மீனவர் பிரச்னை என்பது கடலும் கடல் சார்ந்ததுமாகப் பார்க்கப்படாமல், நாடும் நாடுகள் கடந்ததுமாகப் பார்க்கப்படுகிறது. எனவேதான் அது தீர்க்க முடியாத சிக்கலாகவும் இருக்கிறது.
மொழியால், இனத்தால், நிலப்பரப்பால் வேறுபட்டு இருந்தாலும், இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்கள்தான். அவர்களுக்குக் கடல்பற்றிய புரிதல் உண்டு.
மீன் பிடித்தொழிலில் உள்ள நுட்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் குறித்த அறிதல் உண்டு.
கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் கட்டித் தழுவி அன்பு பாராட்டும் காட்சிகளைக் காணலாம்.
ஆனால், இந்த மீனவர்களின் வாழ்க்கையையே அறியாத சிங்களக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், இரு நாட்டு அரசுகள்தான் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறார்கள்.
வட மேற்கு இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட பூங்கொடித்தீவு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில்தான் மீன்வளம் அதிகம். தமிழகக் கடல் எல்லைக்குள் நீர்பரப்பு உண்டே தவிர, மீன்வளம் இல்லை.
மீன் பிடிக்க வேண்டும் என்றால், கச்சத்தீவைத் தாண்டுவதைத் தவிர, தமிழக மீனவர்களுக்கு வேறு வழி இல்லை.
கடல் பரப்பை எல்லை போட்டுப் பிரிப்பதைவிட, மீன் வளத்தை எப்படி இரு நாட்டு மீனவர்களும் பங்கிட்டுக் கொள்வது என்பதுதான் முக்கியம்.
ராமேஸ்வரத்தில் நாட்டுப் படகு மீனவர்களுக்கும் விசைப் படகு மீனவர்களுக்கும் இடையில் எந்தெந்த நாட்களில் மீன் பிடிக்கச் செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது.
அதைப் போல இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையில் புரிதலும் ஒப்பந்தமும் ஏற்பட வேண்டியது அவசியம்.
ஆனால், விடுதலைப் புலிகள் இருந்த காலம் வரை, தமிழக மீனவர்களைக் கடற்புலிகளாகவே கருதி தாக்குதல் தொடுத்தது இலங்கை அரசு.
இப்போது புலிகள் இல்லாத காலத்திலும் அவர்களுக்குப் புலி அச்சம் போகவில்லை.
பிழைப்புக்காக கடலில் பாடெடுத்துச் செல்லும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாக தாக்குவதும் சுட்டுத்தள்ளுவதும் எந்தத் தார்மிக நெறிகளிலும் சேர்த்தி இல்லை.
மீன் என்பது எப்போதும் வலையில் வந்து விழாது. இரவில் வலை போட்டுக் கண் அசந்துவிடுவார்கள் மீனவர்கள்.
காலையில் படகு இந்திய எல்லையைத் தாண்டிவிடும். படகு திசைமாறிப் போவது என்பது காற்று, தட்ப வெப்ப நிலை, நீரோட்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்தது.
இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஒருவர் மீனவர் வாழ்க்கைப்பற்றிப் புரிந்தவராக இருக்க வேண்டும் என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்!
ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் இருக்கிறார்கள்.
ஏதோ சிங்களக் கடற்படை மட்டும்தான் அநியாயம் செய்கிறது என்று இல்லை, இந்தியக் கடற்படை செய்யும் அட்டூழியம் அதைவிட அதிகம். கொலை செய்வது இல்லையே தவிர, மீனவர்களைத் தாக்குவது, மீன்பிடிப் பொருட்களைச் சேதப்படுத்துவது என எல்லா அட்டூழியங்களையும் இந்தியக் கடற்படையும் செய்கிறது.
ஒரு தமிழக மீனவருக்கு எப்படி சிங்களம் பேசும் இலங்கைக் கடற்படை அதிகாரி அன்னியரோ, இந்திய கடலோரப் படை அதிகாரியும் அன்னியராகத்தான் இருக்கிறார்.
சமீபத்தில் கச்சத்தீவைச் சுற்றிலும் என்ணெய் வளங்கள் இருப்பதாகக் கண்டு பிடித்து உள்ளனர்.
ஏற்கனவே எண்ணெய் அரசியலால் அரபுலகு நாடுகள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
கச்சத்தீவிலும் அப்படி ஒரு ஆதிக்கப் போட்டி வரும்.
அந்தப் போட்டி எத்தகைய அழிவைக் கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை.
அதற்கு முன், தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், இந்திய அரசு, இலங்கை அரசு என நான்கு தரப்பினரும் அமர்ந்து பேசி பரஸ்பர புரிதலுக்கு வருவதுதான் ஒரே தீர்வு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.