ஆழ்மன சக்திகளில் ஒன்பது வகைகளில் அடிப்படையான ஒருசில சக்திகளை அடையும் வழிகளையும் பார்த்தோம். உயர் உணர்வு நிலை, ஒருமுனைப்படுத்தப்பட்ட மனது, எண்ணங்களில் கட்டுப்பாடு, மனதில் உருவகப்படுத்தி எதையும் தெளிவாகக் காணும் பழக்கம் ஆகியவை ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சக்தி வாய்ந்த உபகரணங்கள். அந்த உபகரணங்களை வைத்துக் கொண்டு, முயல்பவர்களுக்கு மற்ற சக்திகளையும் பெறத் தேவையான, இனி மேல் போக வேண்டிய, வழிகள் தானாகப் புலப்படும்.
ஆவிகளுடன் பேசுதல், தொடர்பு கொள்ளுதல், மற்றவர்களை வசியம் செய்து தங்கள் விருப்பப்படி நடக்க வைத்தல் போன்ற சக்திகளையும் சிலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். பதஞ்சலியோ தன் யோக சூத்திரங்களில் ஆழ்மன சக்திகளைப் பெற்ற மனிதன் கூடு விட்டு கூடு பாயலாம், மற்றவர்கள் கண்களில் இருந்து மறைந்து போகலாம், தண்ணீரில் மூழ்காமல் இருக்கலாம் என்று எல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார். பதஞ்சலி சொல்லும் பல அதீத சக்திகளுக்கான பயிற்சிகள் கடுமையானவை மட்டுமல்ல, அந்தப் பயிற்சிகள் குறித்த முறையான ஞானம் உள்ளவர்களும் மிகவும் குறைவு. அபூர்வமான சித்தர்கள், யோகிகள் மட்டுமே அறிந்த, கடைபிடிக்க முடிந்தவையாக அந்தப் பயிற்சிகள் கருதப்படுகின்றன. மொத்தத்தில் ஆழ்மன சக்தியால் சாதிக்கக் கூடிய அற்புதங்களின் எல்லை மனிதனின் கற்பனையின் எல்லை என்றே சொல்லலாம்.
இத்தொடரில் நாம் பார்த்த ஆழ்மன சக்தி பெற்றவர்கள் பெரும்பாலும் தற்செயலாக அந்த சக்தியைப் பெற்றவர்களாக இருந்ததைப் பார்த்தோம். ஏதோ ஒரு வகையில் அந்த குறிப்பிட்ட சக்திக்கு ‘ட்யூன்’ ஆனவர்கள் அவர்கள். அவர்களில் ஒருசிலர் அப்படி ’ட்யூன்’ ஆன பிறகு அதனை ஒத்த தன்மையுள்ள ஓரிரு சக்திகளையும் தங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய சிறப்புத் தன்மை அந்த ஒன்று அல்லது ஓரிரண்டு சக்திகளுடன் நின்று போகிறது. அவர்கள் எவ்வளவு தான் விருப்பப்பட்டாலும் வேறு ஏதாவது ஆழ்மன சக்தியைப் பயன்படுத்த முயற்சித்தால் அதில் தோல்வியே அடைகிறார்கள். இப்படி ஒரு வரம்புக்குள்ளேயே இருக்க நேர்வது தற்செயலாக ஒரு சக்தியைப் பெற்றவர்களுடைய குறைபாடாகி விடுகிறது. இன்னொரு குறைபாடு என்னவென்றால் அந்த சக்தி திடீரென்று வந்தது போல திடீரென்று போய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.
