உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை 2015 டிசம்பர் 19 அன்று முடிந்தது. கடைசியில் அதன் ஒட்டுமொத்த பலன் – “இந்தியாவின் உணவு இறையாண்மை பலியிடப்பட்டது - இந்தியாவை நம்பிய வளர்முக நாடுகளும், வளர்ச்சி குன்றிய நாடுகளும் நட்டாற்றில் விடப்பட்டன” என்றானது.
ஒருநாடு விடாமல் ஒத்த கருத்து இருந்தால் தவிர, ஒப்பந்தம் கிடையாது என்ற உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை விதி நைரோபியில் தகர்க்கப்பட்டுவிட்டது.
“காட்” ஒப்பந்தத்தின் விளைவாக 1995-ல் உலக வர்த்தகக் கழகம் (WTO) 162 உறுப்பு நாடுகளுடன் உருவானது. இதன் முதல்கட்ட அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் நடைபெற்றபோது அமெரிக்க செவ்விந்தியர் களும், உலகெங்கும் இருந்து திரண்ட செயல் பாட்டாளர்களும் நடத்திய கிளர்ச்சியின் விளைவாக அம்மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
“எங்கள் உலகம் விற்பனைக்கு அல்ல” என்ற முழக்கத்தின் கீழ் சியாட்டில் நகரெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தபோது இந்தியாவின் அன்றைய வணிகத்துறை அமைச்சர் முரசொலிமாறன் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் தாங்கள் தங்கியிருந்த விடுதிகளின் கொல்லைப்புற கதவைத் திறந்து கொண்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் 2001-இல் கத்தார் நாட்டுத் தலைநகர் தோகாவில் அடுத்த அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சியாட்டில் கிளர்ச்சி நினைவிலேயே நின்றதால் தோகா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கொஞ்சம் அடக்கி வாசித்தது.
இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் வேளாண்மையும், உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப் படாமல் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்ற அடிப்படையில் சில வரம்புகள் உருவாக்கப்பட்டன. “தோகாவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்” (Doha Development Agenda) என இது அழைக்கப்பட்டது. இதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்ட செய்திகளில் ஒப்பந்தம் எட்டப்படும் வரை அடுத்தடுத்து தொடரும் பேச்சுவார்த்தைகள் “தோகா சுற்று பேச்சுவார்த்தை” என்றே அழைக்கப்படும் என்பதும் முடிவானது. இந்த ஒழுங்குக்கு உட்பட்டே அடுத்தடுத்து அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
தோகா சுற்றின் அமைச்சர் நிலைப்பேச்சு வார்த்தைகளில், 2006லிருந்து இந்திய வேளாண்மைக்கு எதிரான நெருக்குதல்களை அமெரிக்க வல்லரசும், ஐரோப்பிய ஒன்றியமும் தீவிரப்படுத்தின. வேளாண்மை இடுபொருட்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மானியங்கள் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், வேளாண் விளைபொருட்களுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை நிறுத்தப்படவேண்டும் என்றும் அழுத்தம் தரப்பட்டது.
அதே நேரம் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தங்கள் நாட்டு வேளாண்மைக்கு அளித்துவரும் மானியங்கள் அனைத்தையும் 2013ம் ஆண்டுக்குள் கைவிடுவதாக இந்நாட்டு அரசுகள் ஏற்றுக்கொண்டன.
இது குறித்து விவாதிக்கும்போது மேற்குலக நாடுகளில் இருக்கும் நில உடைமைக்கும், இந்தியாவில் உள்ள நில உடைமைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்காவிலும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் சிறிய நிலவுடைமை என்பதே சில நூறு ஏக்கர்கள் ஆகும். அங்கு வேளாண்மை என்பது பெரிய நிறுவனங்களால் நடத்தப்படும் குழும உற்பத்தியாகும். அந்நாடுகளில் வேளாண்மையைச் சார்ந்து வாழும் மக்கள் தொகை அந்நாட்டு மக்கள் தொகையில் அதிகம் போனால் 3 விழுக்காடுதான்.
