தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான்’ – என்று தொடர்ந்து திராவிட இயக்க எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சில தலித் எழுத்தாளர்கள் கூட எழுதி வருகிறார்கள்.
இதற்கு முன்னே கோயில் நுழைவு போராட்டம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் நமக்குச் சொல்வதில்லை. வரலாற்றை மறைப்பதிலும், திரிப்பதிலும் இவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்களும்கூட வளரவில்லை. தமிழ்நாட்டில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
தலித்துகளுக்காக கோயில் நுழைவு போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான் என்பது பெரியாரியவாதிகளின் வாதம். அவர்கள் சில சம்பவங்களை முன்வைக்கிறார்கள். அந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நாம் ஆராய்வோம்.
முதல் சம்பவமாக இதை நாம் எடுத்துக் கொள்வோம்..
ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது. (பெரியார் சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, பக்கம்.514-515) என்று கூறுகிறார் எஸ்.வி.ராஜதுரை.
அடுத்து,
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று.
1929 ஏப்ரல் முதல் வாரத்தில் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே. அத்தீர்மானம் போட்ட மறுநாள் ஈ.வெ.ரா. கோவைக்குச் சென்றுவிட்டார். பெரியார் கோவை புறப்படுவதற்கு முன்பு குருசாமியை அழைத்து கோவையிலிருந்து நான் திரும்புவதற்குள் இத்தீர்மானத்தை ஒட்டி எந்தவித நடவடிக்கையிலும் இறங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுச் சென்றார். குருசாமியைப் பற்றி நன்கு உணர்ந்தவர் அல்லவா பெரியார்.
பெரியார் ஈ.வெரா.ரா. கோவை சென்ற அன்றே அதாவது 4-4-1929 அன்று மாலையே அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த விரும்பிவிட்டார் குருசாமி. அவரைத் தடுப்பார் யார்?
ஆகவே குத்தூசியார், பொன்னம்பலனார் துணையுடன், ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு முக்கியத் தெரு வழியாகச் சென்று மற்றவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவகையில் தேங்காய், பழம், பூ ஆகியவைகள் அடங்கிய தட்டுடன் மேற்படி ஈசுவரன் கோயிலுக்குள் நுழைந்தனர். (பசுபதியும், கருப்பனும் குடியரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள்)
இதனைப் பொதுமக்களும் பார்ப்பனர்களும் பார்த்துவிட்டனர். குருசாமி நண்பர்களுடன் கோயிலுக்குள் கலாட்டா செய்வதற்கென்றே செல்லுகின்றான் என்ற செய்தியை ஊர் முழுவதும் பரப்பினர். குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர். குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது. பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார். (நூல்: குத்தூசி குருசாமி, ஆசிரியர் : குருவிக்கரம்பை வேலு, பக்.159-160) என்று எழுதுகிறார் குருவிக்கரம்பைவேலு.
ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவைப் பற்றி இரண்டுபேர் எழுதியதின் திரிபுகளை இப்போது பார்க்கலாம்.
ஈரோட்டில் உள்ள ஈசுவரன் கோயிலுக்குள் சா.குருசாமி தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் கோயில் வளாகத்துக்குள் வைத்து பூட்டப்பட்டனர். அவர்கள்மீது வழக்கும் தொடரப்பட்டது என்று எழுதுகிறார் எஸ்.வி.ராஜதுரை. ஆனால் உண்மை என்ன?
வழக்கு சா.குருசாமி மீது போடப்படவேயில்லை. ஈசுவரன், கருப்பன், பசுபதி ஆகிய மூன்றுபேர் மீது மட்டுமே போடப்பட்டது.
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்பும் பெரியார் ஈ.வெ.ரா. முன்பு வகித்துவந்த சில பதவிகளில் தொடர்ந்து இருந்துவந்தார். ஈரோடு கோட்டை ஈசுவரன் கோயில் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் பதவியும் அதில் ஒன்று என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன?
பெரியார் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் அல்ல. துணைத்தலைவர் மட்டுமே.
ஆதித்திராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தான கமிட்டி ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இத்தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும் பெரியார் அவர்களே என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் இதற்கு ஆதாரமே இதுவரை இல்லை.
ஈரோடு கச்சேரி வீதி ஈசுவரன், ஈரோடு மஞ்சைமேடு பசுபதி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பன் ஆகிய மூன்று ஆதிதிராவிடத் தோழர்களையும் நெற்றியில் திருநீறு பூச செய்து அழைத்துக் கொண்டு – என்று எழுதுகிறார் குருவிக்கரம்பை வேலு. ஆனால் உண்மை என்ன?
ஈசுவரன் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர் அல்ல. பிள்ளை சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற இருவரும்தான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அதில் ஒருவர் வள்ளுவர், ஒருவர் பஞ்சமர். இந்த ஈசுவரன் பின்பு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார்.
