நாம் அன்றாட உணவுகளில் காய், கனி, இலை, பருப்பு, விதை போன்றவைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் உணவுகளாக பயன்படுத்தும் விதை வகைகளில் குறிப்பிடத்தக்கது, ஆளி விதை! ஆளி, கடுகு குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடி. 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.
ஆளி செடியின் விதையை ‘ஆளிவிதை’ என்று அழைக்கிறோம். இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது. சித்த மருத்துவ பாடல், இது உடலைத் தேற்றும் தன்மை கொண்டதாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும் என்றும் குறிப்பிடுகிறது.
மேலும் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கவைக்கும் ‘காமம் பெருக்கி’ என்றும் எடுத்துச் சொல்கிறது. ஆளி விதையில் கால்சியம், இரும்பு, போலிக்அமிலம், வைட்டமின் சி, கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் வாதத்தையும், கபத்தையும் சமன்படுத்தி, பித்தத்தை சரியான முறையில் இயங்கவைக்கிறது. இது சீரற்ற மாதவிடாயை சீர்செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறது.
மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும்.
ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.
ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பலப்படும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
ஒரு தேக்கரண்டி பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். வயிற்றுப்போக்கு சீர்படும். உடைந்த எலும்புகளை விரைவாக கூடவைக்கும் சக்தியும் ஆளிவிதைக்கு உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ஆளி விதை உணவுகளை கொடுக்கும் பழக்கம், பல்வேறு நாட்டு பழங்குடி மக்களிடம் உள்ளது.
ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவைகளோடு ஆளிவிதை பொடியை கலந்து சூரணம் தயாரிக்கலாம். இதனை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை சீர் செய்திட முடியும்.
அடிபட்டதால் உண்டாகும் வீக்கம், வலி மற்றும் சருமத்தில் உண்டாகும் அரிப்பிற்கு ஆளிவிதை பொடியை எலுமிச்சம் பழ சாற்றில் அரைத்து பூசலாம். ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ஆளி விதைக்கு உடல் எடையை குறைக்கும் சக்தியும் இருக்கிறது.
பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு எலும்புகள் உறுதியாக ஆளிவிதை பொடியை பாலில் கலந்து பருககொடுக்க வேண்டும். ஆளிவிதை பல்வேறு சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது...