28/11/2021
ஏன் தனி தமிழ்நாடு தேவை? பகுதி 1...
டேராப்பாறை அணை...
சேடபட்டி முத்தையா முதல் கதிரவன்MLA வரை கண்டு கொள்ள படாத திட்டம்.
ஒரு முறை திமுக எம்எல்ஏ கோ. தளபதி துண்டை போட்டு சத்தியம் செய்தார் எதுவும் நடக்கவில்லை.
பேரையூர் தாலுகா விவசாயிகளின் 35 ஆண்டு கால கோரிக்கையான, டேராப்பாறை நீர்த்தேக்க திட்டத்தை விரைவில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில். இப்பகுதியில் வறட்சியை போக்க 1982ஆம் ஆண்டு அன்றைய, தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரால் ரூ.24 கோடி மதிப்பீட்டில், 202 ஏக்கர் பரப்பளவில் டேராப்பாறை நீர்த்தேக்கத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டம் குறித்து 1991இல் விரிவான திட்ட மதிப்பீடு அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அடிக்கல் நாட்டுதலுடன் திட்டம் நிறுத்தப்பட்டது.
டேராப்பாறை நீர்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பேரையூர் தாலுகாவில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் 74 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
டேராப்பாறை அணைத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான காந்தியவாதி சேதுராமலிங்க பாண்டியன் இதுகுறித்து கூறியது: பேரையூர் பகுதியில் பெய்யும் மழை நீரை தேக்கிவைக்க வசதி வாய்ப்பு இல்லை. இதனால் சதுரகிரி மலை அடிவாரத்தில் அணை கட்டி, சேடபட்டி மற்றும் தே.கல்லுப்பட்டி ஒன்றியங்கள் பயன்பெறச் செய்யவேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வறட்சியால் விவசாயப்பணிகள் நடைபெறுவதில்லை. இதனால் பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். இங்கு தொழில்சாலைகளும், வேலை வாய்ப்புகளும் கிடையாது. எனவே டேராப்பாறை நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்...