இன்றைய விண்வெளிப் பயணத்தில் முக்கியமானது பயண சாதனம் வேகமும், காலமும். மற்ற ஒன்று திரும்பிவருவது..
ஆனால் 4000 ஆண்டுக்கு முன் தமிழ் சித்தர் திருமூல நாயனார் இந்த பிரபஞ்சத்தை சுற்றிவந்தார்.
இப்பிரபஞ்சம் 1008 அண்டம் கொண்டது என்று சொல்லியதுடன், அவரின் பிரபஞ்சப் பயணத்தை பதிவு செய்துள்ளார். உலகில் பிரபஞ்சப் பயணத்தை பதிவு செய்த முதல் விண்வெளிப் பயணி திருமூலர் . அவரின் அனுபவம் இன்றைய விண்வெளிப் பயணத்திற்கு உதவலாம் . பல சித்தர்கள் விண் வெளிப்பயணம் செய்துள்ளார்கள். ஆனால் அவர்களின் பயணப்பதிவுகள் நமக்கு கிடைக்கவில்லை.
இன்று வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா அல்லது இல்லையா என்று விவாதிக்கிறோம் . திருமூல நாயனாரின் விண் வெளிப் பயணத்தில் அவர் சந்தித்த வேற்றுகிரகவாசிகளை பார்ப்போம்.
சித்தர்களின் உச்ச பட்ச சித்தி
கெவுணம் பாய்தல் என்ற
பிரபஞ்சபயணம் . அதற்குத் தயாரிப்பாக சிவயோகம் செய்து, காய சித்தி செய்து, உடலை ஒளி உடலாக மாற்றவேண்டும். இதனால் காலத்தை வெல்லலாம் மற்றும் கணக்கில்லா வேகத்தில் பயணிக்க முடியும். விண்வெளிப் பயணம் செய்ய சித்தர்கள் குளிகை என்ற சாதனம் செய்தனர்.
குளிகை என்பது பாதரசத்தை மூலப்பொருளாகக் கொண்டது. திரவ பாதரசத்தை அணுமாற்றம் செய்து, திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன் பின் உலோகங்கள் ரத்தினங்கள்(உபரசங்கள் 120) பாசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை (சத்து) திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து (சாரணை) பாதரசத்தின் நிறையை தங்கத்தின் நிறைக்குச் சமமாக கொண்டு வரவேண்டும்.
இவ்விதம் ஒருமுறை சாரணை
செய்தால் அந்தக் குளிகைக்குச் சகம்
என்று பெயர். பதினான்குமுறை சாரணை செய்தால் “ கமலினி “என்ற குளிகை ஆகும்.17 முறை சாரணை செய்தால் “ சொரூபம் ” என்ற குளிகை. கமலினியும், சொருபமும்
விண்வெளிப் பயணத்திற்கு பயன்படுத்தினார்கள்.
அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே
சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே
சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே- -----
திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353, 354
நந்தி என்ற அம்மையப்பனாகிய சிவன் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன் . சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன்.
அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகம் எனது வேகமும் ஒத்துப் போக வேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.
நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடிவந்து அண்டத்துள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்த அண்டத்தில் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள்( அறிவியலார்) இருந்தனர் .
சித்தர் ஒருவரைக் கண்டு, அவருக்குப் பணிவான வணக்கம் செய்தேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம் “எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்? “என்றார்.
நான் ,” அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன் “. என்றேன்
அதற்கு அவர், “ இன்னும் நீங்கள் இளமையான சித்தர். மேலும் பல சித்திகள் செய்து பாருங்கள்” என்றார். எனவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.
என்றே நுழைந்தேன் அயலொரு அண்டத்தில்
கண்டேன்சிததரை கடிபதுமை போல .
தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட நிராகாரத்து அடைந்த பெரியோர் -------------------------பாடல் 356
பெரியோர் தனைகண்டேன் பேராய் வலம் வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால் நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே. ------------------- பாடல் 357
அதன்பின் வேறு ஒரு அண்டத்துள் நுழைந்திட்டேன். அங்கு சித்தர்களைக் கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல் இருந்தார்கள். அவர்களைக் கைகூப்பி வணங்கினேன். தடவிப்பார்த்தேன். அவர்கள் தட்டுப்படவில்லை.
அவர்கள் நிராகாரன் என்ற கடவுள்நிலை அடைந்த பெரியவர்கள் என்று அறிந்தேன்.அவர்களை வலம் வந்தேன் . அவர்கள் மௌன யோகத்தில் இருக்கிறார்கள் என்று வியந்தேன். அந்த அண்டத்து உச்சிக்குச் சென்றேன். அதில் இருந்து, அடுத்த அடுக்குக்குள் விரைவாய் நுழைந்திட்டேன்..
நுழைந்திடில் அண்டத்தில் நூல்பார்த்த சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது ஆர்தான் எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம் கரைகண்டு பார்த்தோமே ------------------பாடல் 358
பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே------------------------பாடல் 359
சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
க்லலுயிர் வெட்டுபோல் காட்டினார் பார்த்திடே- -----------------------பாடல் 360
நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள் நூல்களை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் “ இந்த நூல்களை எழுதியது யார்” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் “ஈசன் பார்வதியிடம் சொன்ன எழு லட்சம் பாடல்கள். இவற்றை ஆராய்ந்து
பார்த்துவிட்டோம் “ என்றனர் .
அதற்கு நான் “ இறைவனுக்கு ஒப்பான சித்தர்களே !! ஆராய்ந்து பார்த்தோம் என்றீர்கள். அதை சுருக்காதது ஏன் ? “என்றேன்.
அவர்கள் “ இவற்றை சுருக்க ஈசனாலும் ஆகாது . அப்படி யாராகிலும் சுருக்கியிருந்தால் , அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள் “ என்றனர்.
நான் ‘நந்தி என்பவர் உலகில் பலஉயிர்கள் பார்த்துப் பயன் பெற எழுலட்சம் பாடல்களைச் சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார் . இது கல்வெட்டில் எழுதியது போன்று தெளிவானது.
-தொடரும்...