உலகில் மிக மிக சிரமமான செயல் எது என்றால் அது மனதைக் கட்டுப்படுத்துவது தான். மனதைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மனதால் கட்டுப்பட்டு அது போன போக்கில் போவது தான் பெரும்பாலான மனிதர்களுக்கு சுலபமாக இருக்கிறது. அதுவே இயல்பாகவும் இருக்கிறது. ஆனால் உண்மையான ஆன்மீகத்தின் அடித்தளமே மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தான்.
எனவே உண்மையான மகான்கள் எல்லாம் இறை நிலை அடையும் முன் மனதுடன் பெரும் போராட்டங்களையே நடத்தி உள்ளார்கள் என்று சொல்லலாம். அப்போது அவர்கள் மனதை எப்படியெல்லாம் கண்டார்கள், வர்ணித்தார்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் பார்ப்போமா?
தாயுமானவர்:
இவர் அளவுக்கு மனதை ஏசியவர்கள் இருக்க முடியுமா என்று சந்தேகப்படும் அளவுக்கு மனதை இவர் ஏசியுள்ளார். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது என்று பாடிய இவர் அந்த சிந்தையை வெல்லும் முன் அது அவரைப் பாடாய் படுத்திய போதெல்லாம் கடுமையாக விமரிசிக்கத் தவறவில்லை.
இதோ சில உதாரணங்கள்...
இரும்பு நேர் நெஞ்சக் கள்வன் – (இரும்பு போல் கடினமாக இருக்கும் திருட்டு மனம்).
ஆயிரம் சொன்னாலும் அறியாத வன்னெஞ்சம் (எவ்வளவு சொன்னாலும் உண்மையை அறியாத கடுமையான நெஞ்சம்).
வஞ்சனை அழுக்காறாதி வைத்திடும் பாண்டமான நெஞ்சு
(வஞ்சனை, பொறாமை முதலானவற்றை வைத்திருக்கும் பாத்திரமான நெஞ்சம்).
இரும்போ கல்லோ மரமோ எனும் நெஞ்சம் (இரும்பா கல்லா மரமா என்று தீர்மானிக்க முடியாத நெஞ்சம்).
என்னெஞ்சம் ஐயா தீயுண்டிருந்த மெழுகலவோ (தீயின்வாய்பட்ட மெழுகாய் இருக்கும் நெஞ்சம்).
உள்ளம் கனலில் வைத்த பாகோ மெழுகோ (உள்ளம் தீயில் வைத்த பாகா, மெழுகா?).
தெளியாது சுழலும் சிந்தை (தெளிந்திடாமல் சுழன்று கொண்டே இருக்கும் மனம்).
வெந்து வெடிக்கின்ற சிந்தை (வெந்து ஆத்திரத்தில் வெடிக்கின்ற மனம்).
தீதெல்லாம் ஒன்றாய் வன்மை செறிந்திருட்படலம் போர்த்த பாதகச் சிந்தை (எல்லாத்தீமையும் ஒன்று சேர்ந்து கடுமையான இருட்படலத்தை போர்த்திக் கொண்டிருக்கும் பாதகமான மனம்).
பாதரசமாய் மனது சஞ்சலப்படுதலால் (பாதரசம் அடிக்கடி மாறக்கூடியது. அப்படி சஞ்சலப்படும் மனம்).
ஆசையெனும் பெருங்காற்றூடிலவம் பஞ்செனவும் மனமது அலையும் (ஆசை என்ற பெருங்காற்றில் இலவம் பஞ்சு சிக்கினால் எப்படி அந்தப் பஞ்சு காற்றில் எல்லா இடங்களுக்கும் அலைபாயுமோ அப்படி அலைபாயும் மனம்).
வன்னெஞ்சோ, இரங்காத மர நெஞ்சோ
இரும்பு நெஞ்சோ, வைரமான கன்னெஞ்சோ
அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம்
(கடுமையான நெஞ்சமோ, இரக்கமே இல்லாத மர நெஞ்சமோ, இரும்பாய் இறுகிய நெஞ்சமோ, வைரம் போன்ற கல் நெஞ்சமோ, அல்லது மண்ணாங்கட்டி போல் உறுதியே இல்லாத நெஞ்சமோ எனது நெஞ்சம் என்று கேட்கிறார். இதில் ஒவ்வொன்றாகவும் மனம் ஒவ்வொரு சமயங்களில் இருக்கிறதல்லவா?).
பாழ் நெஞ்சே பொன்னைப் புவியை மடப்பூவையரை மெய்யெனவே (பொன், உலகம், பெண் ஆகியவற்றை மெய் என நினைத்து அதன் பின்னோடும் பாழாய் போன நெஞ்சமே).
இப்படியெல்லாம் பாடாய் படுத்தும் மனதை ஒரு பொருட்டாய் நினைக்க மாட்டேன் என்று மிகவும் உறுதியாக ஓரிடத்தில் கூறுகிறார்:
நெஞ்சே உனையொரு காசாய் மதியேன் நான்.
இன்னொரு இடத்தில் அலைகள் இல்லாத நீர்நிலை போல தெளிவான மனத்தை அடைவேனோ என்று சலித்துக் கொள்கிறார்.
திரையிலா நீர் போல் சித்தம் தெளிவனோ.
மனமோ அலைகிறது. அதன் பின்னே உறுதியில்லாது மனிதனும் அலைந்தால் அதை விட முட்டாள்தனம் இருக்க முடியுமா? இதை நேரடியாக இன்னொரு இடத்தில் மனதிடமே கேட்கிறார்.
மனமே நம் போல உண்டோ சுத்த மூடர்.
