பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல் நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.
இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.
சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம். அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும் போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.
சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.
சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது.
எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், டென்ஷனும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.
சிலருக்கு ரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், ரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு ரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.
எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்...