06/04/2017

பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் - 4...


பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

அக்கால எகிப்திலும் நிஜங்களை விட போலிகள் அதிகமாக இருந்தனர். சக்தி வாய்ந்த சில சித்தர்கள் இருந்தாலும் ஏமாற்று வேலை செய்கிற போலி ஆசாமிகள் நிறைய இருந்தனர். சிலரை எந்த ரகத்தில் எடுத்துக் கொள்வதென்று பால் ப்ரண்டனுக்கு விளங்கவில்லை. ஆனாலும் தன் அனுபவங்களை உள்ளது உள்ளபடி அவர் விவரித்திருக்கிறார்.

பால் ப்ரண்டன் சந்தித்த ஒரு மந்திரவாதி அக்காலத்தில் கெய்ரோ நகரில் பிரபலமாக இருந்தார். அவர் பல அற்புதங்கள் செய்து காட்டுபவர் என்று பலரும் சொல்லவே பால் ப்ரண்டன் அவரைக் காணச் சென்றார் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அந்த மந்திரவாதி சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரிடம் அவர் பிறந்த தேதியையும், நேரத்தையும் கேட்டார். பால் ப்ரண்டனுடைய ஜாதகத்தைக் கணித்து அவருடைய எதிர்காலத்தைப் பற்றிக் கூறுவதாக அவர் கூறினார்.

பால் ப்ரண்டன் தான் தன்னுடைய எதிர்காலத்தை அறிய அங்கு வரவில்லை எனவும் அவருடைய சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டதால் அதை நேரில் கண்டறிய வந்ததாகவும் கூறினார். ஆனால் அந்த மந்திரவாதி அவரை விடுவதாக இல்லை. பால் ப்ரண்டனுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டவர் அவருடைய கையையும் ஒரு காகிதத்தில் வைத்து வெளிப்புறத்தை வரைந்து கொண்டு வரைந்ததன் உள்புறத்தில் சில அரபு வார்த்தைகளை எழுதி வைத்துக் கொண்டு ஐந்து நாட்கள் கழித்து வரும்படிக் கூறினார்.

ஐந்து நாட்கள் கழித்து பால் ப்ரண்டன் அவர் சொன்னபடி அவரை மீண்டும் சந்தித்தார். பால் ப்ரண்டனுடைய ஜாதகத்தைக் கணித்திருந்த அந்த மந்திரவாதி அதைப் பற்றி அவரிடம் விளக்கி விட்டு பால் ப்ரண்டனின் கைக்குட்டையைக் கேட்டார்.

பால் ப்ரண்டன் அவர் எதற்குக் கேட்கிறார் என்று விளங்காவிட்டாலும் தன் கைக்குட்டையை அவரிடம் தந்தார். வாங்கிய கையோடு அந்தக் கைக்குட்டையை திரும்பித் தந்த அந்த மந்திரவாதி அதை இரண்டாகக் கிழிக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அவர் சொன்னபடியே தன் கைக்குட்டையை இரண்டாகக் கிழித்தார். ஒரு பகுதி கைக்குட்டையை எடுத்து அதில் ஏதோ எழுதிய அந்த மந்திரவாதி அதை மடித்து ஒரு செம்புத் தட்டில் வைக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே வைத்தார்.

அடுத்ததாக ஒரு காகிதத்தை எடுத்த அந்த மந்திரவாதி அதில் ஒரு முக்கோணத்தை வரைந்து அதனுள் ஏதோ அரபு மொழியில் எழுதினார். பின் அதை பால் ப்ரண்டனிடம் தந்து அதை அந்தக் கைக்குட்டையின் மீது வைக்கச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே வைத்த பின் ஏதோ மந்திரங்களைக் கண்களை மூடிக்கொண்டு அந்த மந்திரவாதி உச்சரிக்க ஆரம்பித்தார். பின் மந்திரங்களை நிறுத்தி அந்த மந்திரவாதி கண்களைத் திறந்த அந்தக் கணத்தில் அந்தக் கைக்குட்டை தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனே அந்த அறையில் புகை சூழ்ந்தது. மூச்சு விடக் கஷ்டமாகி இருவரும் அந்த அறையை விட்டு ஓடினார்கள்.

பால் ப்ரண்டனுக்கு அந்த மனிதர் செய்து காட்டியது மேஜிக்கா, அல்லது அவருடைய உண்மையான சக்தியைத் தானா என்ற சந்தேகம் வந்தது. அவர் அந்த மந்திரவாதியிடம் கேட்டார். கைக்குட்டையில் எப்படித் தீப்பிடிக்க வைத்தீர்கள்.

அந்த மந்திரவாதி சொன்னார். என் வசத்தில் உள்ள பூதத்தின் உதவியுடன்.

எகிப்தில் இப்படிப் பலரும் சொல்வதை பால் ப்ரண்டன் கேட்டிருக்கிறார். அது எவ்வளவு தூரம் உண்மை என்று அவரால் தீர்மானிக்க முடியவில்லை.

