சித்தவைத்தியத்தில் எமது தேகம் பற்றிய அடிப்படை விடயங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதாவது...
அவரவர் கையில் எண்சாண் அல்லது தொண்ணூற்றாறு அங்குலம் உயரமுடையது அவரது உடல் ஆகும்.
இச்சரீரம் பிருதிவி என்னும் பூதமாகிய மண்ணால் உருவாகி, ஆகாயம் என்ற பூதத்தினிடமாக ஒடுங்கி, வாயு - தேயு - அப்பு, என்னும் மூன்று பூதங்களால் இயக்கப்பட்டிருக்கின்றது.
பஞ்சபூதத்தால் ஆக்கப்பட்ட சரீரத்தில் எலும்பு, தோல், மாமிசம், மயிர், நாடி முதலியவைகள் பிருதிவியென்னும் பூதத்தின் அம்சங்களாகும்.
உதிரம், மச்சை, சுக்கிலம், நீர் முதலியவைகள் அப்பு என்னும் பூதத்தின் கூறாகும்.
அகங்காரம், சோம்பல், மைதுனம், பயம், நித்திரை என்பன தேயு என்னும் பூதத்தின் கூறாகும்.
ஓடல், கீறல், நடத்தல், கண்மூடல், திறத்தல், இருத்தல் ஆகியவை வாயு என்னும் பூதத்தில் கூறு.
காமம், கோபம், மதம், குரோதம், லோபம் முதலியவை ஆகாயம் என்னும் பூதத்தின் கூறாகும்.
இங்ஙனம் ஏற்பட்ட இருபத்தைந்து அம்சங்களும் பிறவிக் கருவிகளாக உடையவை.
இப்பிறவி கருவிகளாகவுடைய பூதங்களில் ஒன்றாகிய பிருதிவி என்னும் பூதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட தேகத்தினிடமாக எழுபத்தீராயிரம் நரம்புகள் தோன்றியிருக்கின்றன.
அவைகளில் பிரதானமானவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை, அலம்புடை, காந்தாரி, அத்தி, சிகுவை, சங்கினி, இயல்புருடன், குரு எனப் பத்தும் ஆகும்.
அவைகளை இயக்குவதற்குப் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் எனப் பத்து வாயுக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
முற்கூறப்பட்ட தசநாடியில் மூலாதாரமாக நின்றவை இடைகலை, பிங்கலை, சுழிமுனை என மூன்றில் இடைகலை, பிங்கலை இவ்விரெண்டும் வலம், இடக் கால் பெருவிரல்களில் இருந்து ஆரம்பித்து இடம், வல நாசிவரையில் கத்தரிக்கோல் போன்று மாறலாக ஓடி நிற்கும்.
சுழிமுனையானது நடுவே மூலாதாரத்திலிருந்து உச்சிவரை அச்சுருவாணியாக நிற்கும்.
இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப் பெயர்கொண்ட மூன்று மூலாதார நாடிகளை முறையே அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்களின் இயக்கத்தால் விடும் சுவாசம் இடைகலை வாதமென்றும், பிங்கலை பித்தமென்றும், சுழிமுனை கபம் என்றும் அறியலாம்.
இடைகலை என்ற வாதமானது நாசி வழியாய் பதினாறு அங்குலம் பாய்ந்தும், பிங்கலை என்ற பித்தமானது பன்னிரென்டு அங்குலம் பாய்ந்தும், சுழிமுனையானது இரண்டு நாசி துவாரங்களுக்கும் இடையேயும் இருக்கும்.
இடைகலை, பிங்கலை, சுழிமுனை எனப்பட்ட மூன்று கலைகளாகிய பெருநாடியோடு அபானன், பிராணன், சமானன் என்னும் வாயுக்கள் சம்பந்தப்படும் காலத்தில் ஒன்றுக்கொன்று வலிவு குறைவுபட்டிருப்பதால் வாதம் மாத்திரை ஒன்றாகவும் பித்தம் அரையாகவும் கபம் காலாகவும் ஏற்பட்டதென்று அறியலாம்.
வாதம் உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன.
இவற்றை அறிய கரத்தைப் பிடித்து நாடிநிலை பார்க்க வேண்டும்.
நாடிநிலை பார்ப்பது பற்றி மற்றுமோர் பதிவில் பார்ப்போம்...