இதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்துகொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு மேற்கொண்டு தொடருங்கள்.
ஒரு நாய் எதற்காகத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?
தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடும் சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்துப் போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்துகொள்ளாது என்கிறீர்களா. எதையும் உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்து வரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு. அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு. வாருங்கள்.
ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கும், அதில் அமைந்திருக்கும் மேன்சனுக்கும், சுற்றியிருக்கும் அழகான தோட்டத்துக்கும் நூற்றாண்டு கால வரலாறு உண்டு. 1893ல் அந்த எஸ்டேட்டை வாங்கிய முதலாளியான லார்ட் ஓவர்டவுன், அதனை கிழக்கு, மேற்கு என பிரித்து விரிவுபடுத்தினார். இடைப்பட்ட பகுதியில் ஓர் அருவி விழுந்து நீரோடையாக ஓடியது. பாறைகளால் நிரம்பிய அந்தப் பகுதியில், நீரோடையைக் கடக்கும் விதமாக பாலம் ஒன்றையும் கட்டினார்.
கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர, தடிமனான கைப்பிடிச் சுவர். சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாக அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். பாலத்தைக் கடந்தால் அந்தப் பக்கம் மேன்சன். ஒரு நாய் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை பாலத்தின் கட்டைச் சுவர் மேலே வைத்துக்கொண்டு, கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களால் உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து, பாறைகளில் மோதி தற்கொலையும் செய்து கொள்ளலாம்.
அப்படித்தான் குதித்து விட்டது பென், அக்டோபர் 2005ல். நீண்ட மூக்கும் புசுபுசு முடியும் கொண்ட இணிடூடூடிஞு ரக பெண் நாய் அது. அந்த ஊருக்கு வந்திருந்த டோனா தன் கணவருடனும், இரண்டு வயது மகனுடனும் செல்ல நாய் பென்னுடனும் வாக்கிங் சென்றாள். அன்று சூரியன் முழுமுகம் காட்டிச் சிரித்தது.
ஓவர்டவுன் பாலத்துக்கு அருகில் வந்தார்கள். பென் துள்ளலோடு பாலத்தின் மீது ஓடியது. பாதி பாலத்தைத் தாண்டி வலதுபுறமுள்ள கடைசி இரு வளைவுகளுக்கு இடையே வந்த பென், சட்டென கைப்பிடிச் சுவர் தாண்டி கீழே குதித்துவிட்டது.
‘ஓ மை காட்!’ அலறோடு அவர்கள், பாலத்தின் கீழே பார்க்க, பாறைகளின் மேல் விழுந்து அலங்கோலமாகக் கிடந்தது பென். தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அதன் கால்கள் முறிந்திருந்தன. தாடை எலும்புகள், பின்பக்க எலும்புகள் என பல்வேறு முறிவுகள். வலியில் பென், கதறிக் கொண்டிருந்தது. ‘அதனைச் சாக அனுமதிப்பதே உத்தமம்’ என்றார் டாக்டர்.
பென் உயிரைவிட்டது. டோனாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கென்னத் என்பவர் வந்திருந்தார், அதுவும் தனது செல்ல நாயுடன்.
அது நீண்ட மூக்கும் தகதக முடியும் கொண்ட Golden Retriever ரகம். கென்னத்தும் தன் நாய் பற்றிய சம்பவத்தை அப்போது சொன்னார். ‘இவன்கூட இப்படித்தான். போன வருடம் ஒருநாள் அந்தப் பாலத்தின் மீதிருந்து குதித்துவிட்டான். நீங்கள் சொன்ன அதே இடத்தில்தான். நல்லவேளை. பாறைமேல் விழவில்லை. மிகவும் பாதுகாப்பாக ஒரு புதர்மேல் விழுந்திருந்தான். அடி பலமில்லை. ஓரிரு நாள்கள் பயந்ததுபோலஇருந்தான். எதுவும் சாப்பிடவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிட்டான். என்ன, நாங்கள் இப்போது இவனை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின்மீது செல்வதில்லை.’
கென்னத் சொல்லச் சொல்ல, டோனாவுக்கு அதிர்ச்சி. ‘நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?’
‘நீங்கள் மட்டுமல்ல, இந்நகரில் வசிக்கும் பலரும் தங்கள் செல்ல நாய்களை அங்கே பறிகொடுத்திருக்கிறார்கள். நாய்களோடு அங்கே செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள். அதை நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் இடம் என்றுதான் அறிவித்திருக்கிறார்கள்.’ டோனா வாயடைத்துப் போனாள்.
