சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள்.
பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை.
பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ கள், பதனி இறக்குவது மட்டும் என்றல்லாமல் அதையும் தாண்டி அந்த தொழிலுக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது.
பனையேறும் தொழில் என்பது தமிழர்களின் இலக்கியத்தோடு தொடர்பு உடையது. எப்படி என்று மண்டை குழம்ப வேண்டாம்.
பனை மரத்தில் இருந்து தான் அன்றைய காலத்தில் எழுத்தோலைகள் தயாரிக்கப்பட்டன. சங்ககாலத்தில் பனை ஓலையை தயார் செய்வது என்பது தற்காலத்தில் அச்சகத்தை, புத்தக பதிப்பகத்தை நடத்துவதற்கு சமம். ஒரு அச்சகத்தை நடத்துபவர் குறைந்த பட்ச கல்வி அறிவு உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அதே போன்று பனை மரத்தோடு தொடர்புடையவர்களும் சங்ககால அறிஞர்களோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படி எனில் பனையேறுதல் ஏன் இழிவான தொழிலாக கருதப்பட வேண்டும் என்று கேள்விகள் எழும்புவது இயற்கையே...
பார்ப்பனியம் தமிழ்நாட்டில் நுழைந்த போது பெரும்பான்மையான தமிழர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாகவும் கல்வியில் சிறந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
பார்ப்பனியம் ஒரு சமூகத்தை அழித்தொழிப்பதற்கு செய்யும் வேலையே, அவர்கள் எந்த சமூகத்தை அடிமைபடுத்துகிறார்களோ அந்த சமூகத்தின் கல்வி அறிவை நிர்மூலப்படுத்துவதே.
அப்படி தான் பார்ப்பனியத்தின் சதியில் வீழ்ந்த பண்டைய தமிழகத்தில் கல்வியில் தேர்ந்த அறிஞர்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் கல்வி பயிலுவது தடை செய்யப்பட்டு அவர்கள் இழிமக்களாக ஒடுக்கப்பட்டனர். அவர்கள் சார்ந்த தொழில்கள் இழிவானதாக பரப்புரை செய்யப்பட்டது. தமிழர்களுடைய இலக்கியங்கள் அவற்றை சுமந்து கொண்டலைந்த பனையோலைகளோடு கொழுத்தப்பட்டது. அப்படி பட்ட சூரையாடலுக்கு தப்பி பிழைத்தவை தான் தற்போது நாம் கொண்டாடும் சங்க கால தமிழ் இலக்கியங்கள்.
அது மட்டுமா பண்டைய தமிழர்களின் தொழில் நுட்பங்கள் சிதைக்கப்பட்டன. பார்ப்பனியம் அதற்கு தேவைப்பட்ட தமிழர்களின் அறிவுச்செல்வங்களை திருடி அவர்களது பெயரில் காப்புரிமை செய்து கொண்டது. செத்துப்போன மனித உடல்களை பதப்படுத்தும் பண்டைய எகிப்தியரின் தொழில்நுட்பங்களை உலகத்தின் கவனத்தை கவர்ந்தது என்றால், உயிருள்ள தமிழ் இலக்கியங்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுமந்த பனையோலைகளை பதப்படுத்தும் தொழில்நுட்பமும் அவற்றை கையாண்ட சான்றோர்களின் நேர்த்தியும் உலகை ஆச்சரியப்படுத்திருக்க வேண்டும் தானே. அது ஏன் நடக்கவில்லை ?
எகிப்தியர்களின் தொழில் நுடபத்தை பற்றிய குறிப்புகளை அறிவதற்கு தடயங்கள் இருந்தது. ஆனால் பண்டைய தமிழர்களின் அறிவு சார் தொழில் நுட்பங்கள் பார்ப்பனியத்தால் தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டதும் அந்த தடயங்களை பற்றிய தேடல்களின் முயற்சி பார்ப்பனிய சக்திகளால் அவ்வப்போது முடக்கப்பட்டு வருவதன் விளைவு தான் அது.
தமிழகத்தில் கடந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பின்னணியை பார்த்தால் அவர்கள் கலை, இலக்கிய, தொழில்நுட்ப அறிவு சார்ந்த குடியினராக தான் இருப்பர்.
ஒரு எடுத்துகாட்டிற்கு முன்பு சாணார் என்றழைக்கப்பட்ட நாடார்களையும், பறையர்களின் உயர்ந்த வகுப்பினராக கருதி கொள்ளும் வள்ளுவ குடிகளையும் எடுத்து கொள்ளலாம். பல பேர் சாணார் என்ற வார்த்தையை இழிவான ஒன்றாக கருதலாம். நான் அவ்வாறு கருதவில்லை. அது “சமணர்” என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பது என்னுடைய யூகம்.
தமிழகத்தில் புத்த சமண மதங்கள் கோலேச்சின என்பதை நாம் இந்த இடத்தில் நினைவில் கொண்டாக வேண்டும். தென் தமிழகத்தில் சாணார் என்றழைக்கப்பட்ட மக்களும் சமணர்களாக இருந்திருக்க வேண்டும்.
