ஐசன்ஹோவர் (Dwight Eisenhower).
டேவிட் அடேர் (David Adair).
ஏரியா 51...
மனதின் கட்டுப்பாட்டால் இயங்கும்_ பறக்கும்தட்டு எஞ்சினை சிம்பையாட்டிக்...
வேற்றுகிரகவாசிகள் என்று சொல்லும்போது அனைவருக்கும் முன்னால் வந்து நிற்கும் ஒரே பெயர் 'ரோஸ்வெல்'. இன்று கூட ரோஸ்வெல் நகரத்துக்கு நீங்கள் சென்றால், அந்த நகரம் எங்கும் பறக்கும் தட்டுகளையும், வேற்றுகிரகவாசிகளையும் காணலாம். பொம்மைகளாகவும், விளம்பரங்களாகவும் ஒவ்வொரு கடைகளிலும், வீடுகளிலும், பெரும் சந்தைகளிலும் அங்குள்ள மக்கள் வைத்திருப்பார்கள். அந்த நகரமே தன்னை ஒரு வேற்றுகிரகவாசிகள் நகரமாக மாற்றிக் கொண்டுள்ளது. வேற்றுகிரகவாசிகளுக்கென காட்சிச்சாலைகளும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு, குறிப்பாக ரோஸ்வெல்லுக்கு வந்ததை அந்த நகர மக்கள் நம்புகிறார்கள்.
ரோஸ்வெல் சம்பவங்களை நாம் எடுத்துக் கொண்டால், ஒரு இடத்தில் முக்கால் மைல் பரப்பளவுக்கு இனந்தெரியாத ஏதோ ஒன்று வெடித்துச் சிதறியிருந்தது. இன்னுமொரு இடத்தில் வெடிக்காத முழுமையான பறக்கும் தட்டு ஒன்றும், நான்கு வேற்றுகிரகவாசி்களும் இருந்தன. அவற்றில் மூன்று இறந்து போயிருந்தன. நான்காவது மிகவும் அடிபட்டிருந்தும், உயிர் இருந்ததாகத் தெரிந்தது. மூன்றாவது இடத்தில் வேற்றுகிரகவாசிகள் கொண்டு வரப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த மூன்று சம்பவங்களிலும் சம்மந்தப்பட்டவர்கள் வேறு வேறு நபர்கள். ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள். இவர்கள் அனைவரும் எப்படி ஒரே விதமான பொய்யைச் சொல்ல முடியும்? மூன்று சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்க இராணுவப் போலீசாரினால் ஒரே மாதிரி மிரட்டப்பட்டுமிருக்கின்றனர்.
அமெரிக்க அரசு சொல்வது போல முதல் சம்பவத்தில் வெடித்தது வானிலையை ஆராயும் பலூன்தான் என்றால், அதன் பகுதிகளை அகற்ற அரசு ஏன் அவ்வளவு தீவிரம் காட்ட வேண்டும்?சாதாரண பலூன்தானே! வெடித்த பலூனின் சிறிய துண்டுகள் கூட அந்த இடத்தில் இருக்காமல் ஏன் அகற்றப்பட வேண்டும்? இரண்டாவது சம்பவத்தில் அந்த இன்ஜினியர் கண்டது வேற்று கிரகவாசிகள் இல்லை, டம்மிப் பொம்மைகள்தான் என்றால், ஒரு பொம்மையைக் கூட சரியாகக் கணிப்பிட முடியாத அளவுக்கு ஒரு பொறியியலாளர் இருக்க முடியுமா? 1947ம் ஆண்டு அவ்வளவு தத்ரூபமாக பொம்மைகள் தயாரிக்கப்பட்டனவா? என்ற கேள்விகள் மேலும் மேலும் சந்தேகங்களையே வலுக்கப்பண்ணுகின்றன.
