மனதின் தோல்விகளே அககுருவின் எழுச்சி...
எல்லாம் நான் தான் என ஆணவ இறுமாப்பில் இருக்கும் மனம், தன் சிறு வட்டத்தை விட்டு வெளி வராமல், தன் சிற்றறிவிலேயே காலம் தள்ளி பேரறிவினை பெற முடியாமல், வளர்ச்சி அடையாமல் போய் விடுகிறது...
என்றோ ஒரு நாள் தன் வட்டத்தை விட்டு எட்டி பார்க்கையில், மற்றவர்களீன் ஆன்மா வளர்ச்சியை கண்டு திகைத்து இருந்தாலும், தனக்கு தானே சமாதானங்களை தேடி அலைகின்றது..
மிக பெரிய உண்மை என்னவென்றால், தான் ஏற்படுத்திய குறுகிய வட்டத்திற்கு சமாதானங்களை தேடி அலைவது தான் மனதினுடைய பெரும் பாலான வேலையாக உள்ளது..
இந்த மனதை தோற்கடிக்க எந்த சக்தியாலும் முடியாது போல் இருந்தாலும், அண்ட பேரறிவு திக்கு அற்ற நிலைக்கு நம்மை தள்ளி விட வில்லை...
இந்த ஆணவ மனத்தின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி முறைபடுத்த நமக்குள்ளே வைத்த ஒரு உறவு தான் இந்த சுவாசம்..
இது பிராண வாயுவை உள் வாங்க செய்யும் ஒரு ஏற்பாடு மட்டும் அல்ல.. அதற்கு மேலே பல பல காரணங்களை உள் அடங்கிய ஓர் உன்னத உறவு..
தேகத்தை ஓங்க செய்வதின் மூலம் வினாடிக்கு வினாடி தேகம் சீர் குழைந்து போகாமல் காக்கிறது.. அதற்கு மேலே ஞான மார்க்கத்திற்கென்றே செயல் பட கூடிய நிலையில் உள்ளது.. அதை மனிதன் அறியாது இருப்பது அஞ்ஞானமாக உள்ளது....
பிரபஞ்ச ஆற்றலாலும், அறிவாலும் ஒவ்வொரு உயிரிலும் இந்த சுவாசம் செயல் படுகின்ற விதம் மிகவும் வியப்புக்கு உரியது..
அதை ஞானத்திற்கு என்று பயன்படுத்தியவர்கள் நமது போற்றுதற்கு உரிய சித்தர் பெரு மக்கள்...
வாசி யோகம் என்ற தலைப்பில் முறை படுத்திய யோகப் பயிற்சிகள், அதன் உண்மை தன்மையை அறிந்தவர்களுக்கு பிரமிப்பு ஊட்டக் கூடியது...
பதஞ்சலி போன்ற வட இந்திய யோகிகளின் முறை வேறு.. அது சிறப்பானது தான்..
ஆனால் அதனிலும் மிக சிறப்பான தமிழ் வாசி யோகம் அறியாத ஆரிய மக்கள் தங்கள் செல்வாக்கை பயன் படுத்தி தாங்கள் அறிந்த பதஞ்சலி யோகத்தை முன்னிலை படுத்தி விட்டார்கள்.. அதனால் தமிழ் வாசியோகம் காணாமல் போய் விட்டது..
புத்தர்களின் சீடர்களிலே மிகவும் பலம் வாய்ந்த போதி தர்மாவை சீனாவுக்கு புத்தர் அனுப்பி வைத்தது புத்தரின் ஒரு அரசியல் கபடமே..
தமிழ் வாசி யோகத்தை கற்றுக் கொடுக்க புத்தருக்கு மனம் இல்லை.. அது தான் வழக்கமாக கற்று கொடுத்த பயிற்சிக்கு முற்றிலும் வேறு பாடாக இருந்ததாலும் மிகவும் வலுவாக இருந்ததாலும், போதி இந்தியாவில் இருந்தால் சில பிரச்சனைகள் எழக்கூடும் என்ற நோக்கில் போதி தர்மாவை பிரச்சனைகள் நிறைந்த சீனாவுக்கு அனுப்பி விட்டார்..
இதையும் உணர்ந்த போதி சீனாவில் தன் பணியை வெற்றி கரமாக முடித்து விட்டு, நாடு திரும்பாமலேயே இமயமலையில் அடங்கி விட்டார்...
சுவாச ஒழுங்கு என்பது மனதால் இயலாத காரியம்.. ஒழுங்கற்ற தன்மை உடைய மனம் அந்த சுவாச ஒழுங்கில் இணைய முடியாது..
