காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே...
பொருள்:
சித்தர்களாக, ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோமரிஷி ஞானம் சொல்கிறது.
ஆசான் உரோமரிஷி:
அட்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடர் என்றும் குமாரர் என்றும் கூறுவர். உரோம ரிஷிக்கு உடல் முழுவதும் மயிர் முளைத்திருந்தபடியால் ‘உரோம முனி’ என்று காரணப் பெயர் பெற்றார்.
ஒரு பிரம்மா இறந்தால் இவரது மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும். உரோம முனி இறந்தால் அஷ்டகோண முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்பர்.
காலாங்கியும் போகரும் சீனாவிலிருந்து தமிழகம் வந்து சித்தர்களானது போல ரோம ரிஷியும் ரோம புரியிலிருந்து வந்த சித்தராயிருக்கலாம். உரோம ரிஷி என்ற பெயர் ரோமாபுரியுடன் தொடர்புடையது என்பர் சிலர்.
தன்னைப்பற்றி:
கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே..
பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் ; ஞால : பரிசுத்த மெய்ஞஞானம் ; பதம் : பாதம்.
தியானம்:
"செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே."
போலிக்குரு:
"மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே"
தவநிலை:
"சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே"
என உரோமரிஷி ஞானம் கூறுகிறது.
இவர் சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்திய சூத்திரம், வகார சூத்திரம், உரோமரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இவர் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயத்திற்கும் சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை.
எண்சீர் விருத்தம்:
மூலவட்ட மானகுரு பாதங் காப்பு;
முத்திக்கு வித்தான முதலே காப்பு;
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு!
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக்
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம்
நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. 1
கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே
கருவதனை யறியாமல் மாண்டு போனான்
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம்
வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்;
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே. 2
பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்;
பின்கலைதா னாதித்தனாதி யாச்சு;
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி
நீங்காம லொன்றானா லதுதான் முத்தி;
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்;
காணாத பேர்க்கென்ன காம தேகஞ்
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச்
சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. 3
வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி
வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை?
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி;
உற்றபர மடிதானே பதினாறாகும்;
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு;
சார்வான பதினாறில் மௌ¢ள வாங்கி
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி
எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. 4
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே. 5
அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே. 6
மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
குறையாமற் சரபீங் கூட்டித் தீரே. 7
கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
தணலான ருத்திரனுந் தணலு மாமே. 8
தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்
கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு;
காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான்
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம்
பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே? 9
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. 10
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
காடேறி மலையேறி நதிக ளாடிக்
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. 11
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே. 12
ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே;
உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே;
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ
டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப்
போமென்று போனதனால் நாள்கு றைந்து
போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே? 13
எல்லாம் சிவ மயம்.. வாழ்க வளமுடன்...