மாறாக இந்தியாவிலோ, சராசரி நிலவுடைமை என்பது இரண்டரை ஏக்கர் ஆகும். இங்குச் சிறு, குறு உழவர்களே அதிகமானவர்கள் ஆகும். ஒரு துண்டு நிலமும் இல்லா உழவுத் தொழிலாளர்களும் ஏராளம்.
இச்சூழலில் உலக வர்த்தகக் கழகம் வலியுறுத்துவது போல் “தடையற்ற வணிகம்” என்ற பெயரால் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும் உணவு தானியங்கள் தாராளமாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டால், கோடிக்கணக்கான உழவர்கள் தங்கள் உழவுத்தொழிலை விட்டுவிட வேண்டியது தான். அது மட்டுமின்றி இந்தியாவின் உணவு இறையாண்மை தகர்க்கப்பட்டு கைத்தி நாட்டைப்போல, ஆப்ரிக்கா வறிய நாடுகள் சிலவற்றைப் போல இந்தியாவும் உணவுக்காக வெளிநாட்டுக் கப்பல்களை எதிர்நோக்கி இருக்கும். தற்சார்பற்ற நாடாக மாறும்.
இதனால்தான் உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தை நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் உழவர் அமைப்புகளும், தற்சார்பின் மீது அக்கறை உள்ள செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டங்களின் அழுத்தத்தில் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தைகளில் இந்திய அரசின் அமைச்சர்கள் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டு வந்தது.
ஆயினும், பொருளாதார அடியாள்களால் நிர்வகிக்கப்படும் இந்திய அரசு அமைச்சர் நிலைப் பேச்சுவார்தைகயில் தாங்கள் எதிர்த்த நிபந்தனை களையே தங்களது சொந்த முடிவு போல செயல்படுத்தி வந்தார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் உரமானியம், மின்சார மானியம் ஆகியவை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. குறைந்த வட்டிக்கடன்கள் உண்மையான உழவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் வங்கிக் கொள்கைகள் மாற்றப்பட்டன. நெல், கோதுமை, கரும்பு, பருத்தி ஆகியவற்றிற்கு வழங்கப் படும் அரசின் ஆதார விலைகள் மிகப்பெரும் அளவிற்கு மட்டுப்படுத்தப்படுகின்றன. வேளாண்மை இலாபகரமான தொழிலாக இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதன் விளைவாக உழவர்கள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டுத் தாமாகவே வெளியேறும் வண்ணம் பிதுக்கப்படு கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகள் வேளாண் மானியத்தை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் மேற்குலக நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் மைக்குத் தாராளமாக மானியம் வழங்கி வருகின்றன. உலக வர்த்தகக் கழக சட்ட திட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் புதிய, புதிய பெயர்களை தங்களது வேளாண் மானியங்களுக்குச் சூட்டிவிடுகிறார்கள்.
“பச்சைப்பெட்டி”, “பழுப்புப்பெட்டி” என்ற பெயர்களில் விளங்கும் இந்த மானியங்கள் உலக வர்த்தகக் கழக நிபந்தனைகளுக்கு உட்படாதவையாகும். வேளாண் நிறுவனங்களுக்கு, வேளாண் விளை பொருட்களின் விற்பனை விலையை ஏற்றாமல், நேரடியாக அரசு மானியம் வழங்கினால் அதற்குப் பெயர் பச்சைப்பெட்டி. (Green Box). அதேபோல், சந்தைச் சமநிலையை பாதுகாக்கும் நோக்கில் ஒருபோகத் திற்கோ, இருபோகத்திற்கோ தரிசுபோட்டால் அவ்வாறு தரிசு போடும் வேளாண் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தரிசு மானியத்திற்குப் பெயர் பழுப்புப் பெட்டி (Amber Box).
இயற்கையோடு சூதாட்டம் நடத்தி விளைவிக்கப்படும் நெல், கரும்பு, பருத்தி, கோதுமை போன்றவற்றுக்கு அரசு மானியம் தரக்கூடாது என இந்தியாவை வலியுறுத்தும் இந்த மேற்குலக நாடுகள், விளை விக்காமல் இருப்பதற்காகத் தரிசு மானியம் அளிக்கும் கொடுமை இன்றும் தொடர்கிறது. மிகை உற்பத்தி நடந்து அதனால் ஏற்றுமதிச் சந்தையில் தங்கள் நாட்டு வேளாண் விளைபொருட்களுக்கு விலை குறைந்து விடக் கூடாது என்பதற்கே இந்த ஏற்பாடு!