வள்ளலார்:
வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பெயரைக் கேட்கும் போதெல்லாம் அவருடைய பிரார்த்தனை நமக்கு நினைவிற்கு வராமல் போகாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று பாடிய மகான் அவர். மனம் அந்த அளவுக்குத் தூய்மையாகவும் நடிப்பில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த அவரும் மனதை சில இடங்களில் பாடுகிறார்.
சும்மா அலையுமென் வேட நெஞ்சம் (வேட்டையாட காட்டுக்குச் சென்ற வேடன் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்க மாட்டான். அதே போல் அலையும் என் நெஞ்சம்).
மனத்தாசையொரு கடலோ! (கடலளவு ஆசையை உள்ளடக்கிய மனம்).
வாயொருபாற் பேச மனமொருபாற் செல்ல (வாயொரு ஒரு விஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் கூட மனமோ அதில் நிலைக்காமல் வேறொரு பக்கம் சஞ்சரிக்கிறது).
திருவருட்பா:
திருவருட்பாவிலும் ஆன்மிக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மனம் கடுமையாக சாடப்படுகிறது.
மாயையென்னும் நிறையாறு சூழும் துரும்பாய் சுழலுமென்னெஞ்சு (மாயை என்னும் நிறைந்த ஆற்றில் துரும்பாய் சிக்கி சுழல்கின்ற என் நெஞ்சம்).
வஞ்ச நெஞ்சம் கல்மலையோ, இரும்போ, செம்மரமோ
பாறைக்கல்லோ முருட்டுக்கட்டையோ.
கன்னெஞ்சமோ கட்டை வன்னெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என்னெஞ்ச என்னெஞ்சமோ.
(தாயுமானவர் வர்ணித்தது போலவே இந்த இரண்டு பாடல் வரிகளிலும் வர்ணனை ஒத்துப் போகிறது. இரண்டாவதிலோ எட்டிக்காய் போல கசக்கும் நெஞ்சம் என்பதனையும் சேர்த்து இந்த நெஞ்சம் என்ன நெஞ்சமோ என்று சலித்தும் கொள்கிறார்).
கணிகை போலெனைக் கலக்கிற்றுள்ளம் (விலைமகள் மயக்குவது போல மனம் மயக்கிக் கலக்கியது.
சிந்தை மயங்கித் திரிகின்ற நாயேனை (மனம் மயங்கி ஒரு இலக்கும் இல்லாமல் திரிகின்ற நாய் போல இருக்கிறேன்).
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் (பக்குவம் இல்லாத மனமான சிறு பிள்ளை அனைத்தும் அறிந்த அறிவாகிய குருவை மதித்திட மாட்டான்.).
விகாரமெனும் பேய்க்கு நெஞ்சம் பறி கொடுத்து நிற்கின்றேன் (மன விகாரம் என்ற பேய்க்கு நெஞ்சை பறிகொடுத்து விட்டு நிற்கின்றேன். அதாவது அது ஆட்டிய படியெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறேன்).
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் (ஓரிடத்தில் நிலைத்து நிற்காத நெஞ்சமும் பொல்லாத மாயையும் சேர்ந்து என்னைப் பாடாய்படுத்துகிறது.
கல்நெஞ்சமே மான் போல் குதித்துக் கொண்டாடேல் (கல் நெஞ்சமே மான் போல் தாவிக் குதித்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டாட வேண்டாம்).
திருநாவுக்கரசர்:
திருநாவுக்கரசர் மனதுடன் போராடியதை விட அதைத் தூய்மைப்படுத்தி இறைவனை அங்கு இருத்தி கொண்டாட முனைவதில் அதிக கவனம் கொள்கிறார். துவக்கத்தில் ’குறிக்கோளிலாது கெட்டேன்’ என்று சுய ஆராய்ச்சியில் காண்கிறார். மனதில் குறிக்கோள் உறுதியாக இருக்கின்ற போது தடுமாற்றம் இல்லையல்லவா?
கரப்புறு சிந்தை காண்டற்கரியவன் (வஞ்சனை நிறைந்த மனதால் இறைவன் அறிய முடியாதவன்).
மனத்தினுள் விளக்கொன்றேற்றி உன்னுவார் உள்ளத்துள்ளார் (மனதினில் ஞான விளக்கை ஏற்றி ஆழமாக எண்ணுபவர்கள் நெஞ்சத்தில் இறைவன் கண்டிப்பாக இருக்கிறான்).
நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் (இறைவனே என் நெஞ்சத்தை உனக்கே இடமாகக் கொடுத்து விட்டேன்).
எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே! (இறைவனை தன்னுள் இருத்திய பிறகு மனதிடம் வியந்து கேட்கிறார். என்ன பெருந்தவம் செய்தாய் என் நெஞ்சமே-இறைவனை இருத்திக் கொள்வதற்கு).
இப்படி மனம் ஆன்மீகத்திற்கு இடையூறாக இருக்கும் போது மகான்களால் கடுமையாக விமரிசிக்கப்படுகிறது.
மனம் அலைவதை நிறுத்தி இறைவனில் நிலைத்து அமைதியும் ஆனந்தமும் அடையும் போது பாராட்டவும் படுகிறது.இறைவனை எட்டவும் மனம் மிக அவசியம் என்பதையும் மகான்கள் மறுத்து விடவில்லை.
திருமந்திரம் ”சிந்தை தெளிந்தார் சிவமாயினார்களே” என்று சொல்வது போல மனம் தெளிவடையும் போது மனிதன் தெய்வமேயாக முடிகிறது என்பதும் அவர்கள் அறிவாக இருக்கிறது...