நன் மக்கள் கூற்றை கேளுங்கள்.... தெரிந்து கொள்வதில் கெடுதல் இல்லை..
உடம்பைச் சாராத ஆன்மா..
அதுவே நீ என்ற தியானப் பகுதி இது..
ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு.
அதாவது, உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று.
இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன், அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான்.
அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான்.
உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்தும் விடுபடுகின்றான்.
ஏனெனில் மரணம் உடம்பிற்கு மட்டுமே.
சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான்.
உடம்பு வீழ்ந்த பிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.
ஹம்ஸ: சுசிஷத் வஸுரந்தரிக்ஷசத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத் I
த்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத் II (கட 2.1:2)
பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பத், அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் (SPACE) காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது , உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது , யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.
ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.
எங்கும் நிறைந்த ஒன்றாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்று ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.
விருந்தினர் தெய்வமாகக் கருதப்பட வேண்டும் என்கிறது தைத்த்ரீய உபநிஷதம்.
ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.
சங்கு, சிப்பி, முது, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை நிலத்தில் தோன்றுபவை.
பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும், அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக தேவசக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த தேவசக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே ‘யாகத்தில் தோன்றுவது’ என்று கூறப்பட்டது.
மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையகவும் ஆன்மா உள்ளது.
சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரிய வரும்.
சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது.
இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது...