21/07/2018
கண்ணகியை தமிழருக்கு அறிமுகப்படுத்தியதே கருணாநிதி தான் என திராவிட பீரங்கி வெடித்து வருகிறது அதற்கு இடையில் இவர்களின் தலைவரான ஈவெரா அவர் காலத்தில் கண்ணகியை வைத்து என்ன வகையான அரசியல் செய்தார் என்று பார்ப்போம்...
கருஞ்சட்டைத் தலைவர் கண்ணகியைப் பழிப்பதா?
– ம.பொ.சி. எழுதிய ஆவேசக்கட்டுரை!
1943இல் திராவிடர் கழகம் கம்ப இராமாயணத்தை ஆரியக் காப்பியம் என்றும், அதில் புகழ்பாடும் இராமன் ஆரிய மன்னன் என்றும் கூறி, தீவிரமாக எதிர்த்து வந்தது. பெரியாரோடு சேர்ந்து, அவரது சீடர் அண்ணாதுரையும் ‘நீதி தேவன் மயக்கம்’ என்ற பெயரில் கம்பனைச் சாடினார். அத்தோடு, இராமாயணத்தை எரிக்கும் முயற்சியிலும் திராவிடர் கழகம் ஈடுபட்டது. அந்த முயற்சிக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. பின்னர் ஆர்.கே.சண்முகஞ் செட்டியாரின் வேண்டுகோளுக்கு இணங்க கம்ப இராமாயண எரிப்பு முயற்சி கைவிடப்பட்டது.
ஆனால், சிலப்பதிகாரத்தை பொறுத்தவரை அதன் மீது கை வைக்க திராவிடர் கழகத்திற்கு சற்று ஒரு தயக்கம் இருந்தே வந்தது. அதற்குக் காரணம் சிலப்பதிகாரம் தமிழ் மண்ணில் உருவான காப்பியம்; மூவேந்தர்கள் புகழ்பாடும் காவியம்; வட நாட்டு ஆரிய மன்னன் கனக விசயனை தமிழ் மன்னன் சேரன் செங்குட்டுவன் தோற்கடித்து , வெற்றி பெற்ற காதை இதில் உண்டு.
வட நாட்டு ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு சிலப்பதிகாரக் கதையை ஒரு உத்தியாக திராவிடர் கழகம் பயன் படுத்தி வந்தது.
1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விளக்கும் நூல்” தமிழன் தொடுத்த போர்”. இந்நூலை எழுதியவர் மா.இளஞ்செழியன். வெளி வந்த ஆண்டு 1948. திராவிட இயக்கத்தவர்களால் பெருமையாகப் போற்றும் இந்நூலுக்கு பெரியாரும், அண்ணாவும் அணிந்துரை தந்துள்ளனர்.
இந்நூலின் உள்ளே, “தமிழன் தொடுத்த போர்- சேரன் செங்குட்டுவன் பரம்பரை கனகவிசயர் பரம்பரையை வீழ்த்திய காதை” என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதே போல், திராவிடர் கழகத்தின் சார்பில் வெளிவந்த ‘விடுதலை’ ஏடும் சிலப்பதிகாரம் குறித்து உயர்வாகவே பாராட்டி எழுதி வந்தது. அப்போது திராவிடர் கழக இலக்கிய அணி பரப்புரையாளராக இருந்தவர் சி.இலக்குவனார். அவர் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பை விளக்கி கூட்டமொன்றில் பேசினார்.
அதிலே, “சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப் படுத்தி பேசும் இலக்கியம்… சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ் நூல் … இராமாயணத்தை போல், பெரிய புராணத்தைப் போல், சீவக சிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல, இதுதான் அந்த நூலுக்குரிய தனிச் சிறப்பு” என்றும் பேசினார்.
இலக்குவனாரின் உரையை விடுதலை ஏடு ( 15.3.1951) ‘சிலப்பதிகாரத்தின் பெருமை” என்று தலைப்பிட்டு வெளியிட்டது.
ஒரு வாரம் கழித்து, அதே ‘விடுதலை’ ஏட்டில் ( 21.3.1951) தமிழறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள் சிலப்பதிகாரத்தின் பெருமையை விளக்கி நீண்ட கட்டுரையை எழுதினார். விடுதலை ஏடு கொடுத்த தலைப்பு இதுதான்;
“சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை? பகுத்தறிவு , ஜனநாயகம், தன்மானமே தமிழர் பண்பு”
சாமி சிதம்பரனார் அதிலே, “கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன” என்று கூறி விட்டு, சிலப்பதிகாரம் எழுதப் பட்டதற்கான மூன்று காரணங்களை அருமையாக விளக்குகிறார்:
“சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்க முடியாது.
1.தெய்வீகச் சடங்குகளால் பயனில்லை.
2. அறிவின்றி, விசாரணையில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொது மக்களால் அழிக்கப்படும்.
3. தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலை வணங்க மாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தை காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாற மாட்டான்.
இந்த உண்மைகளை விளக்கவே எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்பொழுதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன் நிற்போம்” என்று அறை கூவல் விடுத்தார்.
அதுவரைக்கும் சிலப்பதிகாரத்தை பாராட்டி வந்த விடுதலை ஏட்டில், பத்து நாட்கள் கழித்து சிலப்பதிகாரம் குறித்து எதிர்மறையான கருத்துகள் வெளியிடப்பட்டது.
30.3.1951இல் காங்கேயத்தில் பேசிய பெரியார் சிலப்பதிகாரத்தை கடுமையாகச் சாடினார். அது பின்வருமாறு:
“சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன ? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது! ‘
‘கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம். ‘
‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா ?
-இப்படி கண்ணகிப் பாத்திரப் படைப்பிற்கு எதிராக திடீரென்று பெரியார் பேசியதற்கு காரணம் சாமி சிதம்பரனாரோ, இலக்குவனரோ காரணம் அல்ல. ம.பொ.சி.தான் முழு முதற் காரணமாவார்.
அப்போது தான் ம.பொ.சி. “சிலப்பதிகார மாநாடு” (24.3.1951) ஒன்றை சிறப்பாக நடத்தி முடித்திருந்தார். தமிழறிஞர்கள் இரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், ந.சஞ்சீவி ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்று சிலப்பதிகாரத்தை பாராட்டிப் பேசிய உரையை செய்தி ஊடகங்கள் பரபரப்பாக்கி வெளியிட்டிருந்தன.
இதனைப் பெரியாரால் பொறுக்க முடிய வில்லை. தமது விடுதலை ஏட்டில் சிலப்பதிகாரத்தின் சிறப்பை வெளியிட்டதைக் கூட மறந்து கண்ணகியை வசை பாடத் தொடங்கினார். அன்றிலிருந்து தீவிரமாக கண்ணகி எதிர்ப்பு புராணத்தை பாடத் தொடங்கியவர் தான் பெரியார். தமது இறுதிக்காலம் வரை கண்ணகி எதிர்ப்பை நிறுத்திக் கொள்ள வில்லை.
பெரியாரின் சிலப்பதிகார எதிர்ப்பு பேச்சிற்கு பதிலடி தரும் வகையில் ம.பொ.சி தமது தமிழ் முரசு (ஏப்ரல்-1951) ஏட்டிலே, “கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்” தலைப்பிலே நீண்ட கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரை அன்றைய இலக்கிய உலகில் பெரிதும் வரவேற்கப்பட்டு அனைவராலும் பாராட்டு பெற்றது.
ம.பொ.சி. எழுதிய கட்டுரை :
கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர் ‘ என்ற தலைப்பிட்டு சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1951 ஏப்ரல் மாத தமிழ்முரசில் எழுதிய தலையங்கம்:
சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு தேடத் தேசியவாதிகள் மாநாடு கூட்டுகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே, திராவிடர்கழக வட்டாரத்தில் கலக்கங் கண்டுவிட்டது.
காங்கிரஸ்காரர்கள் என்றாலே வடமொழிக்கும், வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள், தமிழுக்கும், தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்துவந்த பிரச்சாரமெல்லாம் பொய்யாய் – கனவாய் – பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகையால் சிலப்பதிகார மாநாடு நடக்கும் முன்பே சிலம்பின் பெருமையைப் பற்றி ‘விடுதலை ‘ தானே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது.
திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரசாரகரான புலவர் இலக்குவனார் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பினைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் ‘சிலப்பதிகாரத்தின் பெருமை ‘ என்ற தலைப்பு கொடுத்துப் பிரசுரித்தது விடுதலை.
மீண்டும் 29-3-51 இதழில் சாமிசிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து அதையும் பிரசுரித்தது விடுதலை.
இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும். மொழித்தொண்டு கட்சிப்பூசல்களுக்கு அப்பாற்பட்டதல்லவா ?
ஆனால் ஈ..வே.ரா. இத்தனைக்கும் எதிர்மாறான போக்கிலே 30-3-51-ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்.
‘உண்மையான திராவிடன் – தமிழ்மகனாக – இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா ?
பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும் ? ‘ – என்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்குச் ‘சிறப்புரை ‘ வழங்கியிருக்கிறார் ஈ.வே.ரா.
அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர், அந்தக் காவியத்தின் சிறப்புப்பற்றிப் பேசுவோர் அத்தனைபேரும் போலித்தமிழராகின்றனர். இதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பைப் புலவர் பெருமக்களிடம் விட்டு விடுகிறோம்.
‘சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன ? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது! ‘ என்கிறார் ஈ.வே.ரா.
மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல் எப்போதோ எதற்காகவோ ‘ஆரியம் ‘ என்ற வெறுப்பேற்பட்டதன் காரணமாக, காண்பதெல்லாம் ஆரியமாகக் காட்சியளிக்கிறது ஈ.வே.ராவுக்கு!
கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும் கண்ணகியின் புரட்சி ‘ஆரியம்! ‘
அறியாது செய்த பிழைக்கு தனது உயிரையே அர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் ‘ஆரியம்! ‘
அரசன் உயிர்நீத்த அக்கணமே தானும் உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் ‘ஆரியம்! ‘
வாய்கொழுத்துப் பேசிய வடவேந்தருடன் போரிட்டுத் தமிழரின் ஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவனின் செயல் ‘ஆரியம்! ‘
மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக் காட்டிய இளங்கோவனின் சித்திரம் ‘ஆரியம்! ‘
பரத்தையர் குல மகளுக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்தபிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின் மனப்பண்பு ‘ஆரியம்! ‘
இத்தனையும் தமிழ்ப்பண்பிற்கு எதிரான ‘ஆரியப் ‘பண்புதான் என்றால் அந்த ஆரியப்பண்பு நீடூழி வாழ்வதாக!
ஈ.வே.ரா. தமிழ்ப்பண்பைப் பற்றி முதலில் யாரிடமேனும் பாடங்கற்றுக் கொள்ளட்டும். அப்புறம் அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் அவருக்கும் நன்மையுண்டு; நாட்டிற்கும் நன்மையுண்டு.
‘கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம் ‘ – என்கிறார் ஈ.வே.ரா.
எங்கோ யாரோ செய்து கொண்ட திருமணத்தை நினைப்பில் வைத்துக் கொண்டு, கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும்! உடைமைக்காக அல்லாமல், கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உணர்ச்சிக்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பெண் அல்லள் கண்ணகி; கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான்.
ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகுவைக்கும் அறிவு கெட்ட நிலை கண்ணகிக்கு இருந்ததில்லை. கண்ணகி பருவம் கடந்து பழுதுபட்டவளும் அல்லள்; கோவலன் எழுபது வயதுக் கிழவனும் அல்லன். இருவரும் இளமை இன்பம் துய்ப்பதற்கான இளம்பருவத்தினர். மகளென இருந்தவளை அவள் விருப்பம் அறியாமலே திருமணப்பதிவுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மனைவியாக்கிக் கொள்ளும் கொடுமையைப் பார்த்திருக்கிறோம். அது போன்ற அடிமைத்தனத்தில் கண்ணகியை வைத்துக் கோவலன் மணம் செய்து கொள்ளவில்லை.
பார்ப்பனப் புரோகிதர், மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, அவர்களுடைய திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று; ஆபாசக் கூக்குரல்.
‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா ? ‘ – என்று கம்பீரமாகக் கேள்வி போடுகிறார் ஈ.வே.ரா.
முதலில் தந்தையாக உறவு கொண்டு, பிறகு அவரையே கணவராகக் காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.
இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.
கண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.
மனித உணர்ச்சி இருந்ததால்தான், ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது, அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டிக் கொடுங்கோல் அரசை அழித்தாள்!
அத்தகைய பெண்ணரசியையா பழிப்பது ? அதுவும் மணியம்மையின் காதலரா பழிப்பது ? என்ன துணிச்சல்! புலவர் பெருமக்களே, நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள் ? ஆம் என்றால் இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன் ? ஒருவேளை தமிழே வீரத்தை விட்டு விலகி விட்டதோ ? அறிவு, பீடத்தை விட்டு அகன்று விட்டதோ ? பதில் கூறுங்கள்.
திராவிடத்தாருக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது, சில பு..ர..ட்..சி…வீரர்களுக்கு! இதோ பாருங்கள், இலக்கியத்துறையில் இவர்களுக்குள்ள ஞானத்தை!
‘சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்தும் பேரிலக்கியம் ‘ – என்று பேசுகிறார் திராவிடக்கழகத்தின் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார்! அதை ‘சிலப்பதிகாரத்தின் சிறப்பு ‘ என்று தலைப்பு கொடுத்துப் பிரசுரிக்கிறது விடுதலை.
சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்… தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்… ராமாயணத்தைப் போல், பெரியபுராணத்தைப் போல், சீவகசிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல.. இதுதான் இந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு என்று 21-3-51 ‘விடுதலை ‘யில் எழுதுகிறார் ஈ.வே.ரா.வை நிழல்போல் பின்பற்றிச் செல்லும் சாமிசிதம்பரனார்.
இதை, ‘சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை ? பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு ‘ – என்று கொட்டை எழுத்தில் இரண்டு காலம் தலைப்புக் கொடுத்து விடுதலையில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்.
‘கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன ‘ – என்கிறார் ஈ.வே.ரா.வின் சீடர்.
குருவுக்கு அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் முதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக் காட்சியளிக்கிறாள் கண்ணகி. சீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சி அளிக்கிறாள். ஒரே பாத்திரம் – இரு வேறு காட்சிகள். காண்பவர் இருவரும் ஒரே கட்சியினர். அது மட்டுமல்ல – குருவும், சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல – இவர்களைப் பொதுவாழ்வில் நடமாட விட்டதற்காக வேதனையும் படவேண்டும்.
சிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்பொழுது ‘ஆரியநெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது ‘ என்கிறார் ஈ.வே.ரா. ‘ஆரம்பம் முதல் இறுதிவரையில் ஆரியந்தானே காட்சியளிக்கிறது ‘ என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார்.
அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம். விடுதலையில் தாம் எழுதிய கட்டுரையில் இறுதியில் சீரிய கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்.
‘சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப் படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்க முடியாது.
1. சடங்குகளால் பயனில்லை.
2. அறிவின்றி விசாரணையில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும்.
3. தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலை வணங்கமாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாற மாட்டான்.
இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்போதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்நிற்போம்.
சீடரானவர் குருவுக்கு முரணாய் இப்படி சிலப்பதிகாரம் பயனுள்ள நூல், கழிக்கத் தக்கன சில இருப்பினும் பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார்.
ஈ.வே.ரா.வுக்குத் தன்மானமிருப்பின் சாமிசிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ‘ என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வே.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.
இப்படி முன்னுக்குப்பின் முரணாக, ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறதே!
இந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது ‘திராவிடநாடு. ‘ அது மட்டுமல்ல, தாங்கள் என்றென்றும் சிலப்பதிகார பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.
தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மனத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை.
ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்.
சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள்,
மிஸஸ் மிராண்டா என்று மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப் பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப்பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது.
ஆகவே தந்தை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு,
நாராயணசாமி நெடுஞ்செழியரானார்.
ராமையா அன்பழகரானார்..
நடராஜர் கூத்தரசரானார்.
ஆம், விலை போகாத பண்டங்களுக்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல! புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி, இவர்களும் உண்மையான தமிழ்ப்பற்றுடையவர்கள்தாம் என்று நம்பினர், நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர்.
ஆனால் என்னதான் திறமையாக வேடம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேடம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.
சிலப்பதிகாரம் சொல்வதென்ன ?
நாம் திராவிடர் அல்லர் – தமிழர்;
நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று – தமிழகம்;
அதன் வடக்கெல்லை விந்தியமன்று, வேங்கடம்;
தமிழ்நாட்டு அந்தணர் ஆரியரல்லர், தமிழர்.
தமிழருடைய பண்பாடும் பழக்க வழக்கங்களும், வேங்கடத்திற்கு வெளி உள்ளவர்கள் பண்பாட்டுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் சற்றே வேறானதாயினும் விரோதமானதல்ல என்பவற்றைத் தெளிவாக வற்புறுத்துகின்றது.
இந்த உண்மைக்கு நேர்மாறான போக்கிலே ‘காலட்சேபம் ‘ நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வே.ரா. சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.
ஆனால், ஒருகோடி ஈ.வே.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கைக் குறைக்க முடியாது!
(நன்றி: தமிழ்முரசு – ஏப்ரல் 1951)...
மங்குஸ்தான் பழம் உடல் நல நன்மைகள்...
பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது.
பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.
இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு..
தமிழ் - மன்கோஸ்தான்
இஂக்லீஶ் - மன்கோஸ்டீன்
மாலாயலாம் - மன்குஸ்தா
தெழுகு - மௌகூஸ்த்தா
பட்யாநிகல் நாமே - கர்சினிய மன்கோஸ்தான
கண் எரிச்சலைப் போக்க...
கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
வாய் துர்நாற்றம் நீங்க...
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.
மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
மூலநோயை குணப்படுத்த...
நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.
பெண்களுக்கு...
மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.
இருமலை தடுக்கும்.
தலைவலியை போக்கும்.
நாவறட்சியை தணிக்கும்.
மங்குஸ்தான் பழத்தில்..
நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி
உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்...
காவிரியில் தடுப்பணைகள் கட்ட முடியாதா? முதல்வரின் அறியாமை அவமானத்துக்குரியது - பா.ம.க அன்புமணி இராமதாஸ் அறிக்கை...
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகள் என்பதால் அங்கு தடுப்பணைகளை கட்ட முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். முதலமைச்சர் பதவியில் மட்டுமின்றி பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் நீர் மேலாண்மை குறித்த அறியாமை அதிர்ச்சியளிக்கிறது. ஒருவேளை தடுப்பணைகள் கட்டப்பபட்டால் மணல் கொள்ளையடிக்க முடியாது என்பதால் இப்படி கூறினாரா? என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இது கண்டிக்கத்தக்கது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள்; அங்கு தடுப்பணைகளை கட்டினால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் இக்கருத்து மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. காரணம்... எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சர் மட்டுமல்ல, பொதுப்பணித்துறை அமைச்சரும் ஆவார். தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் தான் நீர்ப்பாசனத்துறையும் வருகிறது. அதனால் நீர் மேலாண்மை குறித்த அனைத்து புள்ளி விவரங்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், சமவெளிப் பகுதிகளில் தடுப்பணைகளைக் கட்ட எந்த தடையும் இல்லை என்ற அடிப்படை அறிவு கூட முதலமைச்சருக்கு இல்லை. இப்படி கூறியதற்காக அவர் அவமானத்தில் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகள் தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சமவெளிப்பகுதிகளில் பெரிய அளவிலான அணைகளைத் தான் கட்ட முடியாதே தவிர, தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. திருச்சியை அடுத்த கம்பரசன்பேட்டையில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுப்பட்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, அப்பகுதியில் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. கல்லணையில் தொடங்கி நாகை மாவட்டத்தில் கடலில் கலக்கும் கொள்ளிடம் ஆறு மொத்தம் 110 கி.மீ நீளம் கொண்டதாகும். இந்த ஆற்றில் மொத்தம் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டால் தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்று பாசனத்துறை பொறியாளர்கள் அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசிடம் அறிக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. இதையெல்லாம் முதலமைச்சர் பழனிச்சாமி படித்திருக்க வேண்டும்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையால் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், அதைத் தடுக்க இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்ட ஆணையிட வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 09.06.2014 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் தடுப்பணைகள், தளமட்ட சுவர்கள், கதவணைகள் என 61 சிறு அணைகளை ரூ.117 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் மேம்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை அமைச்சர் இல்லை என்றாலும் கூட, பின்னர் அந்த பதவிக்கு வந்தவுடன் இதுகுறித்தெல்லாம் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டங்களை முறையாக நடத்தியிருந்தால் கூட இப்படி ஓர் உளறலை அவர் செய்திருக்கமாட்டார்.
இதற்கெல்லாம் மேலாக, யாருடைய வழியில் ஆட்சி நடத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறாரோ, அதே ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 04.08.2014 அன்று சட்டப்பேரவையில்,‘‘குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும்’’ என்று அறிவித்திருந்தார். இந்த உண்மைகள் ஒன்று கூட தெரியாமல் காவிரி பாசன மாவட்டங்களில் தடுப்பணைகளை கட்ட முடியாது என்று கூறியதன் மூலம் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி என்பது மணல் கொள்ளை நடத்தி கோடிகளை குவிப்பதற்கான துறை என்று நினைப்பவர்களுக்கு தடுப்பணை குறித்த உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, நீர் மேலாண்மை குறித்த பொது அறிவு சிறிதும் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிலிருந்து விலக வேண்டும். பொதுப்பணித்துறையை இரண்டாக பிரித்து நீர்வள மேலாண்மைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இரு துறைகளை அவை சார்ந்த புரிதல் உள்ளவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நிலுவையிலுள்ள தடுப்பணைத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதுடன், அனைத்து ஆறுகளிலும் குறைந்தது 5 கி.மீ தொலைவுக்கு ஒரு தடுப்பணைக் கட்டும் திட்டத்தை ஐந்தாண்டு காலத் திட்டமாக வகுத்து செயல்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்...
மனதுக்கு ஏது மருந்து ?
ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்.....?
மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள்....
அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...?
ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்...
இரு துயரத்தை கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....
அப்போது ஒரு உண்மை .... புத்தனாக ஞானம் பிறக்கும்.
இதுவும் கடந்து போகும்....
உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...
பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....
பிரச்சினைகளை களை எடுப்பதும் நாமே....
ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.
நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...
மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....
இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....
இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...
எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...
பாகிஸ்தான் வரை நீளும் தமிழ் வரலாறு...
ஆகம விதிப்படிதான் பெரிய கோவிலைக் கட்டினான் அரசர்க்கரசன் (இராஜராஜன்)..
அவன் பயன்படுத்திய அளவீடு முழம் என்பது (24 muzham =33 inch).
இது அப்படியே சிந்துசமவெளி கட்டட அளவுகளுடன் ஒத்துப்போகிறது.
சிந்து சமவெளியில் ஏறுதழுவுதலும் முருகனின் உருவமும் கிடைத்துள்ளது.
சிந்து சமவெளிப்பகுதியான Pehowa ல் இன்றும் ஒரு கார்த்திகேயன் கோவில் இருக்கிறது.
அதையும் தாண்டி பாகிஸ்தானில் சிந்து ஆற்றுப்படுகையில் காவிரி, கொற்கை, குமரி போன்ற 20க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ்ப் பெயர்களுடன் உள்ளன.
ஆந்திராவில் இருக்கும் தமிழர் மண்ணான சித்தூரிலும் ஏறுதழுவுதல் நடக்கிறது.
இன்று தமிழ் மண்ணில் மட்டுமே காணக்கிடைக்கும்.. ஆகமமும் ஏறுதழுவுதலும் முருகனும்.. பாகிஸ்தான் வரை தமிழர் வாழ்ந்ததை உறுதி செய்வன...
ஆலிவ் எண்ணெய் உடல்நல நன்மைகள்...
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.
இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.
ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்...
ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.
திரவத் தங்கம்...
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.
கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.
வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.
தோலினை மினுமினுப்பாக்கும்...
இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.
குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.
இதயநோயை தடுக்கும்...
ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்...
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.
இதயநோயை தடுக்கும்...
இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (ஓய்ல்வே ஆயில்) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.
ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்...
உலக வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட பெண் ஆய்வாளர்கள் யாரால் ஏன்?
மதங்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
ஒரு மரியாதைக்குரிய நபர் திராவிட கொள்கையில் ஈடுபடுத்தி கொண்டவர் சில தினங்களுக்கு முன்பு மதங்களின் பார்வையில் பெண்கள் என்ற புத்தகத்தை வாசித்ததாகவும்.
அதில் உலகிலுள்ள அத்தனை மதங்களும் பெண்களை இழிவுபடுத்தியதாகவும்
அடிமைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டு அந்தந்த மத நண்பர்களையெல்லாம் டாக் செய்து காரசாரமான விவாதம் செய்தார்.
அவருக்கான பதிலாகவும் இன்னும் மதங்கள் பெண்களை அடிமைப்படுத்துவதாக கூறும் அத்தனை பேருக்கான பதிலாகவும் இந்த பதிவை எழுதுகிறேன்.
எகிப்தில் கி.பி. 370 ல் வாழ்ந்த ஒரு பெண் தான் HYPATIA .
இந்த பெண் நட்சத்திரங்கள், கிரகங்கள் சூரியன் இவைகளின் நிலைகளை அளக்கும் கருவிகளை கண்டுபிடித்தார்
(scientific instruments including plane astrolabe).
ஆனால் இந்த பெண்ணை அன்றைய ஆண் மேலாதிக்கம் வெளியே விடவில்லை முடிவு.
காலப்போக்கில் இவர் யார் என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு மறக்கடிக்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல அன்றைய காலத்தில் உள்ள ஆண்கள் கடவுளுக்கு எதிராக பேசிவதாக கூறி அடித்தே கொலை செய்தனர்...
அடா லொலாஸ்..
என்ற பெயரில் 1815 ல் இங்கிலாந்தில் வாழ்ந்துள்ளார் இவர் கால்குலேட்டர் போன்ற ஒரு கருவியை கண்டு பிடித்துள்ளார் ஏறக்குறைய கணினி போன்ற அமைப்பு அதுமட்டுமல்ல இவரே முதலாவது கம்யூட்டர் ப்ரோகிராமர் என்று இப்போது உள்ள சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இவரது ஆய்வை சமர்ப்பிக்க வேண்டிய தருணத்தில் திடீரென இவரது ஆய்வுக்கு தடை விதிக்கப்பட்டது.
பல போராட்டங்கள் நடத்தியே இவரது ஆய்வை வெளியிட அந்த நாடு அனுமதித்தது .
அப்படி என்னதான் போராடி இருக்கும் இந்த பெண்?
வேறென்ன அந்த பெண்ணின் பெயரை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது
A என்ற தனது பெயரின் முதல் எழுத்துடன் (இனிஷியலுடன்) இந்த ஆய்வு வெளியே வந்தது.
அதோடு இந்த பெண் விஞ்ஞானி உலகில் மறைக்கப்பட்டு விட்டார்..
இன்னும் பல..
இது அவ்வளவும் ஆணாதிக்கத்தின் பெயரில் நடந்தேறியது.
ஒரு பெண் எப்படி விஞ்ஞானியாக முடியும் என்ற கர்வம் தான்..
மதங்கள் பெண்ணை அடிமைபடுத்துகிறது என்றால்
மோசேவுக்கு இருந்த ஒரு சகோதரியை பற்றியோ
இயேசுவுக்கு இருந்த தாய் மரியாவை பற்றியோ
தந்திரா ஞானி திலோபாவுக்கு இருந்த தாகினி என்ற ஒரு பெண்
மஹாவீரருக்கு மனைவியாக ஒரு பெண்
தந்திரா தத்துவங்களை சஹாரா முனிவருக்கு போதித்தது ஒரு பெண் தான்
முஹம்மது நபிக்கு அவர் கொள்கைக்கு முதலில் உதவியது அவரது மனைவியான கதீஜா என்ற பெண். .
இவ்வளவு பெண்கள் பற்றி அந்தந்த மதத்தில் உள்ள வரலாறு பேசவேண்டிய அவசியமில்லை..
ஆணாதிக்க அடிமைத்துவம் நிறையவே வரலாற்றில் உள்ளது
குறிப்பு :The usborne book of scientists என்ற நூல் ஆணாதிக்க கொடுமையால் மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகளை பற்றிய செய்தியை மட்டுமே தொகுக்கப்பட்ட புத்தகம். .
இதுல மதம் தான் இழிவுபடுத்துகிறது என்று வெற்றுக்கூச்சல் வேறு....
வாழ்கை தத்துவத்துவத்தின் குறியீடு.. கன்பூஸியஸை கடுப்பாக்கிய அறிஞர்..
சீனாவில் கன்பூஸியஸ் காலத்தில் வாழ்ந்தவர் தான் லா தசூ.
கன்பூஸியஸ் போலவே இவரும் அக்காலத்தில் பிரபலமானவராக இருந்தார் .
லா தசூ தத்துவங்கள் கோட்பாடுகள் பிற்காலத்தில் அதுவே ஒரு மதமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வாழ்வின் அடிப்படை (Yin)
''யின்''என்ற தத்துவம் என்றார்
அதாவது மென்மை, பெண்மை, சாந்தம், இருண்மை,
இந்த நான்கு பண்புகள் தான் வாழ்க்கை என்றார் இதற்கு யின், என்று பெயரிட்டார்.
அதே சமயம் கன்பூஸியஸோ..
அதெல்லாம் இல்லை வாழ்வின் அடிப்படை தத்துவம்..
யாங் (YANG) என்றார்..
