ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, கால வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.
இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம் (Nationality).
ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம்.
ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது.
தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பிராமணர்களின் மனக்கோணல், இந்தப் பொது வரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.
இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.
திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.
ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் திராவிட என்று அழைத்தனர்.
தமிழ் என்பதை ஒலிக்கத் தெரியாமல் த்ரமிள் என்று உச்சரித்து அதுவே பின்னர் த்ரமிள, த்ராவிட என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.
இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது.
சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த மொழிக் குடும்பத்தில் தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி ( Proto Language ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார்.
அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான த்ராவிட என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு திராவிடம் என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை.
ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.
பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும்.
அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
தனித்தன்மை எதுவுமில்லை.
அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.
ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் திராவிட என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.
இந்தியர் என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).
ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை ஐரோப்பியர் என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை இந்தியர் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
அது மட்டுமல்ல.. இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள் (Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர்.
இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.
இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியர் என்று ஒரு தேசிய இனம் (Nationality) இருப்பதாகக் கூறவில்லை.
ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன.
இந்தியாவின் குடிமகன் (Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.
இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் இந்தியன் என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்ட விரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.
சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள்.
இந்தியர் என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள்.
இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்.. கவரிங் தங்க நகை போல..
அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு இந்தியர் என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.
ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக இந்தியர் என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.
தமிழர், தெலுங்கர், வங்காளி என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. இந்தியக் குடியுரிமை என்று மட்டுமே அது கூறுகிறது.
தமிழர் போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.
லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.
சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது...