ஊழல் வரலாற்றை சுட்டிக்காட்டினால் திமுக வுக்கு கோபம் வருவது ஏன்?
உண்மை சுடும்... ஊழல் மேலும் சுடும். அதனால் தான் திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையக் குற்றச்சாற்றுகளை நினைவுபடுத்தியதற்காக திமுக. என்ற ஊழல் முகாமின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நண்பர் க.பொன்முடி துள்ளிக் குதித்திருக்கிறார்.
திமுக செய்த ஊழல், துரோகம் குறித்த உண்மைகளைக் கூறினால் அக்கட்சித் தலைமைக்கு கோபம் வருவது வியப்பளிக்கிறது.
ஊழலின் ஊற்றுக்கண்ணான திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை; அவர் மாறவே மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வழக்கமாக பா.ம.க. மீது புழுதி வாரித் தூற்றுவது என்றால் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்ற வன்னியரை மட்டுமே பயன்படுத்தி பழக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், இப்போது மருத்துவர் அய்யாவுக்கு பதிலளிக்க முன்னாள் அமைச்சர் க.பொன்முடியை ஏவி விட்டிருப்பது தான் அந்த மாற்றம் ஆகும்.
ஒருவேளை திமுகவில் அதிக எண்ணிக்கையில் ஊழல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை சந்தித்தவர்/சந்தித்துக் கொண்டிருப்பவர் என்பதால் பொன்முடிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். எப்படி இருந்தாலும் மாற்றம் நல்லது தான். அதற்காக வாழ்த்துகள்.
நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்ததில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எந்த அளவுக்கு பங்கு உண்டோ, அதை விட அதிக பங்கு திமுகவுக்கு உண்டு.
2010-ஆம் ஆண்டில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் முடிவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த போது, அந்த அரசில் திமுக அங்கம் வகித்ததா... இல்லையா?
திமுக நினைத்திருந்தால் நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் முடிவை தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா... முடியாதா?
2009-ஆம் ஆண்டில் திமுக கேட்ட அமைச்சகங்களை ஒதுக்க மறுத்ததற்காக மத்திய அரசில் சேர மாட்டோம் என்று மிரட்டல் விடுத்து, தில்லியிலிருந்து அவசர அவசரமாக சென்னை திரும்பிய திமுக தலைமை, நீட் விவகாரத்தில் அதே ஆயுதத்தை பயன்படுத்த மறுத்தது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு நண்பர் பொன்முடி பதிலளிக்க வேண்டும்.
அதை விடுத்து நீட்டுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது, வழக்கு தொடர்ந்தது என பழைய பல்லவியையே பொன்முடி பாடிக்கொண்டிருப்பதால் பயனில்லை.
2010-ஆம் ஆண்டில் நீட்டை திமுக தடுத்திருந்தால் இப்போது நீட் குறித்த விவாதத்திற்கே வேலையில்லை. அப்போது நீட்டை தடுக்காமல் இப்போது நீட்டுக்காக குரல் கொடுத்தோம் என்பது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயல் அன்றி வேறல்ல.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகித்தது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இடம் பெற்றிருந்தார். அப்போதும் நீட் தேர்வை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அவருக்கு தரப்பட்டது. ஆனால், அதை ஏற்க முடியாது என்று கூறி நீட் திட்டத்தை விரட்டியடித்தார்.
அதனால் தான் 2009&ஆம் ஆண்டு வரை நீட் தேர்வு வரவில்லை. 2006&07 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஒப்புதல் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட்டவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.
அப்போது மட்டும் அவர் கையெழுத்திட மறுத்திருந்தால் இப்போது நீட் விலக்கு சட்டத்திற்கு ஏற்பட்ட அதேகதி தான் திமுக அரசு கொண்டு வந்திருந்த நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டத்திற்கும் ஏற்பட்டிருக்கும்; தமிழகத்தில் சமூக நீதி பிழைத்திருக்காது என்பதை எல்லாம் தெரிந்த நண்பர் பொன்முடி அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் நலன்களைக் காப்பதில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடைபிடித்த உறுதிப்பாட்டில் பத்தில் ஒரு பங்கை திமுக தலைமையும், அதன் மத்திய அமைச்சர்களும் கடைபிடித்திருந்தால் நீட் தேர்வு தமிழகத்தை நெருங்கியிருக்காது.
நீட் தேர்வு மட்டுமல்ல... தமிழக நலன் சார்ந்த அனைத்து பிரச்சினைகளிலும் திமுக செய்தது துரோகம்.... துரோகம்... துரோகத்தைத் தவிர வேறொன்றுமில்லை..
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்று கடைசி நேரம் வரை கூறி வந்த திமுக தலைமை, நாடாளுமன்றத்தில் அத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்த போது திடீர் பல்டி அடித்து ஆதரித்தது ஒன்று போதாதா திமுகவின் துரோகத்தை அம்பலப்படுத்த?
