குண்டலினி சக்தி பயணம் - பாகம் மூன்று...
இது வரை விதிக்கப் பட்ட ஆற்றலை பெற்று மேற்பரப்பான விசயங்களிலே உழன்று உழன்று ஆழமான விசயங்களிலே தோற்று தோற்று வந்த நாம் நம் அக குருவின் துணையால் சேரும் இடம் அறிந்து சேர்ந்து, எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ அதை அறிந்து, எதை பெற்றால் எல்லாம் பெற முடியுமோ அதை பெற்று நிறை நிலை மனிதாய் ஒரு பூரண சித்தராய் உருவாக ஒவ்வொரு படியாக மேலே மேலே நகர்ந்து கொண்டு இருக்கிறோம்..
பழைய முறைகளில் உள்ள குறைபாடுகளை கலைந்து நேர் வழி பாதைகளை அக குருவின் அருளால் தேர்ந்து எடுத்து பெருத்த ஆன்ம இலாபம் பெறுகின்ற வகையில் பயணப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..
அறியாமை என்ற பெரும் நோயினால் பாதிக்கப் பட்ட நாம் இருள் நீங்கி தெளிவு என்ற ஆரோக்கியம், ஒளியை நோக்கி, பயணப் பட நம் அக குருவின் துணை நமக்கு முதலில் தேவை படுவதால் அதனை எப்பொழுதும் பெற்றுக் கொண்டே இருக்க, சுவாச ஒழுங்கு ஒன்றே உகந்த நிலை என முதலில் அறிந்து கொள்கிறோம்..
அந்த அக குருவின் துணையால் மட்டுமே நாம் எங்கும் சிக்கி கொள்ளாது, நமது பயணம் விரைவு பட உதவும் என்பதை அறிந்து சுவாச ஒழுங்கின் துணையோடு அக குருவின் துணையை எப்பொழுதும் பெற்று கொண்டே தெளிவு பட பயணிக்கிறோம்...
நேர் முக பலன்களையே எதிர் பார்த்து பார்த்து மறைமுக பலன்களை முற்றிலும் தவற விட்டு விட்டு வாழ் நாள் முழுமைக்கும் அல்லல் அடைகின்றோம்..
நம் முயற்சிகளுக்கு மறைமுக பலன்களே மிக அதிகமாக கிடைக்கும் என்ற மிக எதார்த்தமான உண்மை புரியாததால், நேர் முக பலன்களுக்கு நம் வாழ் நாள் முழுவதும் விரையம் ஆக்கி கொண்டு இருக்கிறோம்...
நம் மறைமுக பலன்களை உணர்த்தி அதற்கான வழியை ஏற்படுத்தி தருபவர்தான் நம் அக குரு.. நம் மறை முக பலன்கள் மட்டுமே சத்தியமாக பயன் படும்.. ஆனால் மனம் அதை நம்புவதில்லை..
அதே போல் தான் வாசி யோக பயிற்சியும்..
இந்த சுவாசத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி தான் பல பேரிடம் எழும்..
ஆனால் மறைமுகப் பலன்கள் மிக மிக அதிகமாக கிடைக்கும் என்பதை அறியமாட்டார்கள்..
அதனால் தான் நேர்முக பலன்களை பெற பூசைகள் யாகங்கள் வேள்விகள், பிரார்த்தனைகள் என மிக சொற்ப பலன் தரும் வழிகளிலே அதிக நாட்டம் கொள்கின்றனர்..
அன்பே சிவம் என்ற சொல்லில் அன்பின் மூலமாக அளவற்ற இறை ஆற்றலை பெறலாம் என்பது மறைமுக பலன் ஆகும்..
ஆனால் சிவத்தை மட்டும் தொழுது நிற்பது நேர் முக பலனை எதிர்பார்ப்பதாகும்..
பின்னதில் மிக சொற்ப இலாபமே கிடைக்கப் பெற்று வாழ் நாள் தான் விரையமாகும்.. இந்த மறை முக பலனை மனம் அறிய வாய்ப்பு இல்லை..
அக குருவாகிய புத்தி ஒன்றே அந்த இரகசியத்தை அறிய முடியும்..
அதனால் தான் அக குருவின் துணையை நாடி, அளவற்ற ஆன்மா இலாபம் தேட வேண்டிய அவசியம் ஆகிறது..
தன்னுள் இருக்கும் இன்னும் பலப்படாத அககுருவின் துணையால் மட்டுமே இந்த வாசியோக பயிற்சியை நாடி பயின்று பின் அக குருவின் பலத்தால் படிப்படியாக மேலே ஏறுபவர்கள் ஒரு சிலரே...
சுவாச ஒழுங்கின் மூலம் பெறப்படும் அதிக பேராற்றலால் மூலாதாரத்திலிருந்து பிடரியை நோக்கிய பயணத்தில் பிடரியாகிய நினைவகம் பலம் அடைகின்ற போது, அது பல ஜென்மங்களின் நினைவுகளை முன் வைக்கும்..
அப்போது அந்த பிறவிகளில் அடைந்த மேன்மை, நினைவுக்கு வரும் போது விட்டு போன குறையை நிவர்த்தி பண்ண ஒரு புத்துணர்ச்சி வரும்..
அப்பிறவிகளில் அடைந்த தோல்விகள் ஒரு பாடமாக இந்த பிறவியில் தோன்றி மீண்டும் அதை தொடராத வல்லமை கிடைக்கும்..
இதன் மூலம் முன் பிறவிகளின் அனுபவங்கள் நமக்கு கிடைக்கும் போது அது நிகரானது எதுவும் இல்லை என தோன்றும்..
புத்தருக்கும் பட்டினத்தாருக்கும் இப்படிதான் பிடரி என்ற நினைவகத்தில் முன் பிறவி மேன்மைகள் தோன்ற அதற்காக, அதற்கான ஆன்மீக பயணத்தை விரைவு படுத்த அவர்கள் தோன்றிய பிறவியில் முனைந்தார்கள்..
பெருத்த இலாபமாக மறைமுக பலன் தரும் பயிற்சியில் நம் அககுருவின் துணையால் உணர்ந்து முன்னேறுவோமாக..
அடுத்த பகுதியில் சுழிமுனை ஆதாரத்தை நோக்கிய பயணத்தை நிச்சயம் பார்க்கலாம்...