அமெரிக்க அரசு சொல்லும் விசயங்களை மக்கள் யாரும் நம்பவில்லை. ஆனால், இவற்றை ஆராய்ந்தவர்கள் வேற்றுகிரகவாசிகள் வந்ததாகவும், பறக்கும் தட்டுகள் விழுந்து வெடித்ததாகவும் முழுமையாக நம்புகின்றனர். அத்துடன் ரோஸ்வெல் சம்பவத்தில் இரண்டு பறக்கும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் நம்புகிறார்கள். அந்த இரண்டு பறக்கும் தட்டுகளும், எதிரிகளாகவோ அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகவோ இருக்கலாம். எதிரிகளாக இருந்து, இரண்டும் சண்டையிட்ட போது, வெடித்தும், கீழே விழுந்தும் விபத்துகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வேற்று கிரகவாசிகளை அமெரிக்க அரசு பாதுகாப்பாக இன்றும் 'ஏரியா 51' (Aria 51) என்னுமிடத்தில் வைத்திருக்கிறது என்றும், அதில் உயிருடன் ஒரு வேற்றுகிரகவாசி இப்போதும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட பறக்கும்தட்டையும் 'ஏரியா 51' க்குக் கொண்டு சென்று, அதைப் பல விதங்களில் பரிசோதனைகளும் செய்திருக்கிறார்கள் என்றும், பல புதிய நவீன தொழில்நுட்பங்களை அதன் மூலம்தான் அமெரிக்கா பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அறிவைப் பெற்றதும், அணுசக்தி பற்றிய அறிவைப் பெற்றதும் இதன் மூலம்தான் என்கிறார்கள். இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் இருக்கிறது என்று நாம் குழம்பிப் போகிறோம். இந்த நிலையில் நமக்குக் கிடைக்கும் வேறு ஒரு தகவல் நம்மை ஒட்டுமொத்தமாகப் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்ததாக அந்தத் தகவல் இருப்பதால் மேலதிக உறுத்தலும் அதில் ஏற்படுகிறது.
1953ம் ஆண்டிலிருந்து 1963ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் ஐசன்ஹோவர் (Dwight Eisenhower). இவர் இரண்டாம் உலகப் போரின்போது, உயர் இராணுவத் தளபதியாக விளங்கியவர். ஐந்து நட்சத்திரங்கள் பெற்ற ஜெனரல் பட்டம் பெற்றவரும் கூட. இந்தத் தகுதிகளால் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியை அடைந்தவர் இவர். இவர் வேற்றுகிரகவாசி்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று சொல்லப்படுவதுதான் இன்று மாபெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் மூன்று முறை வேற்றுகிரகவாசிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது, அமெரிக்க அரச அதிகாரிகள் மூலமாகவே வெளிவந்திருக்கிறது. இதை நம்புவதா விடுவதா என்பதை உங்கள் பொறுப்பில் விட்டுவிடுகிறேன். ஆனால் உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த சூடான செய்திகளில் இதுவும் ஒன்றாக இருப்பது என்னவோ நிஜம். நமக்குத்தான் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனவே. அதில் இவை பற்றி அறிய ஏது நேரம்? இங்கு இவற்றை நான் சொல்வது, இவையெல்லாம் உண்மை, பொய் என்பதைத் தாண்டி, இப்படியும் உலகத்தில் செய்திகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத்தான்.
அமெரிக்க ஜனாதிபதியான ஐசன்ஹோவர் வேற்றுகிரகவாசிகளுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தியபோது, தானும் அங்கு இருந்ததாகச் சொல்கிறார் கேர்க்ளின் மானுவேல்
(Kirklin Manuel). ஐசன்ஹோவர் 1955ம் ஆண்டு பெப்ரவரி மாதம்11ம் தேதி, நியூ மெக்ஸிகோவில் இருக்கும் ஹொலோமான் விமானப் படைத்தளத்தில் (AFB Holloman)
வேற்றுகிரகவாசி்களைச் சந்தித்தார் என்கிறார் கேர்க்ளின். அதே விமானப் படைத்தளத்தில் உயர் பதவியில் இருந்தவர்தான் இந்த கேர்க்ளின். அது மட்டுமில்லாமல், அப்போலோ மிசனின் பயிற்சியாளராகவும் இருந்தவர் இவர். இவ்வளவு உயர் பதவியில் இருப்பவர் இப்படிப்பட்ட பொய்யைச் சொல்வாரா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அதே நியூ மெக்ஸிகோவில்தான் பறக்கும் தட்டு விழுந்த சம்பவங்கள் நடந்த இடங்களும் இருக்கின்றன. அடிப்படையில் ஐசன்ஹோவர் மிகவும் துணிச்சலானவர். அவர் ஜனாதிபதியாக இருந்தும் வேற்றுகிரகவாசி்களைச் சந்திக்க அவரது துணிச்சலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. வேற்றுகிரகவாசிகள் ஐசன்ஹோவருடன் 'டெலிபதி' (Telepathy) முறையில் பேசியதாகவும் தகவல்கள் சொல்கின்றன. யாருமே நம்ப முடியாத கதைதான் இது. ஆனால் அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களும், அந்தச் சம்பவங்களை வெளியில் கொண்டு வந்த நபர்களும் இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்ற முடிவுக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன.
பறக்கும் தட்டு விழுந்ததைக் கூட நம்பலாம். ஆனால் வேற்றுகிரகவாசிகளை உயிருடன் சந்தித்துப் பேசியதை எப்படி நம்ப முடியும்? ஆனால் அதையும் இன்னுமொரு சம்பவம் உடைத்தெறிந்தது. ஒன்றைப் பொய் என்று சொல்லலாம். இரண்டைப் பொய்யென்று சொல்லலாம்,
மூன்றைப் பொய்யென்று சொல்லலாம். கேள்விப்படும் அனைத்தையும் எப்படிப் பொய்யென்று சொல்ல முடியும்? அடுத்த சம்பவம் இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் நேரடியாகக் கொடுத்த பேட்டிகளுடன், சாட்சியத்துடன் அது வெளிவந்திருக்கிறது.
எந்த இடத்தில் வேற்றுகிரகவாசி்களையும், பறக்கும் தட்டையும் வைத்து, அமெரிக்க அரசு இரகசியமாக ஆராய்ச்சி செய்கிறது என்று உலகம் முழுவதும் சந்தேகப்படுகிறதோ, அந்த இடத்திலிருந்தே இந்தச் சாட்சி வெளிவந்திருக்கிறது. இந்தச் சாட்சி சொல்வதை நீங்கள் நம்பினால், வேற்றுகிரகவாசி்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் நீங்கள் நம்புவீர்கள். இல்லை இதுவும் பொய்தான் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், இனி எத்தனை உண்மைகள் வெளிவந்தாலும் உங்களால் நம்ப முடியாது.
டேவிட் அடேர் (David Adair)
சர்வதேச ரீதியாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் முதல்தர விற்பன்னர். உலகில் வாழும் புத்திஜீவி எனப்படும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். தனது பதினோராவது வயதில் முதல் ராக்கெட்டை இவர் தயாரித்தார். 17வது வயதில் ராக்கெட் தயாரிப்பில் அமெரிக்க விமானப்படையின் பரிசுகளை வென்றார். அவர் மிகவும் நூதனமான, புதுமையான ஒரு ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பரிசோதனைக்குக் கொண்டுவந்தார். Electro Magnetig Fusion மூலமாகத் தொழிற்படும் ராக்கெட் எஞ்சினைத் தயாரித்தார். அவர் தயாரித்த ராக்கெட்டுக்கு நிதியுதவி அளித்தவர் அமெரிக்க காங்கிரஸில் இருந்த ஒரு பிரபலமானவர்.
அந்தப் பிரபலத்தின் மூலம் இந்த ராக்கெட்டைப் பரீட்சித்துப் பார்க்க, 'ஏரியா 51' இல் அனுமதி வாங்கிக் கொண்டார்.அவர் தயாரித்த ராக்கெட் சில செக்கன்களுக்குள் பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் எடுக்கக் கூடியது. இவரின் இந்தத் திறமையைப் பார்த்து வியந்த 'ஏரியா 51' இன் அதிகாரிகள் சிலர், சில முடிவுகளை எடுத்தனர்.
'ஏரியா 51' இன் அதிகாரிகள் எடுத்த முடிவின்படி, 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ஜெனரல் கர்டிஸ் லெமே(Gen. Curtis Lemay) என்பவரால் 'ஏரியா 51' க்கு அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த இடத்தில் 'ஏரியா 51'பற்றி நான் சிறிது சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நிவாடா (Nevada) பகுதியில் அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட இரகசியத் தளம் ஒன்றுதான் 'ஏரியா 51' (Aria 51).
தன்னுள்ளே ஒரு பாலைவனம் போல ஒரு பகுதியையும், மிகப்பெரிய ஏரியையும் கொண்டது 'ஏரியா 51'. இது எவ்வளவு கிலோமீட்டர் பரப்பளவுள்ளது என்பதே தெரியாத அளவுக்கு மிகப் பெரியது. இந்த 'ஏரியா 51' இல்தான் அமெரிக்காவின் இராணுவ, விமான,விண்வெளிப் பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்படுகின்றன. 'ஏரியா 51' இன் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற மிகக் கடுமையான வாக்கியங்களுடன் எல்லைப் பகுதி வேலிகள் காணப்படுகின்றன. அங்கே என்ன நடக்கின்றன என்பது யாருக்குமே தெரியாத இரகசியம். அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன் வழி நடத்தப்படுகிறார்கள்.
இங்கு வேற்றுகிரகவாசி்கள் உயிருடன், காவலில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், பறக்கும் தட்டுகள் இருக்கின்றன என்றும் பரவலான வதந்திகள் இருக்கின்றன.'ஏரியா 51' க்கு ஜெனரல் கர்ட்டிஸ் லெமே என்பவரால் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சென்றதும் அந்தக் கட்டடத்தின் பிரமாண்டத்தைக் கண்டு பிரமித்துப் போனார் அடேர். பல விமானங்களை ஒன்றாக நிறுத்தி வைத்திருக்கும் அளவுக்கு அது பிரமாண்டமாக இருந்தது. அந்தக் கட்டடத்தின் நிலத்தடிச் சுரங்கத்தினுள் அடேர் அழைத்துச் செல்லப்பட்டார். பல நூறு மீட்டர் கீழே சென்றதும் அங்கும் பிரமாண்டமான கட்டட அமைப்புக் காணப்பட்டது.
நிலத்துக்குக் கீழே இவ்வளவு பெரிய கட்டடம் இருக்கும் என்பதை அவரால் கற்பனை பண்னவே முடியவில்லை. இவர்களை அழைத்துச் சென்றவர் கட்டடத்தின் பூட்டப்பட்ட வாசலில் இருந்த ஏதோ ஒன்றில் கையை வைத்தார். அது உடனே தற்சமயம் இருக்கும் ஸ்கானர் போல அவரது கைகளை ஒளியினால் வருடியது.கண்ணிலும் காமெரா வெளிச்சம் போல மின்னியது. உடன் கதவு திறந்து கொண்டது. அதாவது கைகளில் உள்ள கைரேகைகளை ஸ்கான் செய்து, பின்னர் கண்களைப் படம்பிடித்து, அந்த நபரைக் கண்டுகொள்ளும் தொழில்நுட்பத்தால், கதவுகள் திறந்தன.
இது நடக்கும் காலம் 1971ம் ஆண்டு. அந்தக் காலத்தில் லாப்டாப்புகள் இல்லை. மோடம்கள் இல்லை, ஃபாக்ஸ் இயந்திரம் இல்லை, செல்ஃபோன்கள் இல்லை. வீடியோ காசட் ரிக்கார்டர்கள் இல்லை, ஸ்கானர்கள் இல்லை, அதிகம் ஏன் கையடக்கமான கால்குலேட்டர்களே இல்லை. இவையெல்லாம் பல ஆண்டுகளுக்கு அப்பால்தான் வெளிவந்தன. அப்படி இருக்கையில் கைகளை ஆராயும் ஸ்கானரும், கண்களின் ரெட்டினாவைக் கண்டறியும் ஸ்கானருமான தொழில்நுட்பம் 1971ம் ஆண்டு எப்படி 'ஏரியா 51' இல் சாத்தியமாயிற்று? இதை யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்? வாசிப்பதை நிறுத்திவிட்டு சற்றுக் காலத்தால் பின்னோக்கிச் சென்று சிந்தித்துப் பாருங்கள்.
இன்று சொல்லும்போது சாத்தியம் போல இருக்கும் இவை, நாற்பது வருடங்களுக்கு முன்னர் எப்படிச் சாத்தியம்? கதவுகளைத் திறந்து உள்ளே சென்ற அடேர், அங்கே இருந்த வித்தியாசமான சூழ்நிலையை அவதானித்தார்.
