இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்...
இந்தியா விடுதலையடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது 9 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலப்பரப்பு பின்னர் 1969&ஆம் ஆண்டு ஜனவரி 14&ஆம் நாள் தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை, தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வரும் நிலையில், தமிழகமும் நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கை கடந்த ஆண்டு தான் நிறைவேற்றப்பட்டு நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசால் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நாளை தமிழ்நாட்டு மக்களும், தமிழ் உணர்வாளர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாட வேண்டும்.
தமிழ்நாடு நாள் கொண்டாடுவதுடன் நமது கடமைகள் முடிந்து விடக் கூடாது. தமிழகத்தில் நிலப்பரப்பு மட்டுமின்றி பல்வேறு உரிமைகளை கடந்த காலங்களில் நாம் இழந்திருக்கிறோம். அவ்வாறு இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க தமிழ்நாட்டு நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்...