சென்ற நூற்றாண்டிலிருந்து இன்றைய தேதி வரை நூற்றுக்கணக்கான நாய்கள், ஓவர்டவுன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக வலதுபக்கத்தில். கடைசி இரு அரைவட்ட வளைவுகளுக்கு இடையில். இன்ன வருடம், மாதம், தேதியில் இந்த ரக நாய் ஒன்று, முதல் முறையாகக் குதித்து இந்த அமங்கள காரியத்தை ஆரம்பித்து வைத்தது என்று பக்காவான புள்ளிவிவரத்தை யாராலும் சொல்ல முடியவில்லை. 1950-லிருந்து வருடத்துக்கு குறைந்தது டஜன் நாய்களாவது இவ்விடம் தற்கொலை செய்து கொள்கின்றன. ஒருமுறை குதித்து உயிர் பிழைத்த சில நாய்கள், உடல்நிலை சீராகிய பின், மீண்டும் இதே பாலத்துக்கு முன்பு அட்டெம்ப்ட் செய்த அதே இடத்துக்கு வந்து இன்னொரு முறை குதித்து ஆனந்தமாகத் தம் உயிரை விட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
ஏன்? பாலத்தில் அப்படி என்னதான் மர்மம் இருக்கிறது? அதுவும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் அமானுஷ்ய சக்தி ஏதேனும் இருக்கிறதா? அந்த சக்திதான் நாய்களைச் ‘செத்து செத்து விளையாடக்’ கூப்பிடுகிறதா?
சென்ற நூற்றாண்டின் மத்தியில் உலகத்தின் கவனம் இந்தப் பாலத்தின் மேல் குவிந்தது. நாய்நேசர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்தே தீர வேண்டுமென்பதில் ஆர்வமானார்கள். விதவிதமான ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.
நாய்கள் பாலத்தில் மேன்சனை நோக்கிச் செல்லும் வலதுபுறத்தில், கடைசி இரு வளைவுகளுக்கு இடையில் மட்டுமே குதிக்கின்றன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை. Labradors, Collies, Retrievers போன்ற நீண்ட மூக்குகள் கொண்ட நாய்கள் மட்டுமே குதிக்கின்றன. நாய்களை இழந்தவர்கள் சொன்ன தகவல்கள் மூலம் இப்படிப்பட்ட பொதுவான ஒற்றுமைகள் தெரிய வந்தன.
எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படுமே. ஒரு கதை பரவியது. 1994ல் கெவின் என்ற தீவிர கிறித்துவன் தனது ஆண் குழந்தையோடு, இந்தப் பாலத்துக்கு ஓடிவந்தான். கைப்பிடிச் சுவர் மேல் ஏறி நின்றபடி, ‘இந்தக் குழந்தை கிறித்துவத்துக்கு எதிரானது. பின்னாளில் கிறித்துவத்தையே அழித்துவிடும். வேண்டாம் இந்தக் குழந்தை…’ என்று குழந்தையைக் கீழே வீசிக் கொன்றான். பின் அவனும் அங்கிருந்து குதித்தான். அவனது தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
அந்தக் குழந்தைதான் இப்போது ஆவியாக ஓவர்டவுன் மேன்சனை, அந்தப் பாலத்தைச் சுற்றிச் சுற்றி வருவதாகவும், அந்த ஆவி நாய்களின் கண்களுக்குத் தெரிய அவை மிரண்டு போய் பாலத்திலிருந்து குதிப்பதாகவும் ஊருக்குள் செய்தி பரப்பப்பட்டது. அப்படியொரு சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் இல்லாததாலும், 1994க்கு முன்பும் நாய்கள் அங்கிருந்து குதித்திருக்கின்றன என்பதாலும் அந்த வதந்தி செத்துப் போனது.
ஆதி ஐரோப்பியர்களின் ஓர் இனமான செல்ட் மக்களின் நம்பிக்கைப்படி, ஓவர்டவுன் எஸ்டேட்டில் அந்தப் பாலம் அமைந்துள்ள இடமானது மிகவும் உணர்வுபூர்வமானது. அந்த இடத்தில்தான் உலகத்தின் சொர்க்கமும் நரகமும் சந்திக்கின்றன. இது பழம் பெருச்சாளிகள் சிலர் மார்தட்டி முன் வைத்த கருத்து. இருக்கட்டுமே. அந்த உணர்வுபூர்வமான புள்ளியில் நாய்கள் மட்டும் சாக வேண்டும்? பன்றிகள், குதிரைகள், மாடுகள், மனித ஜென்மங்கள்கூட அப்பாலத்தைக் கடக்கின்றன. அவை ஏன் குதிப்பதில்லை என்ற கேள்வி எழுந்ததும், பெருச்சாளிகள் பேச மறுத்துவிட்டன.
