தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன.
அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்.. வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.
நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...