உலக வர்த்தகக் கழக அமைச்சர் நிலை மாநாட்டில் 2013க்குள் கைவிடுவதாக ஒத்துக்கொண்ட மானியங் களில் மேற்கண்ட மானியங்கள் வராது.
ஆனால், கைவிடுவதாக ஒத்துக்கொண்ட பிற மானியங்களையும் இந்நாடுகள் கைவிடுவதில்லை. மாறாக அதிகரித்தன. எடுத்துக்காட்டாக அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் வேளாண் சட்டம் 2014 (U.S farm Bill - 2014) வேளாண் நிறுவனங்களுக்கு அளித்துவந்த பலவகையான நேரடி மானியங்களைப் பலமடங்கு அதிகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதுபோலவே நிகழ்ந்தன. பிரிட்டனின் எலிசபெத் மகாராணி குடும்பம்கூட வேளாண்மைக்குப் பல்லாயிரம் கோடி பவுன்ட் மானியம் பெறுகின்றது.
இந்த நிலையின்தான் இதற்கு முன் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற அமைச்சர் நிலைப் பேச்சுவார்தையில் தொடங்கி மிகக்கடுமையான அழுத்தங்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டன.
இடுபொருள் மானியம், மின்சார மானியம் ஆகியவை 2017க்குள் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், வேளாண் விளை பொருட்களுக்கு அரசின் ஆதார விலை வழங்க அறிவிக்கப்படக்கூடாது என்றும் அழுத்தம் தரப்பட்டது. மக்களுக்கு விலையின்றியே, மலிவு விலையிலோ உணவுப் பொருள்கள் வழங்கும் உணவு பாதுகாப்பு திட்டங்கள் அறவே கைவிடப்பட வேண்டும் என்றும், அரசு உணவு தானியங்களை சேமிப்பில் வைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள இந்திய உணவுக்கழகம் (FCI) கலைக்கப்பட வேண்டும் என்றும் கடுமையான அழுத்தங்கள் தரப்படுகின்றன.
பேச்சுவார்த்தையில் இந்திய அரசுப் பேச்சாளர்கள் இதனை எதிர்த்தாலும், நடைமுறையில் இந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே வேளாண்மைக்கு விலையில்லா மின்சாரம் வழங்குவது அந்தந்த மாநில அரசின் பொறுப்பு என கைகழுவி விடப்பட்டுள்ளது. உரமானியம், பூச்சிக்கொல்லி மானியம் ஆகியவை பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டன. நெல், கோதுமை தவிர பிற விளை பொருட்களுக்கு அரசு ஆதாரவிளை தரக் கூடாது என்பதைக் கொள்கை அளவில் மோடி அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது.
செயல்படுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக இந்திய உணவுக் கழகத்தை கலைத்து கார்கில் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உணவு தானிய கிடங்குகள் வைத்துக் கொள்வதற்கு இசைவு வழங்கப்பட்டுவிட்டது.
இது போதாதென்றும் இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு திட்டம் முற்றிலும் கைவிடப்படவேண்டும் என்றும், பாசனத் தண்ணீருக்கு விலை வைக்க வேண்டும் என்றும் அதையும் உடனே செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அழுத்தம் தருகின்றன.
உலக வர்த்தகக் கழகப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஓர் கூட்டணியாக நின்று கொண்டு தங்கள் தலைமையில் பெரும்பாலான வளர்முக நாடுகளையும், வளர்ச்சி குன்றிய நாடுகளையும் அணி சேர்த்துக்கொண்டு அமெரிக்க வல்லரசுக்கு எதிராக முணுமுணுப்பதைக் கூட வல்லரசுகள் விரும்பவில்லை.