முறைப்படி பயிற்சிகள் செய்து படிப்படியாக மனதை பக்குவப்படுத்தி, ஆட்கொண்டு, ஆழ்மன சக்திகளை அடைந்தவர்கள் இப்படி ஓரிரு சக்திகளின் வரம்புகளுக்கு உட்பட்டு தங்கி விட வேண்டிய அவசியமில்லை. அது போல அந்த சக்திகளுக்கு எதிரான செயல்பாடுகள் இல்லாத வரையில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பெற்றிருக்க வேண்டிய நிலையும் இருக்காது. யோகிகள், சித்தர்கள் போல எல்லா ஆழ்மன சக்திகளைப் பெற முடியா விட்டாலும், அடைந்துள்ள முன்னேற்றத்தையும், ஆற்றலையும் பொறுத்து, தங்களிடம் பல விதமான ஆழ்மன சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் பார்க்க பிரமிக்க வைத்தாலும் நிஜ வாழ்க்கைக்கும், நமது முன்னேற்றத்திற்கும் பயன் தராத சக்திகளைப் பெற அதிகமாக ஒருவர் பாடுபடுவது முட்டாள்தனம். உதாரணத்திற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்த சக்தி படைத்த ஒரு சாதுவைச் சொல்லலாம். அந்த சாது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னாலேயே மறு கரையில் இருந்து நதி நீர் மீது நடந்தபடியே இக்கரைக்கு வந்தார். அந்த சக்தி பெற நிறைய பயிற்சிகளை நிறைய காலம் செய்து பெற்றதாகச் சொன்னார். ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொன்னார். “காலணா கொடுத்தால் படகுக் காரன் நதியைக் கடந்து இறக்கி விடுகிறான். அப்படிப்பட்ட வேலைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டீர்கள்?”. அவர் கேட்டது போல காலணா சமாச்சாரங்களுக்காக நிறைய கஷ்டப்படாதீர்கள். உங்கள் நிஜ வாழ்க்கைக்கு உதவக்கூடிய, உங்களை மேம்படுத்தக்கூடிய ஆழ்மன சக்திகளைப் பெறவே முயற்சியுங்கள். வெறும் புகழுக்காக ஆழ்மன சக்திகளை வெளிப்படுத்த நினைப்பது ஒருவித மூன்றாந்தர வெளிப்பாடாகவே விஷயமறிந்தோர்களால் கருதப்படுகிறது.
இதை தன்னுடைய நூலில் (A search in Secret India) பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவ ஞானி ப்ரம்மா என்ற யோகியைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றார். அவருடைய யோக சக்திகளை நேரில் காண விரும்புவதாகச் சொன்னார். முதலில் ப்ரம்மா தயங்கினார். பால் ப்ரண்டன் புரியாமல் கேட்டார். "உங்கள் யோக சக்திகளை மறைவாகவும் ரகசியமாகவும் வைத்திருப்பது எதற்காக? நான்கு பேர் அறிவதிலும், அவர்களுக்கு சொல்லித் தருவதிலும் என்ன நஷ்டம்?"
ப்ரம்மா சொன்னார். "ஐயா அரசன் பொன்னையும், செல்வத்தையும் வீதிகளில் நான்கு பேர் பார்க்க விரித்து வைப்பதில்லை. பொக்கிஷங்களை கஜானாவில் தான் பாதுகாப்பாக வைக்கிறான். அவனிடம் இருப்பதையெல்லாம் வெளிப்படுத்தினால் தான் அவன் அரசன் என்றில்லை. அது போல் எங்கள் தேசத்தில் உண்மையான யோகிகள் தங்கள் சக்திகளைப் பொக்கிஷமாகவே பாதுகாக்கிறார்கள். அவற்றைப் பலர் பார்த்து வியக்க விளம்பரப்படுத்துவதில்லை. அதன் அவசியமும் அவர்களுக்கு இல்லை. மேலும் எல்லா உன்னதமான கலைகளையும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே யோகிகள் கற்பிக்கவும் முனைகிறார்கள். ஏனென்றால் தகுதியில்லாதவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் கூட தீமையான விளைவுகளைத் தான் தருகின்றன என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்...."
மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள் அவை. ஆழ்மன சக்திகளை அடைய விரும்புபவர்கள் இதை நினைவில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய பயிற்சிகளையும், அதன் விளைவுகளையும் ரகசியமாகவே வைத்துக் கொள்வதே உத்தமம். ஆரம்பத்தில் இதில் கிடைக்கும் சிறு வெற்றிகள் தரும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. அப்போது இயல்பாகவே பலரிடம் சொல்லி ஆனந்தப்படத் தோன்றும். ஆனாலும் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடையும் வரை நாம் பெறும் வெற்றிகளை எல்லோருக்கும் பிரகடனப்படுத்துவது முழுமையான வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். ஏனென்றால் அப்படிச் செய்கையில் அந்த ஆழ்மன சக்தியைப் பெறுவதை விடவும் அதிகமாக அதை அடுத்தவருக்கு நிரூபிக்கவும், அவர்களிடம் பெயர் வாங்கவுமே நம்மை அறியாமலேயே நாம் முக்கியத்துவம் தர ஆரம்பிப்போம். இது நமது உள்நோக்கிய பயணத்தை வெளி நோக்கிய பயணமாக மாற்றி திசை திருப்பி விடும். சிலர் பாராட்டுவார்கள். சிலர் நம் சக்திகளைக் காட்டி நம்மை சாமியார்களாக ஆக்கியும் விடக் கூடும். இப்படி அற்ப சாதனைகளில் கிடைக்கும் இந்த அற்ப திருப்திகளில் மகிழ்ந்து அத்துடன் நின்று விட்டால் இனியும் நமக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டங்களை நாம் அடைய முடியாமல் போய் விடும்.
இதில் முழு ஆளுமையை அடைகிற வரையில் ஒரு முறை சாத்தியப்பட்டது அடுத்த முறை சாத்தியப்படாமல் போகலாம். அதற்கு காரணங்கள் நமக்குள்ளோ, நமக்கு அப்பாற்பட்டோ இருக்கலாம். உண்மையான காரணங்களை அறிந்து நம் முயற்சியில் உள்ள குறைபாடுகளாக இருந்தால் அதை சரி செய்து கொண்டு, நமக்கு அப்பாற்பட்ட, நம் கட்டுப்பாட்டில் இல்லாத காரணங்கள் என்றால் அதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னே செல்ல வேண்டி இருக்கும். ஆனால் கூட்டம் கூட்டி நாம் முயற்சி செய்யும் போது, வெற்றி கிடைக்காத போது பலர் ஏளனம் செய்ய ஆரம்பிக்கலாம். நமக்கே முன்பு கிடைத்த வெற்றி தற்செயலாகக் கிடைத்தது தான் போல இருக்கிறது, உண்மையில் நமக்கு இந்த சக்திகள் இல்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கலாம். இதெல்லாம் நாம் வெற்றி பெற பெரும் தடையாக மாற ஆரம்பிக்கும். மேலும் ஒரிரு முறை வெற்றி பெற்று பின் வெற்றி பெற முடியாதவர்களில் சிலர் தங்கள் புகழைத் தக்க வைக்க பின் ஏமாற்று வேலைகளில் கூட ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். ஏமாற்ற ஆரம்பிக்கிறவர்கள் அந்த சக்தியை நிரந்தரமாகவே இழக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்த ஆழ்மன சக்திகள் விஷயத்தில் வெற்றி விகிதம் எப்போதுமே நூறு சதவீதமாக இருப்பதில்லை. பத்து முதல் இருபது சதம் வரை தோல்விகளுக்கு வாய்ப்பு உள்ளது. அதற்குக் காரணங்கள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த உண்மையை மறப்பதும், மறுப்பதும் உண்மையான சாதகனுக்கு உகந்ததல்ல. எத்தனை பெரிய கைராசிக்கார மருத்துவராக இருந்தாலும் அவர் சிகிச்சை செய்யும் நோயாளிகளில் சிலரும் இறப்பதுண்டு. அதற்கென யாரும் அவரைக் குறைத்தோ, அந்த மருத்துவ சாஸ்திரத்தைக் குறைத்தோ மதிப்பிடுவதில்லை அல்லவா? அதே போலத் தான் இதுவும். பெரும்பான்மை வெற்றிகளை வைத்தே மதிப்பிடல் முக்கியம். சில முயற்சிகளில் தோல்வி வருவது இயற்கையே. அதனால் அதை மறைக்கவோ மறுக்கவோ முற்படாதீர்கள். அந்தப் பக்குவம் இருந்தால் மட்டுமே முன்னேற்றத்தின் அடுத்த கட்டங்களை உங்களால் சென்றடைய முடியும்.
