நம்மை விழுங்க காத்திருக்கும் மீத்தேன் திட்டம் என்ற பெரும் பூதம் பற்றி அதன் பின்னணியில் உள்ள மற்றுமொரு சதி யை பற்றி.. அதனால் விளைய போகும் மஹா ஆபத்தை பற்றி நாம் இந்த நேரத்தில் கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும்.
மீத்தேன் திட்டம் வெறும் மீத்தேன் வாயு எடுக்க தான் என்று நீங்கள் எண்ணி இருந்தால் மன்னிக்கவும் இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் பின்னணி நோக்கம் இன்னும் இருக்கிறது. இந்த மீத்தேன் திட்டம் தான் இப்போது ஹைட்ரோ கார்பன் என்று கொஞ்சம் பெயர் மாற்றம் செய்ய பட்டு வந்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்பது இதன் பொது பெயர். இதை ஆபத்து என்று பார்க்கும் முன் இது என்ன என்பதை அறிவியல் ரீதியாக கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
மீத்தேன் என்பது ஒரு கரிம சேர்மம் . அதாவது ஒரு கார்பன் அணுவும் 4 ஹைட்ரஜன் அணுவும் இணைந்த ஒன்று. (இதில் ஒரு கார்பன் அனுக்கு பதில் இரண்டு இருந்தால் அது ஈத்தேன் 3 இருந்தால் ப்ரொபென் 4 இருந்தால் பியூட்டேன்..... இப்படி எண்ணிக்கை கூட கூட பென்டென் ,ஹெக்ஸேன் என பெயர் மாறிக்கொண்டு போகும் 10 கார்பன் அணு இருந்தால் டெக்கேன் இந்த ...'அந்த யேன் இந்த யேன் 'என்று எல்லாவற்றிக்கும் பொது பெயர் தான் ஹைட்ரொ கார்பன்)..
இதில் மீத்தேன் என்பது பொதுவாக கடல் படுக்கைகளில் ,சதுப்பு நிலங்களில், பூமியின் ஆழத்தில் என்று பல இடங்களில் கிடைக்கிறது இது ஒரு இயற்கை எரி வாயு.
சானியில் இருந்து எடுக்கிறார்களே கோபர் கேஸ் ...அது கூட மீத்தேன் தான்.
மீத்தேன் எங்காவது கசிந்தால் அதை நம்மால் கண்டு பிடிக்க முடியாது காரணம் அதற்கு சுத்தமாக மணம் கிடையாது. அப்புறம் நிறமும்.... அதனால் இதை கண்டறிய கந்தகதை கொஞ்சம் கலந்து விடுவார்கள்.
இது சுவாசிக்க விஷ தன்மை கொண்டது அல்ல (ஆக்சிஜன் குறைவான இடத்தில் சுவாசித்தால் கொஞ்சம் தலை சுற்றும்.. மயக்கம் வரும் அவ்வளவு தான்). ஆனால் இது வேறு விதமாக மனித குலத்தை பாதிக்க கூடியது குறிப்பாக கரியமில வாயு என்று சொல்ல கூடிய கார்பன்டை ஆக்ஸைடு நமது வளிமண்டலதில் என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ.. உலக வெப்பமிமாவதற்கு எவ்வளவு காரணமாக இருக்குமோ... அதை விட 5 மடங்கு அதிகமாக அந்த காரியங்களை செய்ய கூடியது மீத்தேன்.
இது ஒரு பக்கா க்ரீன் ஹவுஸ் வாயு.
எரி பொருளாக பயன்படுதப்படுவது மற்றும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவது ..(அதாவது மின் உற்பத்தி செய்யும் டர்பன்க்கு நீராவி உண்டு பண்ண...) இதான் இதன் முக்கிய பயன் பாடுகள்.
அறிவியல் போதும் இப்போ ஆபத்திற்கு வருவோம்.
சதுப்பு நிலம்.. கடல் படுக்கை.. நில கழிவுகள்....என்று மட்டும் இல்லாமல் பூமியில் ஆழத்தில் பல லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதைக்க பட்ட தாவரங்கள் நிலக்கரி படுக்கைகளாக படர்ந்து இருக்கும் அந்த பாறை இடுக்கிலும்..அந்த நிலக்கரி படுக்கைகளுக்கு இடையில் மாட்டி கொண்டும் நிறைய அளவில் இருக்கிறது இந்த மீத்தேன். அதுவும் எக்க சக்க அளவில் தமிழ் நாட்டில் இருக்கிறது என்பது தான் பல வல்லூறுகளின் கண்ணை உறுத்தி விட்ட விஷயம்.
நாகை திருவாரூர் தஞ்சாவூர் (நல்ல டெல்டா விவசாய இடமா பாத்து.. ) பூமிக்கு அடியில் எக்க சக்க மாக உள்ளது இந்த மீத்தேன். அதை உறிஞ்சி எடுக்க தான் இப்போது தயாராகி விட்டார்கள் அரக்கர்கள். சரி பூமிக்கு அடியில் சும்மா சிவனேன்னு இருக்கிறதை உறிஞ்சி எடுத்துட்டு போறாங்க என்ன பிரச்னை என்று விட்டு விட முடியாது .காரணம் இதில் எல்லாமே பிரச்னை தான்....
எப்படி?
மீத்தேன் ஒளிந்திருப்பது பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அதை வெளி கொண்டுவர பூமியில் பல கிலோ மீட்டர் கணக்கில் ஆழமாக துளைகள் போட வேண்டும் . பிறகு அங்கே இருந்து பக்க வாட்டில் வெடித்து துளைத்து பிளக்க வேண்டும் அதற்கு ஹைட்ராலிக் கிராகிங் என்று சொல்ல கூடிய ஒரு வழிமுறை யை பின் பற்றுவார்கள் அதாவது ரசாயனம் கலக்க பட்ட நீரை உயர் அழுத்தத்தில் பிளவுகளில் பீச்சி வார்கள் ..அப்போது இடுக்கில் ஒளிந்துள்ள மீத்தேன் வாயு நீருடன் சேர்ந்து வெளியே வரும் பிறகு இதை பிரித்து எடுத்து கொள்வார்கள்.
அப்படி உள்ளே இருந்து உறிஞ்சி எடுப்பதற்கு முன் அதற்கு தடை யாய் உள்ள நிலதடி நீரை முதலில் உறிஞ்சி எடுத்து விடுவார்கள்.(நிலத்தடி நீர் இருக்கும் போதே விவசாயி செத்துகிட்டு இருக்கானே அதை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் அவன் நிலைமை என்னாவது என்று நீங்கள் கேட்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல)
அடுத்தததாக உள்ளே இருந்து உறிஞ்ச படும் அந்த ராசயணம் கலக்க பட்ட நீர் இருக்கே.. அது கடல் நீரை விட பயங்கர உப்பு தன்மை கொண்டது . அதை வெளியேற்ற போகும் நில பரப்பு பூராவும் விவசாயத்திற்கு பயன்படாத உப்பலங்களாக மாறும். (தமிழகத்தின் மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதம் நமக்கு டெல்டா பகுதியில் இருந்து தான் கிடைத்து கொண்டிருக்கிறது என்பதை நினைவு படுத்தி விடுகிறேன்).
ஒரு கிணறு ஆண்டொன்றுக்கு 20 டன் உப்பை வெளியேற்றும் இப்படி 30 கிணறுகள் மன்னார்குடி பகுதியில் மட்டும் அமைக்க உள்ளார்கள். இப்படி தொடர்ச்சியாக பூமிக்கு அடியில் குடைவது பூகம்பம் வரை வழி வகுக்கும். ஏற்கனவே நெய்வேலி யில் பூமி தோண்ட பட்டதின் விளைவு பல கிமி வரை பரவி உள்ளது என்பது நமக்கு தெரிந்த உண்மை. இந்த திட்டத்தால் 1000 ஆண்டு தாண்டி கம்பீரமாய் நிற்கும் தஞ்சை பெரிய கோவில் கூட விரிசலும் ஆட்டமும் காணும் வாய்ப்பு உள்ளது.
அப்புறம் அந்த நில தடி நீர் உறிஞ்ச பட்ட நிலத்தடி பகுதி இருக்கிறதே அதில் படி படியாக கடல் நீர் உள்ளே புகும் நிலத்தை நிரந்தர மலடாக மாற்றும்.
அப்புறம் மீத்தேன் கிணறுகளில் இருந்து சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாயு வெளியேருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பது விஞ்ஞாணிகளே ஒத்து கொண்ட உண்மை.
அது எங்கயோ போய் ஓசோன் இல் ஓட்டை போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்... இங்கே அதை வெளியேற்றும் குழாயில் கசிவு ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா... நிலத்தடி நீர் எடுக்கும் இடத்தில எல்லாம் இது கலந்துவிடும் .கிட்ட தட்ட எல்லா வெப்ப நிலையிலும் வெகு எளிதாக எரிய கூடிய ஒன்று தான் இந்த மீத்தேன். (சதுப்பு நிலங்களில் இது வெளிப்பட்டு சாதாரண வெப்ப நிலையில் எரிவதை பார்த்து தான் கொள்ளி வாய் பிசாசு கதை வந்தது என்பது நினைவு இருக்கட்டும்).
அப்படி பட்ட இது சாதாரணமாக வீட்டு குழாய் இல் கூட வரும் வாய்ப்பு என்றால் ஆபத்தின் வீரியத்தை பார்த்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிக பெரிய சுரங்கம் கோலார் இல் அதிக பட்சம் 3200 மீட்டர் ஆழம் போனார்கள். ஆனால் இவர்கள் வாங்கி உள்ள அனுமதி 6000 மீட்டர் வரை குடைய..
மேலும் அனுமதி வாங்கி உள்ள பரப்பளவு லட்ச கணக்கான ஏக்கர்.
அகழ்வு செய்ய மொத்தம் இப்படி பட்ட 2000 கிணறுகள் அமைக்க போவதாக தகவல்.
வெளிநாட்டில் ஊருக்கு சம்பந்தமில்லாத இடத்தில மட்டுமே மீத்தேன் எடுக்க படுகிறது.
ஆனால் இங்கே தஞ்சை போன்ற பகுதியில் நிலமும் வீடுகளும் அருகருகே அமைந்த இடத்தில் இது எந்த தயக்கமும் இல்லாமல் எடுக்கபடவிருக்கிறது.
மேலும், இதை கொண்டு செல்லும் குழாய்கள் வழக்கத்தை விட அதிகவேகத்தில் சேதமடையும் என்கிறார்கள் போதிய அளவில் சரியான கால இடைவெளியில் பராமரிப்பு மிக அவசியம் என்கிறார்கள் .நம்ம ஊர் அரசியல் வாதிங்க இன்னும் சாலையை பராமரிப்பதிலேயே தேர்ச்சி அடைய வில்லை. அவர்களை நம்பி இதை கொடுத்தால் எப்படி இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லி கனி.
அடுத்ததாக இது வெறும் மீத்தேன் எடுக்கும் திட்டமா என்றால் அதான் இல்லை. இதற்கு பின்னணியில் ஒளிந்திருக்கிறது முக்கிய திட்டம். மீத்தேன் எடுக்க போவது 30 ஆண்டுகளுக்கு மட்டும் தான். அதன் பின் முக்கிய நோக்கம் நிலக்கரியை வெட்டி எடுப்பது தான். அதற்கான அடியை தான் போட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனம். அவர்களுடைய அதிகார பூர்வ வலைத்தளத்தில் இதை பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் இங்கே மீத்தேன் எடுத்தல் என்று மட்டும் தான் இன்னும் பேச படுகிறது.
இந்த திட்டத்தை செயல் படுத்த போகும் நிறுவனத்தின் பெயர் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) இது ஹரியானவில் பதிவு செய்ய பட்ட ஹரியானவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு துபாய் கம்பெனி.
ஆனால் ஆங்காங்கே இதற்கான குழாய் பதிக்கும் வேலையை செய்யும் நிறுவனம் ஓ. என். ஜி. சி என்ற ஒன்று. என்னடா எங்கயோ கேள்வி பட்டதா இருக்கே என்று பார்த்தால் நாகை மாவட்டத்தில் நறிமணம் பெட்ரோலியம் எடுக்கும் கம்பெனிதான் தான் இது . அந்த கிரேட் ஈஸ்டன் உடன் இனைந்து உள்ளது (co operative).
தனது உடல் பாகத்தை வெட்டி கொடுத்து காசு வாங்குவதற்கு ஈடான இந்த செயலை செய்ய கையொப்பம் இட்ட .... நமது நிலம் நாசமாவதை பற்றி கவலை படாத.. வர்த்தக லாபம் பார்க்கும் அரசியல் வாதிகள் இந்த ஒப்பந்த படி எத்தனை ஆண்டுகளுக்கு அடகு வைத்திருக்கிறார்கள் என்பது தான் நான் உங்களுக்கு தர போகும் கடைசி அதிர்ச்சி. 100 ஆண்டு களுக்கு அதாவது முழுதாய் ஒரு நூற்றாண்டுக்கு மல்டி நேஷனல் துபாய் காம்பெனிக்கு தாரை வார்க்க பட்டுள்ளது நமது இயற்கை வளமும் விவசாயமும்...
கடைசியாக...
குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை யில். நம்மிடம் இல்லாத நிலப்பரப்பு 'பாலை' அதை விரைவில் நாம் அனைவரும் பார்க்கும் நிலைமை வரும் என்ற வருத்ததோடு முடிக்கிறேன்...