10/07/2018

இப்படிப்பட்ட குருவும் இருக்கிறார்கள்.. மாணவர்களின் சேவகரான ஆசிரியர்..


கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் பிரஹ்மவர் தாலுக்காவில் உள்ளது பாரலி கிராமம். இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அருகில் உள்ள பகுதியில் இருந்து பள்ளிக்கு வர மூன்று கிலோமீட்டர் தூரம் காடுகளை கடந்து வரவேண்டியுள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளியில் இருந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. ஆனால், இத்தகைய அவலத்தை தனி ஆளாக இருந்து தடுத்தவர் ஆசிரியர் ராஜாராம். அறிவியல் மற்றும் கணித ஆசிரியரான ராஜாராமிடம் நியூஸ் மினிட் பேட்டி எடுத்து அவர் மேற்கொண்ட பணிகள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கு மாணவர்கள் வரமுடியாதது குறித்து ஆசிரியர் ராஜாராம் கூறுகையில், “சிறுவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவதற்கு பாதுகாப்பான சாலைகள் இல்லை. காடுகள் வழியாக சேரும் சகதியாகத்தான் பாதைகள் உள்ளன. சாலை வசதியில்லாததால் பெரும்பாலும் பெண் பிள்ளைகள் இடையில் நின்றுவிடுகிறார்கள். வீட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் என்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.

மாணவர்களின் நிலையை கண்டு கவலை அடைந்த ராஜாராம், ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். பெங்களூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் மாணவர் விஜய் ஹெக்டேவை சென்று பார்த்துள்ளார். இருவரும் சேர்ந்து அடுத்த என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்து புதிய முடிவை எடுத்துள்ளனர்.
               
இதுகுறித்து ராஜாராம் கூறுகையில், ““பள்ளிக்கு வரும் மாணவர்கள் தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பள்ளியையே மூடிவிடும் அபாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். ஒருநாள் எத்தனை மாணவர்கள் இடையில் நின்றுவிட்டார்கள் என்று கணக்கிட்டேன். எனக்கு மிகவும் கவலை உண்டானது. ஒவ்வொரு வாரமும் 5 முதல் 6 மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. என்னுடைய முன்னாள் மாணவர் விஜய் ஹெக்டே என்பவரை அழைத்தேன். அவரிடம் இடையில் நிற்கும் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவர பஸ் ஒன்று வாங்க வேண்டும் என்று கூறினேன்.” என்றார்.

விஜய் ஹெக்டே, மற்றொரு முன்னாள் மாணவர் கணேஷ் ஷெட்டி மற்றும் ஆசிரியர் ராஜாராம் மூவரும் சேர்ந்து பணம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவழியாக பணம் சேர்ந்த பின்னர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பஸ் ஒன்றினை வாங்கியுள்ளனர். பஸ் வாங்கிவிட்ட நிலையில், அதற்கு டிரைவர் நியமிக்க வேண்டும். டிரைவரை வேலைக்கு அமர்த்தினால் குறைந்தபட்சம் ரூ7 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டும். அவ்வளவு தொகையை ஆசிரியர் ராஜாராமால் கொடுக்க முடியவில்லை. அதனால், பஸ்ஸை தானே இயக்கலாம் என்று ராஜாராம் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்த பிறகு ராஜாராமிற்கு பல்வேறு பணிகள் வருகிறது. பஸ் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும், அதற்கு உரிமம் பெறவேண்டும். இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
               
பின்னர், ஓட்டுவதற்கு உரிமம் பெற்ற பின்னர், பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்களை அழைத்து வரும் பணியை தொடங்கினார். அவர் பேருந்தில் மாணவர்களை அழைத்து வர தொடங்கிய பின்னர், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 50-இல் இருந்து 90 ஆக உயர்ந்தது. காலையில் சீக்கிரமாகவே மாணவர்களை அழைக்க பஸ்ஸை எடுத்துக் கொண்டு ராஜாராம் கிளம்பிவிடுவார். காலை 9.20 மணிக்குள் 4 முறை பிக் அப் செய்துவிடுவார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “பள்ளி காலை 9.30 மணிக்கு தொடங்கும். குறித்த நேரத்திற்குள் அனைத்து மாணவர்களும் வருவதை உறுதி செய்துவிடுவேன். நான் உட்பட மூன்று ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கிறோம். தலைமை ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். மூன்று ஆசிரியர்களில் ஒருவர் பள்ளிக்கு சீக்கிரமாகவே வந்துவிடுவார். முதல் முறை மாணவர்கள் அழைத்து வரும் போது அவர் பள்ளியில் இருப்பார். பள்ளியில் மாணவர்களை விட்டுவிட்டு அடுத்தடுத்த பிக் அப்பிற்காக சென்றுவிடுவேன். அதேபோல், மாலையில் அனைத்து மாணவர்களையும் நான் அவர்களது வீடுகளில் விட்டுவிட்டு வரும் வரை ஆசிரியர்கள் காத்திருப்பார்கள். மாணவர்களை எல்லோரையும் விட்டுவிட்டு நான் பஸ்ஸை நிறுத்திவிட்டு செல்வேன்” என்றார்.
       
பேருந்திற்கு இன்சூரன்ஸ் செய்ய தனது சொந்த பணத்தை செலவிட்ட ஆசிரியர் ராஜாராம், வண்டிக்கு டீசலும் போடுகிறார். தற்போது, பள்ளிக்கு வரும் பாதையில் சாலை அமைக்க அவர் விரும்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பள்ளியைச் சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல், பாதையும் அமைக்க விரும்புகிறேன். மாணவர்கள் அதில் விளையாட முடியும். பிரச்னை என்னவென்றால் என்னிடம் பணம் இல்லை. உதவிகேட்டு பள்ளியின் முன்னாள் மாணவர்களை தேடிச் செல்கிறேன். இருப்பினும், இந்தப் பிரச்னைகளை விரைவில் கடந்துவிடுவோம். விளையாட்டு மற்றும் மற்ற நடவடிக்கைகள் மூலம் பள்ளிக்கு மாணவர்கள் வருவதை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

ராஜாராம் போன்ற ஆசிரியர்கள் கிடைப்பது அவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.