மிகப்பெரிய ஹாலின் நடுவே மேடை போன்ற ஒன்றில், ஒரு பாடசாலை பஸ் அளவுக்குப் பெரிய, பச்சை நிறமான ஏதோ ஒன்று இருக்கக் கண்டார். அது என்ன என்றே முதலில் அடேர் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் சமாளித்துக் கொண்ட அவர், அது 'ஏரியா 51' இல் பணிபுரிபவர்களால் வடிவமைக்கப்பட்ட ராக்கெட் சம்பந்தமான ஒன்று என்ற முடிவுக்கு வந்தார். 'அதன் அருகே செல்லலாமா?' என்று அவர் கேட்டதற்கு, 'போகலாம்' என அவர்கள் அனுமதியளித்தனர். அதன் அருகே சென்று அதைப் பார்த்ததும் மிகவும் வித்தியாசமான மனநிலை தோன்றுவது போன்ற உணர்வு அவருக்குத் தோன்றியது. 'அதைத் தொட்டுப் பார்க்கலாமா?' என்று மீண்டும் அவர்களிடம் கேட்டார். அதற்கும் அவர்கள் அவருக்கு அனுமதி அளித்தனர்.
சொல்லப் போனால், இவரை அவர்கள் அழைத்தது கூட அதற்குத்தான்.
அடேர் மெதுவாக அதன் மேல் தனது கையை வைத்தார். அப்போதுதான் அந்த அதிசயத்தை அடேர் கண்டார்.அந்தப் பிரமாண்டமான பொருளில், இவர் கைவைத்த இடத்தில் நீலமும் வெள்ளையுமாக வெளிச்சங்கள் வளையங்களாக, அவர் கைகளில் இருந்து அலை அலையாகத் தோன்றியது. ஆடிப் போனார் அடேர். அத்துடன் அந்தப் பொருள் இதுவரை தான் எங்கும் தொட்டறியாத ஒரு உலோகத்தால் உருவானது என்றும் புரிந்து கொண்டார். ஏற்கனவே ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததால், பல உலோகங்களின் பரிச்சயம் அவருக்கு இருந்தது.
ஆனால் இது மிகவும் கடினமானதும், அதே நேரம் மிகவும் மிருதுவானதுமாகத் தோன்றியது.
உடனடியாகக் கையை எடுத்த அடேர், அந்தப் பொருளின் உள்ளே எட்டிப் பார்க்க விரும்பினார். அந்தப் பொருளின் ஒரு பக்கத்தில், மோதி வெடித்தது போலப் பெரிய ஓட்டையொன்று காணப்பட்டது. அதன் மூலம் தனது கையை வைத்து எட்டிப் பார்த்தார். அதனுள்ளே, வண்ண வண்ணமான திரவங்கள் நிரம்பிய ஃபைபர் குழாய்கள் போன்ற மிக நுண்ணிய குழாய்கள் ஒளிர்ந்தபடி லட்சக்கணக்கில் ஒன்றுடன் ஒன்று இணைந்து,நடுப்பகுதியைப் போய் அடைந்தன. கிட்டத்தட்ட ஒரு மனிதனின் மூளையில் நரம்புகள் மின்னைக் கடத்துவது போல அவை தொழில்பட்டன. அடேர் உடனே கையை எடுத்துவிட்டார். உடனடியாக அவருக்கு அது என்னவென்று புரிந்து போயிற்று.
அவர் அங்கிருந்தவர்களிடம், "இது நிச்சயமாகப் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல. இது
வேற்றுக்கிரகவாசிகளின் ராக்கெட்டின் எஞ்சினாக இருக்க வேண்டும். இது பூமியின் தொழில்நுட்பமே இல்லை" என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் முகம் கறுக்கத் தொடங்கியது. அதனால் சில வாக்குவாதங்கள் அடேருக்கும் அவர்களுக்கும் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் ஏற்பட்ட நேரத்தில் அந்தப் பொருளின் மீது தற்செயலாகக் கையை வைத்தார் அடேர். ஆனால் இப்போது சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்கள் கைகள் பட்ட இடத்தில் தோன்றின. ஆனால், இதற்கு முன்னர் இதே இடத்தில் நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் இருந்தன. அந்த விவாதங்களில் தன்னை விடுவித்துக் கொண்டு சிறிது நேரத்தில் மீண்டும் கை வைத்தபோது, பழையபடி நீலமும் வெள்ளையுமாக ஒளி வளையங்கள் தோன்றின.
