08/03/2018

பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்...


திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி, அதிரடிக்குப் பெயர் போனவர். திருவண்ணாமலைப் பேருந்து நிலையம் அருகே அனுமதியில்லாமல் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளைக்கூட அகற்ற உத்தரவிட்டவர்.

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பாதையில் உள்ள கழிவறைகளில், சிறுநீர் கழிக்க பக்தர்களிடம் 10 ரூபாய் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. கடந்த பௌர்ணமி  தினத்தில் கலெக்டரும் பக்தர்களுடன் பக்தராகக் கிரிவலம் சென்றார். பொது கழிவறைக்குப் பக்தர்போலவே சென்றார். வந்திருப்பது கலெக்டர் என்று அங்கே இருந்தவர்களுக்குத் தெரியவில்லை. கலெக்டரிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.

அதேபோல, கிரிவலப் பாதையில் உள்ள 4 கழிவறைகளுக்கும் கலெக்டர் சென்றார். தலா 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இத்தனைக்கும் பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழாக் காலங்களில் கட்டணமே வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி பக்தர்களிடம் கழிவறை குத்தகை எடுத்தவர்கள் வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.

கிரிவலம் முடிந்து வந்த கலெக்டர், கழிவறை குத்தகைதாரர்களின் வசூல் வேட்டையைத் தடுக்காத ஊராட்சி செயலர்கள் முருகன், ராஜ்குமார், அண்ணாமலை முருகன், சுப்பிரமணி ஆகிய 4 பேரை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்தார். பக்தர்களிடம் கழிவறை வசூலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கலெக்டரின் அதிரடியைத் தொடர்ந்து இருவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

வசூல் வேட்டை நடத்தியவர்களுக்கு கலெக்டர் அளித்த அதிர்ச்சி வைத்தியம் திருவண்ணாமலை மக்கள், பக்தர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.