை அதிகாரியான கேப்டன் அஜய் லீலீ எழுதிய கட்டுரையின் சாராம்சம். அஜய் லீலீ, பாதுகாப்பு துறை ஆய்வில் சிறந்த பங்களிப்புக்கான கே.சுப்பிரமணியம் விருதை 2013-ஆம் ஆண்டு வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் லீலீ கட்டுரையின் உள்ளடக்கம்..
1981-ஆம் ஆண்டு க்யூபா நாட்டில் டெங்கு சுரம் தீவிரமாக பரவியது. அந்த ஆண்டு ஒரேநேரத்தில் 158 பேர் வரை டெங்குவினால் செத்து மடிந்தனர். அப்போது, அந்நாடு தனது பரம எதிரியான அமெரிக்காவை நோக்கி சுட்டுவிரலை நீட்டியது. அவ்வாறு சந்தேகப்படுவதற்கு காரணமும் இருந்தது. எப்போதும் இல்லாத வகையில் ஒரேநேரத்தில் 3 வெவ்வேறு இடங்களில் டெங்கு மையம் கொண்டிருந்தது. இந்த இடங்களில் உள்ள மக்கள் எவரும் அதுவரை டெங்கு பாதித்தவருடன் தொடர்பில் இல்லை. டெங்கு பாதித்த பகுதிகளுக்குச் சென்று வந்தவர் எவரும் இல்லை. சுயம்புவாக அந்த இடங்களில் எங்கிருந்து டெங்கு உருவாக முடியும் என்ற சந்தேகம் குற்றச்சாட்டிற்கு வலுசேர்த்தது.
மேலும், அமெரிக்காவும் டெங்கு வைரஸை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை Fort Deitrick, Maryland-இல் உள்ள தனது ஆய்வகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்துவந்தது. இந்த தகவலும் ஆதாரமாக முன் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் அந்த ஆராய்ச்சி 1972-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டிருந்தது.
பனிப்போரின் உச்சகட்ட காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வு முயற்சிகள் தொடர்பான 46 இரகசிய கோப்புக்கள் பின்னர் வெளியானது. அதில் இருந்த முக்கியமான ஆய்வு டெங்கு தொடர்பானது. தெற்கு பசிபிக்கில் உள்ள பேக்கர் தீவுகளில் Magic sword என்று பெயரிடப்பட்டு ஓர் ஆய்வு நடந்தது. அந்த ஆய்வில் டெங்கு வைரசை பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்தி’ வகை கொசுக்கள் பேக்கர் தீவில் பரப்பப்பட்டது.கொசுக்கள் பரவும் தன்மையும், வேறு இடங்களுக்கு அந்த கொசுக்களை எடுத்து பரப்பும் வாய்ப்புகள் குறித்தும் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்குப் பின், இதுபோன்ற ஒரு ஆய்வு 1975-ஆம் ஆண்டு இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனெபட் என்ற இடத்தில் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. பசிபிக் தீவுகளில் நடந்த ஆய்வுக்கும் சோனெபட் ஆய்வுக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. பசிபிக் தீவுகளில் மக்கள் தொகை குறைவான பகுதிகளில் நடந்த அதே ஆய்வு இந்தியாவில், தலைநகர் டெல்லிக்கு அருகாமையில் அமைந்த மக்கள்தொகை அடர்ந்த பகுதியில் மேற்கொள்ள முயற்சி நடந்தது. இந்தியாவின் உயர் மருத்துவ ஆய்வு நிறுவனமான ICMR-க்கு இது குறித்து தகவல் தெரிந்திருக்கவில்லை. கொசுக்கள் குறித்த ஆய்வு என்றுக் கூறி உலக சுகாதார நிறுவனம் மூலமாக அமெரிக்கா இந்த முயற்சியை எடுத்தாலும் டெங்கு நோயை பரப்பும் நோக்கம் முதன்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்போதைய இந்திய பிரதமர், இந்திரா காந்தியால் அந்த ஆய்வு தடுத்து நிறுத்தப்பட்டது.
2001-ஆம் ஆண்டு Hepatitis C என்னும் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வு செய்த பிரிட்டிஷ் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இருவர் Hepatitis C மற்றும் டெங்கு வைரஸை இணைத்து மரபணு மாற்றம் செய்து ‘Dengatitis’ உருவாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
டெங்கு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்துவதில் உள்ள சாதகமான அம்சங்கள்.
