இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்.
ஆனால், அதுதான் உண்மை..
சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று சாஸ்திரங்கள் ஏற்றன.
ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.
இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.
மூன்று, குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.
இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப் பட்டிருப்பதால் தான் காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும். குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.
எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தார்.
அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்..
இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது. அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.
அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.
இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம் கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.
சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது..
அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும் மது விற்கக் கூடாது.
அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.
மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.
அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை செய்ய வேண்டும்.
திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் காய்ச்சக் கூடாது...
அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின..
விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.
அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும், குடிக்கு உரியதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன..
இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்தது.
1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது..
அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்..
இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.
மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.
கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது, அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.
இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.
இதனை அடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது.
இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.
இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.
1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது.
இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.
குடி மூலமாக வருவாயை பெருக்குவதும், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான், டாஸ்மாக்கின் நோக்கம்..
இதுவேதான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்..