ஆசான் ஆறுமுக அரங்கமகா தேசிக அடிகளார் அவர்கள் அருளிய உபதேசம்..
மனிதன் கடவுளாக வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. கிரியை, சரியை, யோக, ஞானம் என்று முன்பு இருந்திருக்கலாம். காலப்போக்கில் சரியை, கிரியை, யோக, ஞானம் என்று மாறிவிட்டது.
சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.
கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும்.
ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார்.
"எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம்
அன்றேயிரங்கி யீந்தருளும் பதம்.
என்போன்ற வாக்குமிகு பொன்போன்ற
கருணைதந்து இதயத்திருக்கும் பதம்."
-மகான் இராமலிங்க சுவாமிகள் அருளிய
- அருட்பா - திருவடிப்புகழ்ச்சி.
ஆகவே கடவுள் அருள்பெற வழிபாடு செய்வதே கிரியை மார்க்கமாகும்.
யோகம் என்பது தன் உடல் கூற்றை அறிந்து அதற்குள் இயங்கும் ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மா இயக்கத்திற்கு மூச்சுக்காற்றுதான் காரணம் என்று அறிந்து அந்த மூச்சுக்காற்றும் நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசமாக (போகின்ற காற்று மற்றும் வருகின்ற காற்று) ஆக 21,600 முறை இயங்கினால்தான் ஆன்மா இயக்கமும் மனித வாழ்க்கையும் நடைபெறும்.
இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்றேயாகும். ஆகவே, மூச்சுக்காற்றை அறிந்து அந்த காற்றின் இயக்கமாகிய இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகும். இடகலை என்பது இடது மூக்கில் வருகின்ற காற்றும், பிங்கலை என்பது வலது மூக்கில் வருகின்ற காற்றும், சுழிமுனை என்பது புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்றும் ஆகும்.
இதை நன்கு அறிந்து ரேசக, பூரக, கும்பகம் ஆகிய தன்மையை உணர்ந்து காற்றை இழுத்தல், ஸ்தம்பித்தல், நிறுத்தல் ஆகிய ரகசியத்தை(காற்றை நிறுத்துதல் என்பது புருவ மத்தியாகிய சுழிமுனையில் காற்றை ஒடுக்குதல்) அறிவதே யோக மார்க்கமாகும். இது அனைத்தும் ஆசான் அகத்தீசன் அருள் இல்லாமல் யோகத்தை அறிந்துகொள்ள முடியாது.
ஞானம் என்பது இயற்கையின் இயல்பறிந்து அது உடம்பினுள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை அறிந்து, அந்த இயற்கை தூலதேகமாகிய புற உடம்பாகவும், சூட்சும தேகமாகிய அகஉடம்பாகவும் இருக்கின்ற இந்த இயல்பை அறிந்து அதே இயற்கை மும்மலமாகிய காமதேகமாகவும், மலமற்ற ஞானதேகமாகவும் அமைந்துள்ளது.
இயற்கையின் இயல்பறிந்து அதனுடைய இயல்பாகிய (மாசு அல்லது களிம்பு) களிம்பு அற்றால் சதகோடி (100 கோடி) சூரியப்பிரகாசமான ஒளி உள்ளே தோற்றும். இதை அறிவதே ஞானமாகும். அந்த ஜோதியை காணவேண்டும் என்றால் ஆசான் அகத்தீசன் அருள்செய்ய வேண்டும்.
"களிம்பறுத் தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான் அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே"
-திருமந்திரம் உபதேசம் - கவி 114.
ஆகவே, சரியை, கிரியை, யோக, ஞானமாகிய நான்கும் ஆசான் அருள்கொண்டுதான் அறிய முடியும்.
மேற்கண்ட சரியை, கிரியை, யோக ஞானத்தின் சாரம்
சரியை என்பது நெறியுடன் வாழ்வதாகும். கடவுளைப் புறத்தில் உருவாக நினைத்து வழிபாடுவது கிரியை ஆகும்.
யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து, மூச்சுக்காற்றை ஞானபணடிதன் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும்.
ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும்...