1.டெங்குவை கொசுக்களின் மூலமாக எளிதாக பரப்ப முடியும்.
2.டெங்கு எளிதாக பரவ கூடியது. எனவே ஒரு பரந்துபட்ட புவியியல் பகுதியை எளிதில் தாக்குதலுக்கு உட்படுத்தலாம்.
3.டெங்குவை பரப்பும் கொசுக்கள், பகலில் மக்கள் கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பதில் கவனக்குறைவாக உள்ள போது கடிக்கும் தன்மை கொண்டது.
4.டெங்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நோய் இல்லை. அது காலம் காலமாக மக்களை தாக்கும் அரிதான நோய். அதை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தும் போது எந்த சந்தேகத்திற்கும் இடம் இருக்காது. (புதிய நோய் கிருமிகள் தான் உயிரியல் ஆயுத கருவிகளாக பயன்படுத்தப்படும் என்ற தவறான கருதுகோள் உள்ளது).
கட்டுரை ஆதாரம்: https://idsa.in/idsastrategiccomments/DengueAGermwithWeaponPotential_ALele_191006
இந்திய பாதுகாப்பு துறை ஆய்வுகள் மட்டும் அல்ல பாகிஸ்தானும் டெங்கு உயிரியல் ஆயுதமாக தன் நாட்டின் மீது ஏவப்படுகிறது என்று பக்கம் பக்கமாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைக்கிறது.
ஆதாரம்: http://pakistancyberforce.blogspot.in/2011/09/dengue-virus-cias-biological-warfare.html
Ed Regis எழுதிய The Biology of Doom என்ற புத்தகமும் டெங்குவை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள், ஆதாரங்கள் பற்றி விரிவாக பேசுகிறது.
டெங்கு வைரஸை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்துவதால் மனித சக்தியை பாதிக்க முயற்சி எடுக்கப்படுகிறதா அல்லது டெங்குவை பரப்பி அதன் பின்னர் மருந்தை கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் பொருளாதார நோக்கம் உள்ளதா என்பது குறித்த தரவுகள் நம்மிடம் இல்லை. தமிழகத்தில் இப்போது பரவி வரும் டெங்குவும் உயிரியல் ஆயுத போரின் தொடர் விளைவு தானா என்பதும் ஆராயப்படவில்லை.
ஆனால் உலக பொருளாதாரத்தின் மையமான Wall street பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்கும் மூன்று சக்திகள் ( Pharma, Oil, Banking) தங்கள் லாபத்திற்காக போரை தூண்டிவிட அஞ்சாதவை என்ற எச்சரிக்கையுடன் தான் மேலே சொன்ன தகவல்களை நாம் கடந்து செல்ல வேண்டும்.
தற்போது டெங்குவிற்கு வழங்கப்படும் பாரம்பரிய சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீரை ஒடுக்க நடக்கும் முயற்சிகள், இதன் பின்னணியில் மருந்து கம்பெனிகளின் லாப அரசியல் இருக்குமோ என்ற சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.
நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் விந்து உற்பத்தி பாதிக்கப்படும், தமிழக மக்களை வாரிசுகள் இல்லாமல் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு அரசின் மீதும் சித்த மருத்துவர்கள் மீதும் சுமத்தப்படுகிறது.
அறிவியல் பூர்வமாக எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி சில நவீன மருத்துவர்கள் கேள்வியை எழுப்பியதால், இது எதிர்கட்சி தலைவர் முதல் அரசியலில் அடி வைக்க காலம் பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் வரை முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தப்படுகிறது.
மக்கள் தலைவர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பாரட்டிற்குரியது. அவர்கள் அறிவியல் ஞானம் உள்ள மருத்துவர்கள் அல்ல. ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த மருத்துவர்கள் அறிவியல் ஞானம் உடையவர்கள். ஒரு குற்றச்சாட்டை சுமத்தும் முன், அறிவியல் பூர்வமாக சிந்தித்து தெளிய வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அவசர கோலத்தில் அவர்கள் அள்ளித் தெளித்த சேறு அவர்களின் பாரம்பரிய மருத்துவ வெறுப்புணர்வை மட்டும் பறைசாற்றுகிறது.
