ஈரோடு அருகே கொடுமுடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உறவுக்காரர் ஒருவரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போது விஷ்ணுபாலா என்ற இளைஞரிடம் நதியா நட்பாக பழகினார்.
விஷ்ணுபாலாவும் நதியாவும் உறவுக்காரர்கள் என்பதால் இருவரும் நெருங்கி பழகினர். இதையடுத்து நதியாவை காதல் வலையில் விஷ்ணுபாலா வீழ்த்தினார். பின்னர் நதியாவின் வீட்டுக்கு யாரும் இல்லாத நேரத்தில் வந்து போய் கொண்டிருந்தார்.
இதனிடையே நதியாவின் வீட்டிலிருந்த 15 சவரன் நகைகளை காணாததால் அவரிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். ஆண் நண்பருக்கு கொடுத்துவிட்டதாக நதியா தெரிவித்தார்.
இதையடுத்து மான பிரச்சினை என்பதால் வெளியே இந்த விவகாரத்தை கூறாமல் மகளின் காதலனை பிடிக்க பெற்றோர் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. மறுபடியும் 3 சவரன் நகைகள் பறிபோனது. இதையடுத்து நதியாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
பின்னர் நதியா மூலம் விஷ்ணுபாலாவிடம் பேச வைத்த போலீஸார் வீட்டில் தனியாக இருப்பதாக கூறி அவரை வரவழைத்தனர். பின்னர் அவர் வந்தவுடன் போலீஸார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் ஆண் வேடத்தில் இருந்தது பெண் என தெரியவந்தது.
அவர் காங்கேயத்தை சேர்ந்த சரோஜா என்பதும் பெண்கள் மீதான ஈர்ப்பால் ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்...