அதாவது தான் அமைதியாக இருக்கும் மனநிலையில் அது நீலமும் வெள்ளையும் கலந்த ஒளி வளையங்களாகவும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில், சிவப்பும் ஆரஞ்சும் கலந்த ஒளி வளையங்களாகவும் தன்னை மாற்றுகின்றது என அடேர் கண்டுகொண்டார். மனிதனின் மனநிலையை அறியும் தொழில்நுட்பம் அதில் உள்ளதைப் புரிந்துகொண்டார்.
அந்தப் பிரமாண்டமான பொருள் ஒரு பறக்கும் தட்டின் எஞ்சின் என்றும் அந்த எஞ்சின் அதை ஓட்டுபவரின் எண்ணங்களின் முடிவுகளுக்கும், வேகத்துக்கும் ஏற்ப இயங்கும் எனவும், அந்தப் பறக்கும் தட்டு பூமியில் மோதியதால் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றும் அடேர் புரிந்து கொண்டார். மனதின் கட்டுப்பாட்டால் இயங்கும் எஞ்சினை 'சிம்பையாட்டிக்' (Symbiotic) எஞ்சின் என்று சொல்வார்கள். இது பற்றிய ஆராய்ச்சிகள் மனிதர்களிடையே இப்போது இருக்கிறது.
பறக்கும் தட்டில் அமர்ந்து செல்பவர்களின் எண்ணங்களுடன் இந்த சிம்பையாட்டிக் எஞ்சின் தொடர்புபட்டு, அவர்கள் நினைப்பது போலப் பறக்க ஆரம்பிக்கும். இதற்கு எந்த ஒலியும் இருக்காது. தனக்கு நடந்தவற்றையெல்லாம், தனது கடமைக் காலம் முடிவடைந்ததும் வெளியுலகத்துக்குக் கொண்டு வந்தார் அடேர். பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளாகச் சொன்னார். இவர் சொன்னதை இதுவரை அரசு ரீதியாக யாரும் மறுக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், இவற்றை நம்புவதா? விடுவதா என்பதே பெரும் சர்ச்சையாக மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இவையெல்லாம் உண்மையாக இருக்க முடியாது, பொய்தான் என்று சொல்வதற்கும் நம்மிடம் ஒரு காரணம் உண்டு. இந்த வேற்றுகிரகவாசிகள் ஏன் அமெரிக்காவில் மட்டும் வரவேண்டும்? ஏன் அவை மற்ற நாடுகளுக்கு வரவில்லை? அமெரிக்கர்கள் எப்போதும் விளம்பரப் பிரியர்கள். அந்த விளம்பரங்களினால் ஏற்படும் பிரபலத்துக்காகப் பொய் சொல்பவர்கள்.அதனால்தான் இவர்கள் எல்லாரும் இந்த வேற்றுகிரகவாசி, பறக்கும் தட்டுகள் விசயத்தில் பொய் சொல்கிறார்கள் என்ற காரணம் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவோ மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தான்.
வேற்றுகிரகவாசிகள் ஏன் அமெரிக்காவைச் சுற்றியே வருகின்றன? மற்ற நாடுகளுக்கு அவை ஏன் வரவில்லை என்பது ஒரு சரியான கேள்வியாகவே படுகிறது. ஆனால் உண்மையாகவே வேற்றுகிரகவாசிகள் அமெரிக்காவுக்கு மட்டும்தான் வந்து போனவையா என்று நாம் ஆராய்ந்த போது, நாம் நினைத்தே பார்க்க முடியாத சம்பவங்கள் அமெரிக்கா தவிர்ந்த மற்ற நாடுகளிலும் நடந்துதான் இருக்கின்றன. இந்தச் செய்திகள் நாம் மேலே சொன்ன காரணத்தை அடித்து நொறுக்குகின்றன. சொல்லப் போனால், ரோஸ்வெல்லை விட அதிக நம்பிக்கையும், உண்மைத் தன்மையும் வாய்ந்த பறக்கும் தட்டுச் சம்பவம் ஐரோப்பாவில் நடந்திருக்கிறது. ஆம்! அந்தச் சம்பவம் ஜெர்மன் நாட்டையும், பெல்ஜியம் நாட்டையும் பிரிக்கும் எல்லையில் உள்ள, பெல்ஜியம் நாட்டுக்குச் சொந்தமான ஒரு ஊரில் நடந்தது. அந்தச் சம்பவம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்?