ஆங்கிலத்தில் சொன்னால் அறிவு என்று நம்பும் சில ஊடகங்களும், சித்த மருத்துவர்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நிலவேம்பு குடிநீருக்கு எதிரான தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
உண்மை தான் என்ன?
நிலவேம்பு இலைக்கு விந்தணு உற்பத்தியை தடுக்கும் குணம் உண்டு என்று எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவு உண்மை தான்.
ஆனால் அந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கரைப்பானாகிய Propylene glycol அதன் இயல்பிலேயே விந்தணுக்களை அழிக்க கூடிய தன்மை வாய்ந்தது. எனவே இந்த ஆய்வே தவறானது என்று அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி, Dr. ராமசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1997-ஆம் ஆண்டு Journal of Ethnopharmacology-இல் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் நிலவேம்பை எலிகளுக்கு 60 நாட்கள் கொடுத்து பார்த்து ஆய்வு செய்ததில் அவைகளின் விந்து பைகளில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆதாரம்: http://www.sciencedirect.com/science/article/pii/S0378874197000998
மேலும், நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு என்ற ஒற்றை மூலிகை உடைய மருந்து அல்ல. இது இந்த பரப்புரையை செய்யும் எத்தனை பேருக்கு தெரியும்? நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், பேய்ப்புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு, சந்தனம் என்ற 9 மூலிகைகளை சம அளவில் உள்ளடக்கிய கலவை மருந்து. அதில் நிலவேம்பு என்பது 9-இல் ஒரு பங்காக கலக்கப்படும் ஒரு மூலிகை சரக்கு.
இதில் நிலவேம்பு தவிர மற்ற மூலிகைகள் விந்து உற்பத்தியில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
சுக்கு(Zingiber officinale):
https://www.ajol.info/index.php/ajbr/article/view/50750/39442
மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும். எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.
Zingiber officinale aqueous extract treatment causes significant increase in weight of testis and epididymis.There were dose and duration dependent increase in sperm quality and motility.There was also significant increase in serum testosterone level. Malonhydialdehyde levels were significantly reduced.Our results indicated that Zingiber officinale posses pro-fertility properties in male rats.
அதாவது இந்த மூலிகையை எலிகளுக்கு கொடுத்து பார்த்ததில் விந்து உற்பத்தி செல்களை உள்ளடக்கிய testis , epididymis எடையை அதிகரிக்கிறது. ஆண் பாலின ஹார்மோனான டெஸ்டோஸிடரோன் அளவை அதிகப்படுத்துகிறது. மொத்தத்தில் இந்த மூலிகை மலட்டுதன்மையை அகற்றும் குணங்கள் நிறைந்தது.
https://www.ajol.info/index.php/ajbr/article/view/95189
மேற்குறிப்பிட்ட ஆய்வை கிளிக் செய்து படித்து பார்க்கவும்.
Sodium arsenite மற்றும் Zingiber officinale சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்ட போது, ஆர்ஸ்னைட்டால் எலிகளின் விந்துப்பைகளின் ஏற்பட்ட பாதிப்புகளை திருத்தி அமைக்கும் பண்பு இம்மூலிகைக்கு இருந்தது கண்டறியப்பட்டது என்பதே இந்த ஆய்வறிக்கையின் உள்ளடக்கம்.
கோரைக்கிழங்கு ( Cyperus rotundus):
http://www.ijppsjournal.com/Vol4Issue1/3066.pdf
Cisplastin என்ற மருந்தின் மூலம் விந்தகத்தில் பாதிப்பை உண்டாக்கப்பட்ட எலிகளில், கோரைக்கிழங்கின் aqueous extract கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. கோரைக்கிழங்கு விந்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்து விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும் செய்கையை உண்டாக்கியது நிரூபிக்கப்பட்டது.
பேய்ப்புடல் (Tricosanthes cucumerina):
http://www.webmedcentral.com/article_view/3498
one would observe reduction in the testes weights (shrinkage) because, no spermatogenic activity occurred, as the spermatogenic cells have been inhibited from their actions, but with the extract administration, the initial spermatogenic state of the testes were approached.
அதாவது, ஹார்மோன் கொடுத்து எலிகளின் விந்தகங்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. இம்மூலிகையை கொடுத்து பரிசோதித்த போது, விந்து உற்பத்தி முன்பிருந்த நல்ல நிலைக்கு திரும்பியது கண்டறியப்பட்டது.