உலகப்புகழ் பெற்ற 2ஜி வழக்கில் திமுகவின் முதல் குடும்பம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு திமுக எத்தனையோ துரோகங்களை செய்தது. அந்த துரோகங்களில் ஒன்று தான் நீட் தேர்வை தடுக்காதது ஆகும்.
தமிழ்நாட்டில் ஒரு தலைமுறை மறந்திருந்த மது அரக்கனை மீண்டும் அறிமுகப்படுத்தியது திமுக தான். தமிழகத்தில் இப்போது அதிக எண்ணிக்கையில் மது ஆலைகளை நடத்தி வருவதும் திமுக தான்.
ஆனாலும், மருத்துவர் அன்புமணி இராமதாசை காப்பியடித்து, ஆட்சிக்கு வந்தால் முதல் நாள்.. முதல் கையெழுத்து மது விலக்கு என்று திமுக பேசுவது எப்படி முரண்பாட்டின் உச்சமோ, அதேபோல் தான் நீட் தேர்வை அறிமுகம் செய்த திமுக, அத்தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறுவதும் முரண்பாட்டின் உச்சம் ஆகும். ஆனால், பாவம், பொன்முடிக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திமுகவின் ஊழல்கள் குறித்த சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை உள்ளீடற்றது என்று பொன்முடி கூறியிருக்கிறார். உள்ளீடற்ற அந்தக் குற்றச்சாற்றுக்காகத் தான் திமுக தலைமை தில்லியிடம் சரண் அடைந்து கிடந்ததா? என்பதை அப்போது அரசியலுக்கு வராத பொன்முடி கட்சித் தலைமையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்,
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்,
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது,
10. வீராணம் ஊழல்,
11 (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்,
11. (ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்,
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்,
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு,
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு,
24. தொழிற்சங்க ஊழல்,
25. ஊடகங்களுக்கு மிரட்டல்,
26. மின் திருட்டு,
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்,
28. இழப்பீட்டு தொகை ஊழல்,
ஆகிய குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் திமுகவினர் ஊழல் செய்துள்ளனர் என்று தான் சர்க்காரியா ஆணையம் கூறியதே தவிர, ஊழலே நடக்க வில்லை என்று கூறவில்லை என்ற வரலாற்றை பேராசிரியர் பொன்முடிக்கு நான் சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை.
உலகம் முழுவதும் இந்தியாவுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்த 2ஜி ஊழல் வழக்கின் நாயகனே திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.இராசா தானே. இந்த ஊழலால் திமுக பயனடையவில்லை என்று பொன்முடியும், மு.க.ஸ்டாலினும் கூறுவார்களேயானால், இந்த ஊழலில் கைமாறிய பணம் கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்காக எப்படி கொண்டு வரப்பட்டது? இந்த ஊழலை மறைக்க என்னென்ன தகிடுதத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன? என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இணையதளங்களில் காணப்படுகின்றன. அவற்றை நண்பர் பொன்முடி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
திமுகவின் ஊழலை மறுக்கும் நண்பர் பொன்முடி மீதே வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்ததாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலையான ரகசியம் அனைவருக்கும் தெரியும்.
அது தவிர செம்மண் கொள்ளை வழக்கு, சென்னை சைதாப்பேட்டையில் நிலம் அபகரிப்பு வழக்கு ஆகியவையும் நிலுவையில் உள்ளன.
திமுகவைச் சேர்ந்த 16 முன்னாள் அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டு ஊழல் வரலாற்றை திமுகவை தவிர்த்து விட்டு எழுத முடியாது. ஊழல் என்றாலும் திமுக என்றாலும் ஒரே பொருள் தான். தமிழகத்தில் ஊழலை தொடங்கி வைத்தது திமுக, அதை பெருக்கி வருவது அதிமுக என்பது தான் உண்மை. இந்த உண்மையை பேசாமால் இருக்க முடியாது. இதற்காக திமுக வருந்துவதில் பயனில்லை.
நீட் தேர்வு, ஊழல் குறித்த அறிக்கையில் அந்த சொற்களை விட வன்னியர் என்ற சொல்லைத் தான் பொன்முடி அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஊழல், நீட் தேர்வு ஆகியவற்றுக்கும் வன்னியருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை. அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்ததைப் போல பா.ம.க.வை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு பொன்முடி அவரது சாதி வெறியை வெளிப்படுத்தி உள்ளார்.
திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரைச் சுற்றியிருக்கும் திமுக மூத்த தலைவர்களுக்கு எந்த அளவுக்கு சாதி வெறி பிடித்திருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
தமிழகத்தில் 89 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக திமுக விளங்குகிறது. ஆனால், சட்டப் பேரவையில் உறுப்பினரே இல்லாத பாட்டாளி மக்கள் கட்சி தான் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக விளங்குகிறது.
திமுகவோ விளம்பர அரசியலில் மட்டும் தான் ஆர்வம் காட்டுகிறது.
ஊழல், துரோகம் குறித்த உண்மைகளை சொன்னால் துள்ளிக் குதிப்பதை விடுத்து ஆரோக்கியமான, நாகரிகமான அரசியலை செய்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட திமுக முன்வர வேண்டும்...