மேலும், ஆழ்மன சக்தி வகை எதுவானாலும் அதை அடைய அதற்கான
பிரத்தியேக, உறுதியான, தொடர்ந்த ஆர்வம் இருத்தல் தேவை. அந்த ஆர்வம் பத்தோடு சேர்ந்த பதினொன்றாக இருந்தால் அதில் பெரிதாக எதுவும் சாதிக்க முடியாது. முன்பே பல முறை குறிப்பிட்டது போல அசாத்தியப் பொறுமையும் வேண்டும். கீரை விதைத்தவன் படுகிற அவசரம் தென்னை விதைத்தவன் படக்கூடாது. ஆழ்மனசக்தி வேண்டி முயற்சிக்கிறவர்கள் இதை எப்போதும் நினைவில் இருத்த வேண்டும். அதே போல சில முறை நமக்கு சில வெற்றிகள் விரைவாகக் கிடைக்கலாம். சில முறை நம் முயற்சிகளுக்குப் பலன் இருப்பது போலவே தோன்றாது. நம் பயணம் அப்படியே தேக்கமடைந்து விட்டதைப் போன்ற பிரமை கூட ஏற்படும். அந்த நேரத்தில் தான் நாம் முயற்சிகளைக் கை விட்டு விடக்கூடாது. வெளிப்பார்வைக்குத் தெரியா விட்டாலும் சில நுணுக்கமான மாற்றங்கள் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டு தான் இருக்கும். ஒட்டு மொத்தமாக ஒரு நாளில் நாம் உணர நேரிடலாம். எனவே பொறுமையாக நாம் தொடர வேண்டியது முக்கியம்.
இதை எல்லாம் சொல்லும் அளவுக்கு செயல்படுத்துதல் அவ்வளவு சுலபமல்ல. படிக்கும் போதும், மற்றவர் சாதனையைக் கேட்கும் போதும் நமக்குள் எழுகிற எழுச்சியையும், ஆர்வத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுதல் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இது சாத்தியப்பட, இது சம்பந்தமான நூல்களை தொடர்ந்து அதிகம் படியுங்கள். இதில் ஆர்வம் உள்ளவர்களுடன் அதிகம் தொடர்பு வையுங்கள். ஓரளவு வெற்றி பெறும் வரை தாக்குப்பிடித்து உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து இருப்பது மிக மிக முக்கியம். அந்த வெற்றிகள் சாத்தியமானவுடன், உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்.
ஆழ்மன சக்தியில் ஆளுமையைப் பெறும் வரை அதனை சோதித்து பார்த்துக் கொண்டு இருப்பது இயற்கையே. ஆனால் அதனை முழுமையாகப் பெற்ற பிறகும் தேவையில்லாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது முட்டாள்தனமே. நம்மால் கையை அசைக்க முடிகிறது என்பதற்காக நாம் வெறுமனே கையையே அசைத்துக் கொண்டிருப்போமா? எப்போது தேவையோ அப்போது மட்டும் தானே நாம் கையை அசைப்போம். அது போல ஆழ்மன சக்தியையும் தேவைப்படும் போது தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவது தான் முறையானது.