நிலவேம்பு குடிநீரில் உள்ளது 9 மூலிகைகள். இதில் மேலே சொன்ன 3 மூலிகைகள் எலிகளில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யும் ஆற்றல் உள்ளது.
நிலவேம்பு விந்தகங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஏற்றுக் கொண்டாலும், அதை திருத்தி அமைக்கும் பண்பு நிலவேம்பு குடிநீரில் சேர்க்கப்படும் மற்ற மூலிகைகளுக்கு உள்ளது.
நிலவேம்பு மட்டும் டெங்கு கிருமியை எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், இன்ன பிற மூலிகைகளும் சம அளவில் சேர்க்க வேண்டிய அவசியம் சித்தர்களுக்கு ஏன் வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும். நுனிப்புல் மேய்ந்து விட்டு வதந்தி பரப்பும் அரைகுறை அறிவாளிகள் சித்தர் அறிவியலின் சத்ரு, மித்ரு சரக்குகளின் அறிவியல் கோட்பாட்டை தேடி படிக்க வேண்டும். ஒரு மூலிகை சரக்கின் கெட்ட குணங்கள், அதற்கு எதிரிடை பண்புடைய மற்ற மூலிகையால் திருத்தி அமைக்கப்படும் கோட்பாடு இது.
இங்கு சித்த மருத்துவத்தை அறிவியல் என்று எப்படி அழைக்கலாம் என்று சிலருக்கு கேள்வி எழும். பாரம்பரிய மருத்துவமே மூட நம்பிக்கை என்ற கற்பிதம் தவறானது. பாரம்பரிய மருத்துவம் மக்களின் அன்றாட வாழ்வியலுடன் புழங்கி வந்தது. அதில் மூட நம்பிக்கை ஒரு சிறிய சரடு மட்டுமே. சித்த மருத்துவம், தத்துவங்களை அடிப்படையானது. அறிவியல் காலத்திற்கு காலம் கருவிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப வளரக் கூடியது. இதில் தத்துவ அடிப்படையிலான அறிவியல் என்பது ஒரு பரிமாணம்.
உயிரினங்கள் அனைத்திற்கும் தனது உடலுக்கு நேரும் நோயை மாற்றி அமைக்கும் மருத்துவ அறிவு உள்ளது. இதில் ஆறு அறிவுடைய மனிதன் தனது அனுபவத்தில் சேமித்த மருத்துவ அறிவு ஒப்பீட்டளவில் அதிகமானது. அதனுடன் தத்துவங்களும் உள்ளீடும்போது அது பாரம்பரிய மருத்துவ அறிவியலாக பரிணமிக்கிறது.
மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் (ஆதாரம்: Biology letters அறிவியல் ஏடு, December 2012), குறிப்பிட்ட ஒரு வகை பறவைகள் சிகரெட் துண்டுகளை தனது கூண்டில் சேகரித்து வைத்தது குறித்து ஆராயப்பட்டது. சிகரெட் துண்டுகள் சேகரிக்கப்படாத கூண்டில் முட்டைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. முட்டைகளுக்கு ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் ஆற்றல் அந்த சிகரெட் துண்டுகளுக்கு இருந்தது கண்டறியப்பட்டது. இது மந்திரம் அல்ல, பறவைகளின் சூழலுக்கேற்ற தகவமைப்பு. மனிதனின் தகவமைப்பு முயற்சிகளுடன், தத்துவ அறிவும் சேர்ந்து உருவானது தான் பாரம்பரிய மருத்துவ அறிவியல்.
இந்த பாரம்பரிய அறிவியலை, நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்தி முன்னேற்ற வேண்டும். ஆனால் அதுவரை அதன் பயன்பாட்டை நிறுத்த சொல்வது ஏற்புடையதா? நிலவேம்பு குடிநீர், Phase 3 clinical trial முடித்து தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறும்முன், இன்று அலோபதி மருத்துவமாக சந்தையில் உலாவும் பல மருந்துகள் முறைப்படி அனைத்து ஆராய்ச்சிகளும் முடித்து தான் வெளிவந்ததா என்பதை கவனிக்க வேண்டும்!
