தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.
இந்திய அளவிலான தலித் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே இங்கே இருந்தனர். இவ்வாறு செயல்பட்ட தலைவர்களுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).
இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்து வதில் இருந்த சிற்சில தடைகள் 1835-ம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, இங்கு சுயமாய்ப் பத்திரிகைகள் நடத்தும் முயற்சிகள் எழுந்தன. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பத்திரிகை களைத் தொடங்கினார்கள். பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை முன்னோடி இதழ்களாகும். இந்த நிலையில்தான் தாங்கள் எப்பெயரால் ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார். முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது. கிராமங்களில் நடைபெற்ற சமூகப் பிரச்சினைகள்கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப் பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இவ்விதழ் பங்காற்றியது.
அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் தலையீடு செய்துவந்தார். எடுத்துக்காட்டாக, ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு ஒடுக்கப்பட்ட குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள். இதில், இரட்டை மலை சீனிவாசனின் பங்கு முக்கியமானது. 1894-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இது தொடர் பாகத் தனிநூலாக எழுதக்கூடிய அளவுக்கு இந்தப் போராட்டங்கள் விரிந்திருந்தன. 1923-க்குப் பின்னர், சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பி னராகவும் மேலவை உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. சட்டப்பேரவையில் அவரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் தொடர்பாக அவர் சிறு வெளியீடுகளை வெளியிட்டுவந்தார். அவ்வாறு அவரால் வெளியிடப் பட்டு, இன்றைக்குக் கிடைக்கும் பிரசுரங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை.
முரண்களை ஒதுக்கும் வரலாறு
வரலாற்றை எழுதும்போது சம்பந்தப்பட்ட காலத்தின் வெவ்வேறு குரல்கள், முரண்கள் போன்றவற்றை மௌனமாக ஆக்கிவிட்டு ஒற்றை வரலாற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளே பெரும்பாலும் நடக் கின்றன. உடனடி அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு எழுதப்படுவதால் வரும் தீமைகள் இவை. தலித் அரசியல் வரலாற்றியலிலும் இது போன்ற தருணங்கள் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு, வரலாறு பற்றி வெவ்வேறு கருத்து நிலை கொண்ட குழுவினர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இரட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தேடும்போது இந்த அம்சம் பளிச்சிடுகிறது.
மாறுபட்ட அணுகுமுறை..
இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.
1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.
பூனா ஒப்பந்தமும் காந்தியுடனான உறவும்
தாழ்த்தப்பட்டோர் தரப்பிலிருந்து இந்திய தேசியவாத அரசியல் சந்தித்த முக்கிய அழுத்தம் என்றால், இரட்டை வாக்குரிமையும் அதைத் தொடர்ந்த பூனா ஒப்பந்தமும்தான். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பாக அம்பேத்கரோடு சேர்ந்து சீனிவாசனும் பங்கேற்றார். இது பற்றிய சிறு பிரசுரம் ஒன்றையும் நாடு திரும்பியதும் வெளியிட்டார்.
பிறகு, 1932 செப்டம்பர் 24-ல் காந்தியின் உண்ணா விரதத்தால் இரட்டை வாக்குரிமை கோரிக்கை கைவிடப் பட்டு ஏற்பட்ட பூனா ஒப்பந்தத்தில் சீனிவாசனும் கையெழுத்திட்டார். காந்தியோடு இணக்கம் கொண்டிருந்த சுவாமி சகஜானந்தர் போன்றோர்கூட இந்தக் கோரிக்கை தொடர்பாக அம்பேத்கரை ஆதரித்த உணர்வுபூர்வமான தருணம் அது. அந்தத் தருணத்தில் மற்றொரு தாழ்த்தப்பட்டோர் தலைவரான எம்.சி. ராஜா, காந்தி சார்பாக நின்றபோது சீனிவாசன் அம்பேத்கர் ஆதரவாக இருந்தார். பின்னாளில் காந்தியோடும் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக சீனிவாசன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே 1906 முதலே காந்தியோடு தொடர்பு கொண்டிருந்த அவர், 1930-களில் ஹரிஜன சேவா சங்கத்தை காந்தி தொடங்கிச் செயல்பட்டுவந்தபோது, அவரோடு தலித் மேம்பாடு சார்ந்த உரையாடலை மேற்கொண்டிருந்தார். தன்னுடைய அரசியல் கருத்து நிலை பிறழாமலேயே அரசியல் இணக்கத்தை சீனிவாசன் பேணிய பண்பை இந்த உரையாடலில் அறிய முடிகிறது. காந்தியிடமும் இதற்கான இடம் இருந்தது. காந்தியோடு சீனிவாசன் கொண்டிருந்த இந்தத் தொடர்பு, இன்னும் அதிகம் ஆராயப்படாத ஒன்றாக இருக்கிறது. இதே போல, ஒடுக்கப்பட்டோருக்காக 1930-களின் இறுதியில் சீனிவாசன் உருவாக்க விரும்பிய அமைப்புபற்றிய தகவல்கள் மங்கலாகவே கிடைக்கின்றன. இவ்வாறு பல்வேறு அரசியல் நிலைப்பாட்டினரோடு ஒடுக்கப்பட்டோரின் மேம்பாடு சார்ந்து உரையாடக் கூடிய வெளி அவருக்கு இருந்தது.
இவ்வளவு இருந்தும், மொத்தமாக மதிப்பிட இரட்டைமலை சீனிவாசன் பற்றிய முழு வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை. 1938-ல் அவரே எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ என்ற சிறு வரலாற்றுக் குறிப்பு நூல், சிறு பிரசுரங்கள் தவிர, வேறெதுவும் கிடைக்கவில்லை. அவர் நடத்திய பத்திரிகையின் ஒரு பிரதிகூடக் கிடைக்கவில்லை. அவரது இருபதாண்டு கால தென்னாப்பிரிக்க வாழ்க்கை பற்றிய பதிவுகள் கிடைக்கவில்லை. இப்படியாக, அவருடைய வாழ்க்கை வரலாறு முழுமை கொள்ளாமலே இருக்கிறது.
இவ்வாறான ஆதாரங்களைத் திரட்டிப் பார்த்தால் தான் அவர் மேற்கொண்ட பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளுக்கு இடையேயான இணக்கத்தையும் தொடர்ச்சியையும் முரண்களையும் கண்டறிய முடியும். அவ்வாறு அறியும்போதுதான் ஒடுக்கப்பட்டோர் அரசியலின் இடைவெளிகளை நிரப்ப முடியும்...