உலக வர்த்தகக் கழகப் பேச்சு வார்த்தைகளை சுற்றி வளைக்கும் வகையில் பல்வேறு துறைசார்ந்த மண்டல ஒப்பந்தங்களை உருவாக்கி வருகின்றன. அண்மையில் அமெரிக்கா ஏற்படுத்திய “பசிபிக் தழுவிய கூட்டாண்மை” (Trans Pacific Partnership- TPP) என்ற ஒப்பந்தம் உலக வர்த்தகக் கழகப் பேச்சுவார்த்தைக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அமைந்தது.
இந்தப் பின்னணியில் தான் ஆப்பிரிக்க நாடான கென்யா தலைநகர் நைரோபியில் 2015 டிசம்பர் - 15 தொடங்கி 18 முடிய உலக வர்த்தகக் கழகத்தின் அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதிவரை முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்ததால் ஒருநாள் கூடுதலாக அமர்ந்து டிசம்பர் 19 அன்று கூட்டறிக்கையோடு முடிக்கப்பட்டது.
உலக வர்த்தகக் கழக சட்ட திட்டங்களின்படி எல்லா உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டாலே தவிர ஒப்பந்தம் கூட்டறிக்கையாக வெளியிட முடியாது. ஆனால், நெய்ரோபி பேச்சுவார்த்தையில் இந்த அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட வணிக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியில் வந்து தாங்கள் கருத்து மாறுபடுவதாகச் செய்தியாளர்களிடம் சொன்னாலும் இந்தியாவின் பெயரையும் உள்ளடக்கி டிசம்பர் 19 அன்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு உண்மையில் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் அந்நாட்டின் பெயரையும் சேர்த்து ஓர் கூட்டறிக்கை வெளிவரு வாய்ப்பே இல்லை. உள்ளே ஒத்துக்கொண்டுவிட்டு வெளியில் தாங்கள் ஏற்கவில்லை என மோடி அமைச்சரவையின் நிர்மலா சீத்தாராமன் நாடகம் ஆடுகிறார்.
உலக வர்த்தகக் கழக சட்டதிட்டங்களுக்கு உட்படாத நேரடி மானியங்களை 2020க்குள் கை விடுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஏற்கெனவே நாம் குறிப்பிட்ட பச்சைபெட்டி, பழுப்பு பெட்டி மானியங்களை இந்த நிபந்தனை தொடவே தொடாது. அதே நேரம் உணவு தானியங்களுக்கு அளிக்கப்படும் ஏற்றுமதி மானி யத்தைத்தான் கைவிடுவதாக இந்நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தாலும் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களுக்கு (Processed Products) ஏற்றுமதி மானியம் உள்ளிட்டு எல்லா மானியங்களையும் தொடரலாம் எனக் கூறப்பட்டுவிட்டது.
அரிசியாக விற்றால் சிலவகை மானியங்கள் அளிக்கக்கூடாது அதற்குப் பதிலாக மாவாக விற்றால் எல்லா மானியங்களும் அளிக்கலாம். கொட்டை நீக்காமல் பஞ்சுக்கு சிலவகை மானியங்கள் நிறுத்தப் படலாம். அதே நேரம் கொட்டை நீக்கி பஞ்சுக்கோ, நூலுக்கோ எல்லாவகை மானியமும் தொடரலாம். இதேபோல் சக்கரைக்கும் பிறவகை பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் எல்லா மானியங்களும் தொடரும்.
பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்கள் சந்தையில் தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கோலோச்சுகின்னறன. நைரோபி ஒப்பந்தம் அதில் ஒரு சிறு துளியைக்கூடக் கட்டுப்படுத்தாது.
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் 2023க்குள் அனைத்து வகை வேளாண் மானியங்களையும் நிறுத்திவிட வேண்டும் என நைரோபி ஒப்பந்தம் கூறுகிறது.
உணவு பாதுகாப்புச் சட்டத்தை அறவே கைவிடுவது, உணவு தானியங்களுக்கு ஆதார விலை அளிப்பது, இந்திய உணவுக் கழகத்தை கலைத்துவிடுவது போன்றவற்றிற்கு நிர்மலா சீத்தாராமன் அடுத்த பேச்சுவார்த்தைவரை வாய்தா வாங்கி வந்திருக்கிறார்.