தமிழகத்தில் டெங்கு தீவிரமாக பரவிய அதே 2012 மே மாதம், இந்திய பாரளுமன்ற நிலைக்குழு CDSCO (Central Dug Standard Control Organisation) என்ற அமைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. CDSCO மருத்துவத் துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சந்தையை கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்த ஆய்வில் பல முறைகேடுகள் வெளியானது.
மருத்துவத்துறை ஆராய்ச்சியை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் விதிமுறைகள் அடங்கிய Drugs and Cosmetics act-ல் ஒரு சிறப்பு பிரிவு உள்ளது. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற நோய்கள் தாக்கும் போது அதற்கான மருந்துகள் கண்டறியப்படாமல் இருந்தால் phase 3 clinical trial முடிக்கப்படாமல் ஒரு மருந்தை பயன்படுத்த அங்கீகரிக்கலாம் என்று அது குறிப்பிடுகிறது. (Phase 3 clinical trial என்பது மருத்துவ ஆராய்ச்சியின் 4 நிலைகளில் ஒன்று.) பாராளுமன்ற நிலைக்குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த சிறப்பு பிரிவை காரணம் காட்டி பல முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இப்பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 33 மருந்துகளில் ஒன்று கூட தகுதியான அவசரநிலை காரணங்களுக்காக தான் ஆராய்ச்சி முடிக்காமல் அனுமதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க முடியவில்லை.
Letrozole என்ற மருந்தை Novartis என்ற பிரபல மருந்துக் கம்பெனி பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதாகக் கூறி அறிமுகப்படுத்தியது. இம்மருந்து PHASE 3 மற்றும் PHASE 2 Clinical trial முறையாக முடிக்காமல் பல மோசடிகளை கையாண்டது பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வில் தெரியவந்தது.
Sertindole என்ற மருந்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் அங்கீகரிக்கலாம் என்று மூன்று மனநல மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் Phase 3 clinical trial செய்யாமல் சந்தையில் அனுமதிக்கப்பட்டது. சென்னை, அஹமதாபாத் மற்றும் மும்பையிலிருந்து பரிந்துரை அனுப்பியிருந்த இந்த மூன்று மருத்துவர்களின் பரிந்துரையும் ஒரே மொழி நடையில் வரி மாறாமல் இருந்தது மட்டுமல்ல, அவர்கள் அனுப்பிய மூன்று கடிதங்களிலும் DCGI அலுவலக முகவரியும் ஒன்று போல் தவறாக எழுதப்பட்டிருந்தது. மருந்து கம்பெனிகளே மருத்துவரின் பெயரில் பரிந்துரையை அனுப்பியது என்பதை கண்டறிய பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு இதைவிட அதிக ஆதாரங்கள் தேவைப்படவில்லை.
இன்றும் பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் மருந்து Nimesulide. இதை குழந்தைகளுக்கான மருந்தாகவும் பல மருந்து நிறுவனங்கள் தயாரித்து வருகிறது. Nimesulide மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து. மேலும், குழந்தைகளுக்கு இதை உபயோகித்து பார்த்து எந்த Clinical trial-லும் இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை.
இப்படி முறையான ஆராய்ச்சி இல்லாமல் சந்தையில் புழங்கி வரும் மருந்துகளைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். இம்மருந்துகளை எல்லாம் மருத்துவர்கள் இன்றும் பரிந்துரைத்து கொண்டு தான் உள்ளனர். ஆனால் மக்கள் பலநூறு ஆண்டுகள் உபயோகித்து வரும் நிலவேம்பு குடிநீர் பற்றி மட்டும் பீதி கிளப்புவதன் பின்னணியில் உள்ள அரசியலை ஆராய வேண்டும்.
பாரம்பரிய மருத்துவத்திற்கு புனிதத்தன்மையைக் கெடுத்து, நிலவேம்பு குடிநீரை ஆராய்ச்சி செய்வது பாவத்திற்குரிய செயல் என்பது பொருளல்ல. ஏற்கனவே பல்லாயிரம் வருடங்களாக உபயோகித்து பாதுகாப்பானதாக அனுபவப்பூர்வமாக உணரப்பட்ட ஒரு மருந்தை, அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் முடித்து ஓர் அவசர நிலையில் உபயோகிக்கும் போது எதிர்ப்பது ஏன்?