ஆழ்மன சக்தியின் கீழ்நிலை சக்திகளாக மாந்திரீகம், செய்வினை, பலவீனமானவர்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தல் போன்றவையெல்லாம் கூட சொல்லப்படுகின்றன. உண்மையாக ஆழ்மன சக்தி வாய்ந்தவர்கள் யாரும் இது போன்ற முறைகளில் இறங்குவதுமில்லை. இந்த சக்திகளால் அவர்கள் பாதிக்கப்படுவதுமில்லை. கீழ்நிலை சக்திகள் மேல்நிலை சக்திகள் முன்பு என்றும், எப்பொழுதும் பலம் இழந்து போகின்ற தன்மை வாய்ந்தவை. மேலும் இது போன்ற கீழ்நிலை சக்திகளைப் பயன்படுத்தி அடுத்தவரைத் துன்புறுத்த முயல்பவர்கள் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் துன்பப்பட்டு அழிந்து போகிறார்கள் என்பது ஆணித்தரமான உண்மை. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும் அந்த வகை சக்திகளில் ஆர்வம் காட்டக்கூட முற்படாதீர்கள்.
ஆழ்மன சக்தி பெற உதவும் முதல் நண்பன் தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி செய்யும் முதல் எதிரி அகம்பாவம். உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை. கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள தொடர்பைத் துண்டித்து விடுகிறது. மேலும்
ஆழ்மன சக்திகள் எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும் அடையக் கூடிய எல்லையில்லாத பொக்கிஷம். அப்படி இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாததும் கூட.
பலர் தாங்கள் அடையக்கூடிய அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்றறியாமலேயே பரம தரித்திரர்களாக இருந்து விடுகிறார்கள் என்பது இரக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் அப்படியொரு பொக்கிஷம் இருக்கிறது என்று அறிந்தும் அதை அடையும் வழி பற்றி தெரிந்தும் அந்த வழியில் பயணம் செய்யாமல் இருப்பதும், அந்த வழியில் சிறிது தூரம் பயணித்து திரும்பி வந்து விடுவதும் வடிகட்டிய முட்டாள்தனம்.
உலகில் எதுவுமே தற்செயல் இல்லை. இது போன்ற ஒரு தொடரைப் படிக்க நேர்வதும் கூட அப்படியே. இதைப் படிக்கையில் உங்கள் இதய ஆழத்தில் இதில் லயிப்பு தோன்றுமானால், படிக்கும் போது இருக்கும் ஆர்வம் சில காலம் கழித்தும் நீங்காமல் இருக்குமானால் இது உங்களுக்காகவே எழுதப்பட்டது என்பதை உணருங்கள். இது பற்றி நிறைய சிந்தியுங்கள். இந்த உண்மைகளை மனதில் ஊறப் போடுங்கள். நிஜ வாழ்க்கையில் இது ஒரு பாகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பாதையில் பயணத்தைத் தொடருங்கள். பயணத்தின் வேகம் எப்போதும் ஒரே போல சீராக இருக்காது. பயணம் அவ்வப்போது வேகமும் மந்தமுமாக இருக்கலாம். ஆனால் பயணத்தைக் கை விடாமல் இருப்பது முக்கியம். இதில் முழு வெற்றி, தகுதிகளை வளர்த்துக் கொண்டு கடைசி வரை பயணிப்பவர்க்கே வாய்க்கும் என்றாலும் பயணிக்கும் மற்றவர்களுக்கும் முயற்சி செய்த அளவு வெற்றியும் நற்பலன்களும் கண்டிப்பாகக் கிடைக்கும். முக்கியமாக பிரபஞ்ச சக்தியுடன் கண நேரமானாலும் தொடர்பு கொள்ளும் வரையாவது பயணம் செய்யுங்கள். முன்பு சொன்னது போல உண்மையாகவே பிரபஞ்ச சக்தியுடன் நமக்கு ஒரு அறிமுகம் ஆனவுடன் பின் நாம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. நம் அனுபவங்களே நம்மை மேலும் ஆர்வமாகப் பயணப்பட வைக்கும்...