11/07/2018

மூலிகை கொட்டைக்கரந்தை...


"கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு
வெட்டை தனியுமதி மேகம்போந்- திட்டச்
சொறிசிரங்கு வன்கரப்பான் றேற்றாது நாளும்
மறிமலமுந் தானிறங்கு மால்"

கொட்டைக்கரந்தை உடலை பலப்படுத்தும்; குளிர்ச்சியுண்டாக்கும்; வாதத்தைக் குணமாக்கும், மலமிளக்கும். இலை, பூக்கள், உடலை பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும். விதை, வேர், பசியைத் தூண்டும்; குடல் புழுக்களைக் கொல்லும்.

கொட்டைக்கரந்தை முழுத்தாவரம் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. இது பற்களுள்ள, நறுமணம் கொண்ட இலைகளை மாற்றடுக்கில் அடர்த்தியாகக் கொண்ட சிறு செடி வகைத் தாவரம். சிறு பந்து போன்ற, உருண்டையான, சிவப்பும், பச்சையும் கலந்த பூங்கொத்தினை நுனியில் கொண்டது.

இது தென்னிந்தியாவிற்கே உரிய மூலிகை. தோட்டங்களிலும், வயல் நிலங்களில் அறுவடைக்குப் பின்னர் இயல்பாக வளர்கின்றது. இதிலிருந்து மருத்துவத்திற்குப் பயனாகும் ஒருவித எண்ணெய் பெறப்படுகின்றது. நறுங்கரந்தை என்கிற மாற்றுப் பெயரும் உண்டு. இலை, பூ, விதை, வேர், வேர்ப்பட்டை போன்றவை மருத்துவப் பயன் கொண்டவை.

தோல்நோய்கள் குணமாக இலைத்தூள், வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கொட்டைக்கரந்தைத் தைலம்
முடிவளர்ச்சிக்கும், முடி கருமையடையவும் கொட்டைக் கரந்தை தைலம் பயன்படும். கொட்டைக் கரந்தை இலைச்சாறு, தேங்காய் எண்ணெய், சம அளவாக எடுத்துக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்கான எண்ணெயாகப் பயன்படுத்திவர வேண்டும்.

வெள்ளைப்படுதல் குணமாக இலைகளை உலர்த்தித்தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடித்துவர வேண்டும். தினமும் 3 வேளைகள், 10 நாட்களுக்குக் குடிக்கலாம்.

இரத்த மூலம் சரியாக வேர்ப்பட்டையை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.

குடல் புழுக்கள் வெளியாக விதைகளைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து, ஒரு தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

மூளை, இதயம், நரம்புகள் பலமடைய
பூக்காத செடிகளை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு, இரவில் பாலுடன் சாப்பிட வேண்டும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.