தன்னுடைய தலைமையில் ஒருமுனை உலகத்தைக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தபோது அமெரிக்க வல்லரசு உலக வர்த்தகக் கழற்றிற்கு வெளியில் உறுப்பு நாடுகள் எந்தவகை மண்டல ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தி வந்தது.
ஆனால் சில ஆண்டுகளிலேயே பலமுனை உலகம் உருவாகி வருவதை உணர்ந்து கொண்ட அமெரிக்க வல்லரசு உலக வர்த்தகக் கழகத்தை சுற்றி வளைக்கும் வகையில் மண்டல ஒப்பந்தங்களில் இறங்கியது.
இவ்வாறான மண்டல ஒப்பந்தங்கள் உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தின் கூறாக இனி மாற்றப்படும் என நைரோபிய ஒப்பந்தம் கூறுகிறது. வளர்முக நாடுகள் ஓர் அணியாகத் திரண்டுநின்று முணுமுணுப்பதைக் கூட தகர்க்கும் சூழ்ச்சி இதில் உள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற பாலி பேச்சுவார்த்தையில் தோக்கா நிகழ்ச்சி நிரல் முடியும் வரையில் புதிய பிரச்சனைகள் பற்றி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படாது என ஏற்கப்பட்டது. ஆனால், நெய்ரோபிய ஒப்பந்தத்தில் அடுத்துவரும் பேச்சு வார்த்தைகளில் புதிய சிக்கல்கள் குறித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்க லாம் என ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தோக்கா சுற்று என்ற வகையில் வளர்முக நாடுகளுக்குப் பாதுகாப்பாக இருந்த மெல்லிய அரணும் கிழித் தெரியப்பட்டு விட்டது.
வெள்ளம்போல் இந்தியாவிற்குள் இறக்குமதியாகும் உணவு தானியங்களை தடுத்து நிறுத்தி உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாப்பதற்காக 2001-ல் சிறப்புப் பாதுகாப்பு பொறியமைவு (Special Safeguard Mechanism - SSM) ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி அமெரிக்கா உள்ளிட்டு பிறநாடுகளிடமிருந்தோ நெல்லோ, கோதுமையோ, சக்கரையோ வேறு பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்துவிடாத அளவிற்கு சுங்கவரியை அல்லது இறக்குமதி வரியைத் தற்காலிகமாக உயர்த்திக் கொள்வதற்கு இதன் மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பாதுகாப்பு ஏற்பாட்டை அடுத்த பேச்சுவார்த்தைக்குள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடிப்படைகள் நெய்ரோபி ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப் பட்டுவிட்டன.
உழவர்களிடமிருந்து நெல், கோதுமையை அரசு கொள்முதல் செய்வதும், இத்தானியங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுவதும் விரைவில் கைவிடப்பட இருக்கின்றன. வேளாண் மையை வாழ்வாதாரமாகக் கொண்ட பலகோடி கிராம மக்களுக்குப் பெரும் துயரை ஏற்படுத்துவதற்கு மோடி அரசு நேரம் குறித்துவிட்டது.
அதன் மறுபக்கமாக உணவு மானியம் அளித்து நியாயவிலையில் மக்களுக்கு அடிப்படை உணவு தானியங்கள் அளிக்கும் பொது வழங்கல் முறையும் (ரேசன் கடைகள்) கைவிடப்படுவதற்கும் நைரோபியில் நிகழ்ச்சி நிரல் தயாராகிவிட்டது. இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தக் கொடுஞ்செயலுக்கு விரைவில் நேரம் குறிப்பதாக ஏற்றுக்கொண்டுதான் தில்லி திரும்பியிருக்கிறார்...
குறிப்பு : 2015 முதல் பாஜக மோடி அரசு சிறிது சிறிதாக இந்திய விவசாயிகளை அழித்துக் கொண்டு வந்திருக்கிறது... தற்போது வேளாண் சட்டம் மூலம் முழுமையாக அழிக்க துடிக்கிறது...