இந்த சாணார் என்றழைக்கப்பட்ட குடிகள் தான் பனை மரத்தோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களில் தேர்ந்தவர்கள்.
அதே போல் பதப்படுத்தப்பட்ட பனையோலைகளில் சாகாவரம் பெற்ற தன்னுடைய இரண்டடி ஆயுதத்தை செதுக்கிய வள்ளுவரும் சமண மரபை சேர்ந்தவர் என்று கூறப்படுவதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
வள்ளுவர் போன்ற தமிழ் ஞானிகளோடு சாணார்கள் என்று தற்போது விழிக்கப்படும் சக சமணர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்த பட்சத்தில் அவர்களும் கல்வி அறிவில் தேர்ந்தவர்களாக தான் இருந்திருப்பர். ஒரு வேளை வள்ளுவரின் குறள்களில் பல அந்த சமணர்களின் பாதிப்பில் எழுந்தவையாக கூட இருக்கலாம்.
பண்டைய இலக்கியங்களில் சமணர்கள் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்றே குறுப்பிடப்பட்டு இருக்கிறது. வியாபார தொழிலில் சிறந்து விளங்குபவர்களான “செயின்கள்” என்று வழங்கப்படும் இன்றைய வடஇந்திய சமணர்களோடு பொருத்தி பார்க்கும் போது அந்த பண்டைய தமிழ் சமூகத்தை சேர்ந்த சமணர்களின் மரபணுக்கள் தான் இன்றைய நாடார்களின் ரத்தத்தில் இருக்கிறதோ என்னவோ. ம்ம்ம்ம் சாதிகளே இல்லாது இருந்த தமிழர்களின் அடையாளத்தை சிதைத்து அவற்றை இழிவான சாதிய பெயர்களாக கற்பித்த பார்ப்பனியத்தின் வீச்சை பார்க்கும் போது அது எந்த அளவிற்கு தமிழர்களின் பண்பாட்டை சூறையாடி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இடைப்பட்ட காலங்களில் தமிழர்களிடையே புகுத்தப்பட்ட போகி பண்டிகையின் பெயரில் பார்ப்பனிய சக்திகள் அவர்களின் சதியில் சிக்கி அறியாமையில் மூழ்கி கொண்டிருந்த தமிழர்களிடம் “பழையன கழித்தல் புதியன புகுதல்” என்று கூறி பார்ப்பனிய வெறியர்களிடம் சிக்காமல் எஞ்சி இருந்த கலை இலக்கிய அறிவியல் கருவூலங்களை தீயால் எரிக்கவும் ஆற்றில் விடவும் தூண்டினர்.
இப்படி தான் தனிநபர்களிடம் இருந்த அறிவு செல்வங்களும் சூறையாடப்பட்டன. நம்மாளுங்க பல பேருக்கு போகி பண்டிகையின் பின்னணி தெரியமால் இவனுங்களும் வீட்டில் இருக்கிற பழைய பொருட்களை எல்லாம் எரித்து கொண்டாடுவானுங்க. தான் சார்ந்த சமூகத்தின் கலாச்சார பண்பாட்டு அழிவுகளை கொண்டாடும் இனம் உலகத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழினமாக தான் இருக்கும்
தண்ணீருக்கடியில் எப்படி காற்றை மறைத்து வைக்க முடியாதோ அதே போன்று தான் பார்ப்பனியத்தால் அவர்களால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்ட மக்களை ரொம்ப காலத்திற்கு அவ்வாறு வைத்திருக்க முடியவில்லை. தமிழ் சமூகத்தில் அவ்வபோது கிளர்ந்தெழுந்த சமூக விடுதலை இயக்கங்களின் தோன்றல்களும், கிருத்துவ மத போதகர்களின் வருகையும் நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் அறிவு தேடல்களுக்கு வழி திறந்து விட்டது. தங்களுடைய மரபணுக்களில் அறிவு சார்ந்த காரணிகளை சுமந்து கொண்டிருந்ததால் தான் என்னவோ கல்வி கற்க உரிமை கிடைத்தவுடன் குறுகிய காலத்திலேயே பார்ப்பனிய வெறியர்களோடு கல்வியில் சரிக்கு சமமாக போட்டி போடக்கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்று விட்டன அந்த சமூகங்கள்.
இவ்வளவற்றிற்கும் இடையில் இத்தனை நூற்றாண்டுகள் கல்வி கற்க தடை செய்யப்பட்ட சமூகங்கள் ஒரு நூற்றாண்டிற்குள் கல்வி அறிவில் தங்களை பெரிய அளவில் வளர்த்து கொள்ள முடிந்ததென்றால், ஒருவேளை பண்டைய தமிழ் மூததையர்கள் பார்ப்பனியத்திடம் அடிமையாகாமல் இருந்து கல்வி கற்கும் உரிமையை இழக்காமல் இருந்து இருந்தால் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவியல் அறிவில் எத்தைகைய முன்னேற்றத்தை தற்போதைய தமிழ்ச்சமூகம் அடைந்து இருக்கும் என்று எண்ணி பார்த்தால் யாரோ சுத்தியால் மண்டையில் போட்டது போன்று வலிக்கிறது...