படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்..
பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவது தான் படிப்பதன் முக்கிய நோக்கம் – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்..
எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும்.
ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.
வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி கற்றல் (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
தான் கற்கும் முறை சரியானது தானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு.
எனவே முறைப்படி கற்கும் கலையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
ஒரு நிகழ்வில் இருந்து கூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும் போதும் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின் மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்..
மெய், வாய், கண், மூக்கு, செவி – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே நெறிவாழ்க்கை வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்..
பார்த்தல், கேட்டல், செய்தல் – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்..
பார்த்தல் எனப்படும் பார்வை என்பது தான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டு வருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும் போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.
காட்சிப்படுத்துதல் என்பது செய்ய வேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டு வந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும்.
உதாரணமாக – இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்..
நான் பள்ளியை விட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும் போது மணி 5 ஆகிவிடும். அதன் பின்னர் முதலில் தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு ஹோம் வொர்க் கை செய்து முடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்ச நேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டு விட்டு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். சாப்பிடும் போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும் – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்..
ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் போல செய்ய வேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத் தான் காட்சிப்படுத்துதல் என அழைப்பார்கள்..
படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் காட்சிப்படுத்துதல் அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்..
காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டு பிடிக்கும் விதத்தில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்..
வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்..
வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்..
சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..
தனியாக இருந்து அறையில் படிக்கும் போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப் பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..
வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்த வேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும்.
குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்..
அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம். சிலவேளைகளில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது..
படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது.
இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்..
படிப்பது என்பது நினைவுக் கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்து கொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்..
மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்...