குருசாமி முதலானோர் கோயிலுக்குள் இருக்கும்போதே வெளிக் கதவைப் பூட்டி விட்டனர். இரண்டு நாட்கள் வரை பூட்டிய கதவைத் திறக்கவும் மறுத்துவிட்டனர் என்று எழுதுகிறார் வேலு. ஆனால் உண்மை என்ன?
வெளிக்கதவை பூட்டவே இல்லை. இரவு 7.00 மணிக்குத்தான் இவர்கள் கோயிலுக்குள் வந்தனர். மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு காவிரியில் குளிக்கச் சென்றனர். பின்பு 7.00 மணிக்கு மீண்டும் அனைவரும் திரும்பி வந்தபோது வெளிக்கதவும் பூட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு போய் விட்டார்கள். இரண்டுநாள் என்பது பொய்யான தகவல்.
குருசாமியின் தோழர்களுக்குச் சாப்பாடு கோயில் மதில் வழியாக ஈவெராவின் துணைவியார் நாகம்மையாரால் அனுப்பப்பட்டது என்று எழுதுகிறார் வேலு.
ஆனால் உண்மை என்ன? சாப்பாட்டை கோயில் வழியாகவே கொண்டுவந்தனர்.
கொண்டுவந்தவர் செட்டி சாமியார் என்பவர். கொடுத்தனுப்பியது வேண்டுமானால் நாகம்மையாராக இருக்கலாம். ஆனால் மதில் வழியாக என்பதெல்லாம் கடைந்தெடுத்தப் பொய்.
பெரியார் கோவையிலிருந்து வந்த பிறகுதான் கோயில் கதவைத் திறக்கச் செய்து அவர்களை வெளிக்கொணர்ந்தார் என்று எழுதுகிறார் வேலு. இதுவும் பொய்.
மறுநாள் காலையே அவர்கள் குளிக்கச் சென்றுவிட்டு மறுபடியும் வந்து பார்த்தபோது கோயில் வெளிக்கதவு மூடப்பட்டிருந்தது. பின்பு அவர்கள் சென்றுவிட்டனர்.
கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு என்ற நூலை திராவிட இயக்கத்தைச் சார்ந்த வாலாசா வல்லவன் எழுதியிருக்கிறார். அதில் ஈரோடு ஈசுவரன் கோயில் நுழைவு சம்பந்தமாக நடைபெற்ற வழக்கை விலாவாரியாக கொடுத்திருக்கிறார். அந்த வழக்கிலிருந்துதான் இந்த உண்மைகளை நான் எடுத்து எழுதியிருக்கிறேன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் குத்தூசி குருசாமியின் பெயரே வரவில்லை. அப்போது குருசாமிக்கு வயது 23தான் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.
குருசாமி அழைத்துப் போயிருந்தால் அவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஈசுவரன் என்பவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். ஈசுவரன்தான் மற்ற இருவரையும் அழைத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்த வழக்குக்காக பல்வேறு பொதுமக்கள் பணத்தை தந்திருக்கிறார்கள். இதில் ஈவெரா 35ரூபாய் மட்டுமே தந்திருக்கிறார். ஆனால் இந்த வழக்கிற்காக சென்னை ஆதிதிராவிட சங்கம் 60ரூபாயை தந்திருக்கிறது. ஈரோட்டில் மிகப்பெரிய வணிக தனவந்தர் பெரியார்தான். அவரே வெறும் 35ரூபாய்தான் தந்திருக்கிறார், ஆனால் சம்பந்தமே இல்லாதவர்கள் பலர் அதைவிட அதிகமாக பணத்தை தந்திருக்கின்றனர் என்பதிலிருந்தே இது சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டம்தானா என்பதில் ஐயம் இருக்கிறது.
எப்படியிருப்பினும் பெரியாரின் தொழிலாளிகள் மற்றும் இயக்கத்தவர்கள் கலந்துகொண்ட கோயில் நுழைவு போராட்டம் நடந்திருக்கிறதே என்று கூறலாம். ஆம் உண்மைதான்.
ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக ஏன் பெரியார் தலைமையில் கடைசிவரை தமிழகத்தில் ஒரு கோயிலில் கூட கோயில் நுழைவு போராட்டம் நடத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. 1925ல் காங்கிரசை விட்டு விலகிவிடுகிறார். ஆனாலும் 1927வரை காந்தியையும் கதரையும் ஆதரித்துக்கொண்டு இருக்கிறார். 1926க்குப் பிறகுதான் ஒரு புதிய இயக்கத்துக்கு வித்திடப்படுகிறது.
இயக்கத்துக்கு பலம் சேர்க்க பல்வேறு போராட்டங்களை ஆரம்பிக்கவும் அன்று பெருவாரியாக அரசியல் விழிப்புணர்வு பெற்ற ஆதிதிராவிடர்களை தங்கள் இயக்கத்தின் பக்கம் வளைக்கவும்தான் இந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மற்றபடி தலித்துகள் கோயிலில் நுழைந்து வழிபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக பெரியார் இந்த போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. கோயில் நுழைவு தாழ்த்தப்பட்டவர்களுக்காக அல்ல... என்பதே உண்மை...