இருந்தாலும் ஏதோ அமானுஷ்ய சக்தி, அந்தப் பாலத்தில் இருக்கிறது. அதுவே நாய்களைத் தூண்டி விடுகிறது அல்லது மிரளச் செய்கிறது என்ற கருத்து புஷ்டியாகிக் கொண்டே போனது. வெயில் நாள்களில் மனநல நிபுணர்கள் நாய்களோடு பாலத்தில் நடந்து பார்த்தார்கள். அந்தக் குறிப்பிட்ட இடம் வந்ததும் நாய்கள் மிரளுவதை, குதிக்க நினைப்பதை உணர்ந்தார்கள்.
மனநல மருத்துவரான டேவிட் சான்ஸும் தனது பத்தொன்பது வயது கிழட்டு நாய் ஹென்றிக்ஸை வைத்து சோதனை செய்தார். ‘நான் அதைப் பிடிக்கவில்லை. அது சுதந்தரமாக ஆனந்தமாக பாலத்தின் மேல் நடந்துபோனது. வலதுபுறத்தின் அந்த இடம் வந்ததும் ஒருமாதிரி ஆகிவிட்டது. கட்டைச் சுவரின் மேல் கால்களால் பிராண்ட ஆரம்பித்துவிட்டது. வயதான காரணத்தினால் அதனால் எம்பிக் குதிக்க முடியவில்லை.’
சான்ஸ், அந்த இடத்தில் தன் நாய் ஏதையோ கண்டு, அல்லது கேட்டு, அல்லது ஏதோ வாசனையால் ஈர்க்கப்பட்டதால் அப்படிச் செய்துள்ளது. அது எதனால் என்று தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்றார். பின் டேவிட் செக்ஸ்டன் என்ற விலங்கியல் சிறப்பு நிபுணர் அந்த ஆராய்ச்சியில் இறங்கினார்.
நாய்களைப் பயமுறுத்தும் விதமாக தோற்றத்தைக் கொண்ட எந்தப் பொருளும் அங்கில்லை. நாய்களை மிரளச் செய்யும் விதமான ஒலிகளும் அங்கே கேட்பதில்லை. எனவே ஏதோ வாசனைதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். பாலத்தின் கீழ் எலிகள் நிறைய இருந்தன, கூடவே மிங்க் என்ற பிராணிகளும். (மிங்க் – குளிர் பிரதேசங்களில் வாழும் பாலூட்டி விலங்கு. அதன் ரோமத்துக்காக (Fur) வேட்டையாடப்படுவது.) எலிகளைவிட, மிங்குகளின் மணம் நாய்களைத் தூண்டி இழுப்பவையே.
இதனைக் கண்டறிந்த டேவிட், பத்து வேறு வேறு நாய்களை பாலத்தில் நடக்க விட்டு ஆராய்ச்சி செய்தார். அவற்றில் ஏழு நாய்கள் மிங்குகளினால் ஈர்க்கப்பட்டன. ‘மிங்குகளை வேட்டையாடுவதற்காக நாய்கள் பாலத்திலிருந்து குதிக்கின்றன. இதுவே மர்மத்துக்கான விடை’ என்றார் டேவிட்.
விஷயம் தீர்ந்துவிடவில்லை. மிங்குகள் சென்ற நூற்றாண்டில் பாதியில்தான் பிரிட்டனுக்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. பின்பே அவை பல்கிப் பெருகின. ஸ்காட்லாந்தில் பல பாலங்களுக்கு அடியில் மிங்குகள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. இருந்தும் ஏன் இந்தப் பாலத்திலிருந்து மட்டும் நாய்கள், மிங்குகளுக்காக, அதுவும் வலதுபுறத்திலிருந்து மட்டும் குதிக்க வேண்டும்?
நாய்களை அழைத்து வருபவர்கள் மன அழுத்தத்தில், தற்கொலை எண்ணத்துடன் இருந்தால் அந்த உள்ளுணர்வு நாய்களுக்கும் பரவும் என்றொரு மேலோட்டமான கருத்தும் உண்டு. ஆனால் நாய் ஓனர்கள் எல்லோருக்குமே அப்படிப்பட்ட எண்ணம் இருக்க வாய்ப்பில்லையே. தவிர, தானே வந்து தனியே செத்துப் போகும் நாய்களை என்ன சொல்ல?
இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்…’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்துக்குச் சென்று…