1916ஆம் ஆண்டில் நீதிக்கட்சியும், தனித்தமிழ் இயக்கமும் ஒரே கால கட்டத்தில் பிறந்தவை. திராவிட இயக்கங்கள் நீதிக்கட்சியை உயர்த்திச் சொல்லுமளவிற்கு தனித்தமிழ் இயக்கத்தை உயர்த்திச் சொல்வதில்லை. நீதிக்கட்சியினர் பிராமணர்களுக்கு இணையாக பதவி கேட்டுப் போராடினார்கள். ஆனால் பிராமணீய புரோகிதச் சடங்கு மறுப்பு, வைதீக மறுப்பு, வடமொழி எதிர்ப்பு ஆகிய கொள்கை கொண்டவர்களல்ல. தமிழையும், தமிழினத்தையும் தடைக்கற்களாகவே கருதினர்.
தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த சைவ மதமும், தனித்தமிழ் இயக்கமும் நீதிக்கட்சியைப் போல எவற்றோடும் சமரசம் செய்து கொள்ள வில்லை.
1866-க்குப் பின்னர் தோன்றிய ஆரிய சமாஜமும், பிரம்ம சமாஜமும் ஆரியத்தின் வேதாந்தக் கொள்கையை மக்களிடம் பரப்பி வந்தன. அதனை தமிழர்களிடம் பற்றுக் கொள்ள விடாது தடுத்த பெருமை மறைமலையடிகளுக்கே உண்டு.
1905ஆம் ஆண்டில் "சைவ சித்தாந்த மகா சமாஜம்" எனும் அமைப்பை ஞானியார் அடிகளோடு இணைந்து ஏற்படுத்தினார். ஆரிய வேதாந்தத்திற்கு எதிரானது சைவ சித்தாந்தம் என்று பிரகடனப்படுத்தினார். ஆரிய பிராமண மதத்திடமிருந்து தமிழர் மதமாகிய சைவ மதத்தை மீட்டெடுக்க அறை கூவல் விடுத்தார். 1906இல் ஆரியருக்கு தமிழர் கடமைப் பட்டிருக்க வில்லை.என்றும், அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றும், "பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்" எனும் நூலில் எழுதினார்.
1913இல் சாதி எதிர்ப்புக் கருத்துகளை வெளிப்படுத்தும் " சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்" எனும் நூலினை வெளியிட்டார்.
அதில், " ஐயோ! இந்து மக்களே, ஓ! போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே, நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடாரியாய்ச் சாதி வேற்றுமை இருப்பதுணராது அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதமை" என்றார்.
மேலும் அந்நூலிலே, சாதியின் பேரால் மறுக்கப்படும் காதல் திருமணம் பற்றி கூறுங்கால், " சாதி வேற்றுமை என்னும் கொடிய தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது" என்றார்.
1916ஆம் ஆண்டில் ஆரியர் எதிர்ப்பில் ஊன்றி நின்ற மறைமலையடிகளார் ஆரியரின் மொழியாகிய வடமொழி எதிர்ப்பில் கவனம் செலுத்தினார். வள்ளலார் பாடல்களில் மனமுருகியவர் அப்பாடலில் 'தேகம்' என்னும் வடசொல் இருப்பதை கண்டறிந்தார். பிறகு அதனை 'யாக்கை' என்று தனித் தமிழில் மாற்றினார். வடமொழி மிகுதியால் தமிழ் தாழ்வுறுவதைக் காணச் சகிக்காது அன்றே தனித் தமிழ் இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு முதற்படியாக 'சுவாமி வேதாசலம்' என்றுள்ள தனது வடமொழிப் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றம் செய்தார்.
1931ஆம் ஆண்டு மறைமலையடிகள் அவர்கள் உருவாக்கிய "பொதுநிலைக் கழகம்" முற்போக்கான பத்து தீர்மானங்களை நிறைவேற்றியது. அத் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றிய முடை நாற்றமெடுக்கும் தீய பழக்க வழக்கங்களுக்கு சாவு மணி அடித்தது. அத் தீர்மானங்கள் பின் வருமாறு:
1. மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.
2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியவை பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்.
3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதவர்) எல்லோரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழிபாடாற்றப் பொது மக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும்.
4. கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல் கூடாது.
5. வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுவுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.
6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.
7. கைம்பெண்ணைத் தாலியறுத்தல், மொட்டையடித்தல், வெண்புடவையுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்தில் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல் முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.
8. சாதிக் கலப்பு மணம் வரவேற்கத்தக்கது.
9. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.
10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்..
1942இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உரை நிகழ்த்திய போது அவரின் தனித் தமிழ்ப்பேச்சு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு படித்த மாணவர்களான நாராயணசாமி- நெடுஞ்செழியன் என்றும், இராமையா- அன்பழகன் என்றும், திருஞானம்- நன்னன் என்றும், கிருஷ்ணன் -நெடுமாறன் என்றும் அழகு தமிழில் பெயர் மாற்றிக் கொண்டனர். தி.க.விலிருந்து பிரிந்த தி.மு.க. மொழி உணர்ச்சியை தனித்தமிழ் இயக்கத்திடமிருந்து தான் கற்றுக் கொண்டது. அதனால் தான் அண்ணா ஆங்கிலத்தை ஆதரித்த நிலையிலும் பெரியாரைப் போல தமிழைப் பழிக்க வில்லை.
தாய்மொழிக் கல்விக்கு உதவாது பிறமொழிக் கல்விக்கு செலவிடுவோர் குறித்து பின்வருமாறு கூறினார்:
" கல்வி எல்லார்க்கும் பொதுப்பொருள் என்பது தமிழ்நெறி. நம் செல்வர்கள் நம் தாய்மொழிப் பயிற்சிக்கு உதவாமல் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! கொடிது! கொடிது! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத் தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் என்பதாம்."
மறைமலையடிகள்.1938இல் இராசாசி ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழறிஞர்களுக்கு தலைமை தாங்கி அப்போராட்டத்தை நடத்தினார். அந்தப் போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை முன் மொழிந்து மறைமலையடிகள் பேசினார். அதை வழி மொழிந்து பேசியவர்கள் ஈ.வெ.இராமசாமி, சோமசுந்த பாரதியார் ஆகியோர் ஆவார். (நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய 'தி.மு.க.வரலாறு' எனும் நூலில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.)
மறைமலையடிகள் தமது குடும்பத்தாரையும் தமிழ் காக்கும் போரில் ஈடுபடுத்தவும் தவற வில்லை. மகன்கள் திருநாவுக்கரசு, மாணிக்கவாசகம், மருமகள்கள் ஞானம்மாள் தன் கைக்குழந்தையோடும், சரோஜினி தன் மகனுடோடும் சிறை ஏகினர். மகள் நீலாம்பிகையோ இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.
1900ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை விழாக்கள், மாநாடுகள், போராட்டங்கள் எவற்றிலுமே மறைமலையடிகளை தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன.
வடமொழி ஆதிக்கத்திலிருந்து அவர் மீட்டெடுத்த தமிழ்மொழி இன்று அந்நிய மொழிகளான சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம் போன்றவற்றுக்கு ஆட்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தமிழுக்குத் தன்னை ஒப்படைத்துப் போராடிய மறைமலையடிகள் வழி நின்று அந்நிய ஆதிக்க மொழிகளை வேரறுக்க இந்நாளில் உறுதியேற்போம்...