அதாவது வலுமை, ஆண்மை, சுறுசுறுப்பு, பிரகாசம்..
இந்த நான்கு பண்புகள் தான் வாழ்வின் அடிப்படை என்றார்.
கன்பூஸியஸ் கோட்பாடு அரச நிர்வாகத்தோடும்
லா தசூ வின் கோட்பாடுகள் இயற்கையுடன் சேர்ந்து வாழ்வது போலும் என்று முடிவெடுக்கப்பட்டது அக்கால மக்களால்.
இந்த இருவரது கோட்பாடுகளையும் Yin மற்றும் yang கோட்பாட்டை ஒரு குறியீட்டு கொண்டு உருவாக்கினார்கள் கருப்பு வெள்ளையில் மீன் வடிவத்தில். ..
சிலர் இதில் ஆண்மையும் பெண்மையும் இருப்பதை அறிந்து ஆண்மை மற்றும் பெண்மைத் தான் உலக தத்துவம் அதுதான் இந்த குறியீட்டு.
இது தான் வாழ்கையின் தத்துவ இரகசியம் என்றார்கள்..
அந்த குறியீடு தான் புகைப்படம்.
குறிப்பு : கன்பூஸியஸ் 3300 விதிகளை எழுதியிருந்தார்.
பிற்காலத்தில் வந்த லா தசூ எல்லா விதிகளையும் நீக்கினார் பின்னர் கூறினார் எந்த விதியும் இல்லாமல் இருப்பதே விதியாகும்.
மற்றும் எது சுலபமானதோ அது சரியானது எது சரியானதோ அது சுலபமானது.
Easy is Right. Right is Easy.
இருவருக்கும் அக்காலத்தில் பெரும் வார்த்தை சண்டையே நடந்தது குறிப்பிடத்தக்கது. ..
பேசுவோம்...
ஆடிமாதத்தில் கொண்டாடுவோம் குலதெய்வத்தை...
ஊரு விட்டு, தேசம்விட்டு வாழ்ந்தாலும், வருடத்தில் ஒருநாள் நம்மை நம்முடைய பாட்டன்-பூட்டன் வாழ்ந்து மறைந்து "பட்டவன்"னா இருக்கிற மண்ணை நோக்கி திரும்பவைப்பது நம்ம குலதெய்வ வழிபாடு. பங்காளி சண்டையில் ரெண்டுபட்டு கிடந்தாலும் வருடத்தில் ஒருமுறை நம்மை ஒன்றாக்கும் இந்த குலசாமி வழிபாடு.
இயற்கையை வணங்கி, இன்புற்று இருந்த நம்ம தமிழர் மெய்யியல் வாழ்வின் பரிணாமம், நன்றி நவிழ்தலின் மிச்சம், முன்னோர் வழிபாடு, மூத்தோர் வழிபாட்டின் தொடர்ச்சி என தமிழர் வரலாற்றின் பொக்கிசம், ஆரிய வர்ணாசிரமத்தாலும், திராவிட கயவர்களாலும் இன்றுவற்றை வீழ்த்த முடியாமல் இருக்கின்ற தமிழர் பண்பாட்டியலின் அறம் நமது குலதெய்வ வழிபாடு.
மாரியம்மா, காளியம்மா, பிடாரி, வெட்டுடையா காளி, கருப்பு, முனியாண்டி, அய்யனார், கொல்லங்குடி கருப்பாயி, வீரப்புத்திரன் சாமி என எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான குலசாமிகள் கொலுவீற்றிருக்கும். நாம் தினந்தோறும் சாலையின் வழியோ, காடுகளின் வழியோ கடக்கும் போது ஒரு நடுகல்லில் மஞ்சள் துணியோ, சிவப்பு துணியோ சுற்றி, ஒரு இரும்பு வேலொடு, மரத்தின் நிழல்களை நாம் கடக்கும் போதெல்லாம் அங்கே "தமிழர் வரலாற்றில் வாழையடி வாழையாக வாழ்ந்த எவரோ ஒருவர் தெய்வமாக இருக்கிறார் என்பதை உணரவேண்டும்.
குலசாமியின் வரலாற்றை தொட்டு, அந்த மூல கதைகளின் வேர்களை தேடி ஓடினால் தமிழரின் தொன்மையுடைய அரியபல அற்புத உண்மைகளை அறியலாம். தமிழர் பெருங்கோவில்களில் கலசங்களில் தானியங்களை சேமித்து வைத்து பேரழிவு நாட்களில் தமிழர் சந்ததிக்கு பயனுறவேண்டும் என்று எப்படி வகைப்படுத்தினார்களோ, அதுபோல தமிழரின் ஒட்டுமொத்த வரலாறும் சிறுசிறு தொகைகளாக குலதெய்வ வழிபாட்டில் சேமிக்கப்பட்டு உள்ளது.