அதனால் ஞானம் என்ற ஆசை வார்த்தைக் காட்டி மனதை ஈர்த்து, சுவாச ஒழுங்கிலே ஈடு படுத்துகின்ற போது மனம் அதனோடு போராடி போராடி தோற்றுப் போகின்ற ஒவ்வொரு நேரத்திலும் மனம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பணிந்து போகிறது.. மனதினுடைய பணிவிலே அக குருவாகிய விழிப்பு நிலை எழத்தொடங்குகிறது...
அதனால் தான் சமயங்களில் அதாவது மதத்தில் பணிவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரப் படுகிறது..
ஒரு இரகசியம் என்னவென்றால், மனம் தனக்கு தானே பணிவை ஒரு நாளும் ஏற்படுத்தி கொள்ள முடியாத நிலையில் உள்ளது..
அதற்கு அதனுடைய குறுகிய ஆணவ வட்டம் மிக பெரிய தடையாக உள்ளது...
மனதை தோற்று போக செய்யக்கூடிய ஒரு காரியத்தை மனதிற்கு ஒப்படைக்கும் போது, மனம் அதை செய்ய முடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறது.. பணிவு கொள்கிறது.. மென்மை அடைகிறது.. அது மிக மென்மை அடைகின்ற போதுதான் அதனிலும் சற்று வன்மையான ஆனால் மென்மையான விழிப்பு நிலை எழ முடிகிறது.. இது தான் மிக பெரிய இரகசியம்..
சரி சுவாச ஒழுங்கு ஒன்று தான் மனதை பணிவு கொள்ள செய்யுமா? வேறு ஒரு யோக முறையே இல்லையா? என கேட்கலாம்..
பல காரணங்களில் ஒரு முக்கியமான காரணம் இதுவும் ஒன்று..
அது சதா காலமும் வெளியிலேயே உலாவி பழக்கப் பட்ட மனம் சுவாசத்தில் ஈடு படும் போது, உள் நோக்கி பாயும் சுவாசக் காற்றால் மனமும் உள் நோக்கி பாய வேண்டியதிருப்பதால், பழக்கமில்லாத அந்த இடத்தில் எதுவும் தோன்றாது இருப்பதால், பற்றிக் கொள்ள எதுவும் இல்லாததால், மனம் அங்கே இருப்பு கொள்ள முடியாமல், மொத்தத்தில் சுவாசத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிகவும் முயற்சி செய்கிறது..
மனம் வெளியே பாய்ந்து தன் ஒழுங்கின்மையை சுவாசத்திலும் பாதிப்பு அடைய செய்கிறது..
இந்த காரணத்தில் தான் மனம் சுவாசத்தை ஒழுங்கிலே இருக்க செய்ய முடிவதில்லை..
நாம் சுவாச ஒழுங்கிலே இருக்க முடியாததற்கு காரணம் மனதின் வெளியில் உள்ள ஒழுங்கற்ற ஈடுபாடு தான்..
மனதின் குறுக்கீடுகள் மட்டும் இல்லையென்றால் ஒரு சுவாசம் இயல்பாகவே நான்கு வினாடிகள் ஒழுங்கில் இருக்கும்..
இதையே மாற்றி செய்யும் போது அதாவது சுவாச ஒழுங்கில் இருக்கும் போது மனம் ஒழுங்காகிறது...
நம்மில் அக குரு இரண்டு வழிகளில் பலப்படுகிறார்..
ஒன்று சுவாச ஒழுங்கில் நாம் இருக்க முயலும் போது மனம் ஒழுங்கு தன்மை பெற்று மென்மை அடைந்து அக குரு எழ வகை செய்கிறது..
இரண்டாவது மனம் சுவாச ஒழுங்கில் இல்லாத சமயம் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு ஆணவத்தை இழந்து மென்மை அடைகின்ற போது அககுரு எழ வகை கிடைக்கிறது...
சரி இப்போது அககுரு பலப்படுவதால் என்ன நேர்ந்து விடப் போகிறது என்ற கேள்வியை மட்டும் கேட்டு விடாதீர்கள்..
நமது மர்ம யோக நெறியில் மிகவும் ஈடு பாடு உள்ளவர்களின் மன நிலை பாதிக்கப் படலாம்...
அககுருவால் அனைத்தும் செயல் கூடும் என்பது தெள்ளத் தெளிவான உண்மை ஆகும்..
சித்தர் பெருமக்கள் அககுருவை அடைந்து பின் அககுருவாய் தன்னை மாற்றி, அன்பின் மூலம் வியப்பு ஊட்டும் செயல்களை செய்யக் கூடியவர்களே...
நாமும் அககுருவின் மூலமும், அககுருவாய் ஆகியும் நிறை நிலை சித்தனாக மாற முயலுவோமாக...