பார்மா கம்பெனிகளுக்காக வளைத்து ஒடிக்கப்பட்ட சட்டங்களை கண்டுக் கொள்ளாத நவீன மருத்துவ சமூகம், சட்ட திட்டங்களை கடைபிடித்து முறையாக வழங்கப்படும் ஒரு மருந்தை எதிர்ப்பது அநீதி.
நிலவேம்பு குடிநீரை பற்றிய வதந்திகளையும், பொய் பரப்புரைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக அறிவியல் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி தயாரிப்பு முறைகளிலும், வடிவத்திலும் தேவைக்கேற்ப மாற்றங்கள் கொண்டு வருவது சித்த மருத்துவர்களின் கடமை. இங்கு ஆர்டிமைசின் என்ற மருந்தை சீன பாரம்பரிய மருத்துவத்தை ஆய்வு செய்து கண்டுபிடித்த Tu youyou என்ற நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளரை முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம்.
நிலவேம்பு குடிநீரும், ஆர்டிமைசின் போல் பல கட்ட ஆய்வுகளைக் கடந்துவர ஏற்புடைய அரசியல் சூழல் இருப்பது அவசியம். ஆர்டிமைசின் என்பது 30 வருட ஆராய்ச்சியின் இறுதி விளைவு. ஆராய்ச்சி நடந்த 30 வருடங்களும், “மருந்தின் மீது ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, அதுவரை மக்கள் அந்த மூலிகையை பயன்படுத்த வேண்டாம்” என்று ஆணை பிறப்பிக்கவில்லை.
நிலவேம்பு குடிநீரை நிறுத்தச் சொல்லி இங்குள்ள அரசு ஆணை பிறப்பிக்கவில்லை. ஆனால் அதற்கு எதிராக போரிடுபவர்களின் வாதம் சூழலை மாற்றக் கோருகிறது. இவர்களே அரசின் மருத்துவக் கொள்கையை வகுக்கும் நிர்வாகிகளாக இருப்பதால், சூழலும் விரைவில் இவர்கள் எண்ணப்படியே மாறிவிடும்.
ஆர்டிமைசின் கண்டுபிடிக்க சீனாவின் பொது சுகாதாரத்துறையில் கடைபிடிக்கப்படும் ஒருங்கிணைந்த மருத்து சிகிச்சைக் கொள்கை ஒரு களமாக இருந்தது. நிலவேம்பு குடிநீருக்கும் அப்படி ஒரு களம் தேவை.
நம் நாட்டு சுகாதாரத் துறை, WHO வழிகாட்டுதல்களை வேத வாக்காக கருதி கொள்கைகளையும் சிகிச்சை முறையையும் வகுக்கிறது. WHO வழிகாட்டுதல்கள் பாரம்பரிய சிகிச்சை முறைகளை உள்ளடக்கியது அல்ல. இதை காரணம் காட்டியே பாரம்பரிய மருத்துவம் WHO வழிகாட்டுதலுக்கு குறுக்கே நிற்பதாகவும், அதனாலேயே நம் நாடு பொது சுகாதாரத்தில் முன்னேறவில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் பொது சுகாதாரத்தில் முன்னேறிய பல நாடுகள் (வளரும் நாடுகள் உட்பட) WHO வழிகாட்டுதல்களை தன் நாட்டு சூழலுக்கு ஏற்ப நிராகரித்தோ, ஒப்புகொண்டோ, தகவமைத்தோ பயன்படுத்தி வருகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
வேலூர் கிறிஸ்த்துவ மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், Dr.K.S.Jacob ஒரு கட்டுரையில் மிகச்சரியாக இவ்வாறு குறிப்பிட்டார்- “Indian problems requires Indian solutions. While International advice from WHO should be considered seriously, we need to make our decisions to Indian context.”
அதாவது, “நாம் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மிக கவனமாக கேட்டு கொண்டாலும், நம் இந்திய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சனைகளுக்கு இந்திய தீர்வுகள் தான் தேவை.”
இந்திய தீர்வுகள் பாரம்பரிய மருத்துவ முறைகளில் வேர் கொண்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவத்தை புறம்தள்ளி விட்டு நாம் சுகாதாரத்துறையில் தன்னிறைவு அடைய முடியாது...
தமிழர்களை அழிக்க பரப்பப்பட்டதா டெங்கு.. சிந்தியுங்கள் தமிழர்களே...