எனவே, குலதெய்வ வழிபாடு தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டியது. குலசாமிக்கு பொங்கல் வைத்து கிடாவெட்டுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று சொல்வதெல்லாம் பைத்தியகாரர்களின்(-----++++) கூற்று. குலசாமி வழிபாட்டினால் சாதி சண்டை வரும் என்று பேசுவதெல்லாம் ஆரிய அடிவருடிகளான திராவிடர்களின் சூழ்ச்சி. இந்த சூழ்ச்சி சதிவலையில் சிக்காமல் மீள்வதில் மட்டுமே தமிழர் பண்பாட்டு மீட்சி இருக்கிறது.
இன்று ஆடிமாதம் முதல் தேதி. குறிப்பாக தமிழர்களின் முன்னோர்கள் குலசாமி வழிபாடு என்ற முறையில் தனது சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் அற்புத நிகவுகள். தமிழர்கள் அனைவரும் தங்களது குலசாமி வழிபாட்டை விமர்சையாக கொண்டாட வேண்டுகிறது நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி.
நகரத்தில் இருந்து ஒருநாள் விடுப்பு எடுத்து பெண்டு பிள்ளைகளோடு கிராமம் நோக்கி சென்று, கிடாவெட்டி சோறு தின்னு மகிழ்ந்திருப்பதோடு நின்றுவிடாமல், நமது சந்ததிகளாக இருக்கும் இளைய பிள்ளைகளுக்கு நமது குலசாமி வழிபாட்டின் கதைகளை விரிவாக சொல்லி, ஒவ்வருவரும் தனது குலதெய்வம் பற்றிய மூலக்கதைகளை ஆவணப்படுத்தும்படியாக கோரிக்கையை வைக்கிறது நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி.
ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒலிபெருக்கிகள் கட்டி, குலசாமி பற்றிய அருமை பெருமைகளை பதாகையை வைத்து, கிடாவெட்டி, எல்லோரையும் அழைத்து இன்பமாய் விருந்து வைத்து கொண்டாடுங்கள் நமது குலதெய்வ வழிபாட்டை.
குலதெய்வங்கள் சிறுதெய்வங்கள் அல்ல, அவர்கள் நமது பெருமைக்குரிய இனமுன்னோர்கள். கொண்டாடும் குலசாமிகளை, இந்த ஆடிமாதத்தில்...
இம்புட்டு ஆபத்தா? மாத்திரைகளை இரண்டாக உடைத்துப் போடுவதால்...
சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்பட்டாலே மருத்துவமனைக்குச் செல்வதும், மாத்திரைகளை விழுங்குவதும் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. விழுங்கும் மாத்திரைகளை பெரிதாக இருக்கிறதென்றோ அல்லது டோசேஜ் காரணத்தை சொல்லியோ இரண்டாக உடைத்து சாப்பிடுபவர்களா நீங்கள் அப்போ தொடர்ந்து வாசியுங்கள்.
மாத்திரைகளை முழுதாக சாப்பிடுவது தான் நல்லது. அதை இரண்டாக உடைப்பது தவறான செயல். அப்படிச் செய்வதால் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய டோசேஜ் அளவுகள் மாறுபடும்.
மாத்திரைகளை இரண்டாக உடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மருத்துவரிடம் அதனை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
மாத்திரைகளின் அளவு வேறுபடும் போது அது உடலுக்கு பக்க விளைகளைக் கூட ஏற்படுத்தலாம். இதயம்,ஆர்த்த்ரைட்டீஸ், பிரசர், கை நடுக்கத்திற்கான மாத்திரைகளை சாப்பிடுவோர் இதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாத்திரையின் தயாரிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்களின் அளவும் வேறுபடும். நாம் இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் தான் உடைபடும் என்றும் அதிலிருக்கும் மூலப்பொருளும் சமமாக பிரிந்திருக்கிறது என்றும் சொல்ல முடியாது.
வீரியமிக்க மருந்துகள் வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். முழுமையாக சாப்பிட்டால் தான் அவற்றின் பலன் கிடைக்கும். உடைக்கும் போது வீரியமிக்க மூலப்பொருள் நேரடியாக நம் உள்ளுறுப்புகளில் செல்வதால் இதனால் வேறு சில உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
மாத்திரைகளை இரண்டாக உடைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவை உடைக்க தகுந்த ஆயுதங்களை கையாளுங்கள். கையாலோ, கத்தியாலோ அல்லது வேறு பல கூர்மையான ஆயுதங்களாலோ மாத்திரைகளை உடைக்க கூடாது. மாத்திரைகளை பிரித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும்.
மாத்திரைகளை உடைக்க பயன்படுத்தும் கருவியில் உள்ள அழுக்குகள் மாத்திரைகளில் பட்டு விடும் என்பதாலும் இவற்றை தவிர்ப்பது நலம்.
மாத்திரைகள் சில ஈரப்பதம் படக்கூடாது, காற்றில் வைக்கக்கூடாது என்றெல்லாம் இருக்கும். அவற்றை இரண்டாக்க போகிறேன் என வெளியில் நீண்ட நேரம் வைத்திருப்பதோ அல்லது இரண்டாக உடைக்க முடியாமல் இரண்டுக்கும் மேற்பட்ட வடிவங்களில் உடைத்து மாத்திரையின் முக்கிய வேலையே சிதைந்துவிடும்...
Subscribe to:
Posts (Atom)