அந்த மந்திரவாதி அவரிடம் ஒரு வெள்ளைக் கோழியை மூன்று நாட்கள் கழித்து எடுத்து வரச் சொன்னார். பால் ப்ரண்டனுக்கு உதவும் சக்தியை அவர் ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் இது போல் வெள்ளைக் கோழியின் கழுத்தை அறுத்து ரத்தத்தை ஆட்களின் மேலே தெளிக்கும் பழக்கத்தை கேள்விப்பட்டிருந்த பால் ப்ரண்டன் அருவறுப்புடன் மறுத்தார். காரணம் கேட்டு அறிந்து கொண்ட மந்திரவாதி அப்படியெல்லாம் தான் செய்யப்போவதில்லை என்றும் தைரியமாக ஒரு வெள்ளைக் கோழியை எடுத்துக் கொண்டு வரும்படியும் கூறினார்.

பால் ப்ரண்டனும் அந்த மந்திரவாதி சொன்னபடியே மூன்று நாட்கள் கழித்து வெள்ளைக் கோழியை எடுத்துக் கொண்டு சென்றார். தரையில் போடப்பட்டிருந்த ஒரு கம்பளத்தில் அந்தக் கோழியை வைத்து விட்டு அறையின் மூலையில் புகைந்து கொண்டிருந்த புகையருகே மூன்று முறை பால் ப்ரண்டனை சென்று வரச் சொன்னார். பால் ப்ரண்டனும் அப்படியே செய்தார்.

மந்திரவாதி ஒரு காகிதத்தை எடுத்து அதில் ஒரு சதுரத்தை வரைந்தார். அந்த சதுரத்தை ஒன்பது சிறு சதுரங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்திலும் எதையோ எழுதினார். பின் எதோ மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். சொல்லிக் கொண்டே வலது கை சுட்டு விரலை கட்டளையிடுவது போல் அடிக்கடி நீட்டினார். பயந்து போன கோழி பறந்து சென்று அறையின் மூலையில் பதுங்கியது. மந்திரவாதியின் மகன் வந்து அந்தக் கோழியை பழைய இடத்திலேயே வைத்து விட்டுச் சென்றான்.

அந்தக் கோழி மீண்டும் பறந்து செல்ல யத்தனிக்கையில் மந்திரவாதி உறுதியான குரலில் கட்டளையிட அந்தக் கோழி அசையாமல் அப்படியே நின்றது. சிறிது நேரத்தில் கோழி நடுங்க ஆரம்பித்தது. மந்திரவாதி மீண்டும் பால் ப்ரண்டனை அந்த சாம்பிராணி புகைக்கு மூன்று முறை சென்று வரச் சொன்னார். பால் ப்ரண்டன் அப்படியே செய்தார். அதன் பின்னர் அந்த மந்திரவாதி மந்திரங்களைச் சொல்லியே அந்தக் கோழியை செயலிழக்க வைத்தார். பின் அந்த கோழி இறந்து விழுந்தது.

மந்திரவாதி சொன்னார். "என்னிடம் உள்ள பூதம் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளது என்பதற்கு அறிகுறியே இந்தக் கோழியின் மரணம். இந்தக் கோழி சாகவில்லை என்றால் அந்த பூதம் உங்களுக்கு உதவத் தயாரில்லை என்று அர்த்தம். நீங்கள் இந்தக் கோழியை கைக்குட்டை அல்லது காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு போய் நாளை வரை அதைப் பிரிக்காமல் வைத்திருங்கள். பின் இரவு 12 மணியளவில் நைல் நதியில் வீசி விடுங்கள். வீசுவதற்கு முன் ஏதாவது ஒன்றை வேண்டிக் கொள்ளுங்கள். என்னுடைய பூதம் அதை நிறைவேற்றிக் கொடுக்கும்"

அந்தக் கோழியைத் தொடாமலேயே சாகடித்ததை பெரிய அற்புத சக்தியாக பால் ப்ரண்டன் நினைக்கவில்லை. அப்படி ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்வதிலும் அவருக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தக் கோழியை ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார்.

பால் ப்ரண்டன் வீட்டில் வேலை செய்த அரபு வேலைக்காரன் அது என்ன என்று கேட்க அது மந்திரவாதி மந்திரசக்தி பிரயோகித்த கோழியின் சவம் என்று சொன்னவுடன் அவன் அது வைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பக்கம் வருவதையே தவிர்த்தான். இது போன்ற மந்திரவாதங்களில் அங்குள்ளோருக்கு இருந்த நம்பிக்கையையும் பயத்தையும் பால் ப்ரண்டன் கவனித்தார்.

மறுநாள் மாலை ஒரு ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கையில் மந்திரவாதியின் வீட்டில் நடந்ததைப் பற்றி தன்னுடன் இருந்த எகிப்திய நண்பர் மற்றும் அமெரிக்க நண்பர் ஒருவரிடம் விவரிக்க அவர்கள் இருவரும் அந்த மந்திரவாதியையும் பற்றி கிண்டலாகப் பேசி சிரித்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டலில் அனைத்து மின்விளக்குகளும் அணைந்து போயின. ஓட்டல் உரிமையாளர் என்ன முயற்சி செய்தும் மின் விளக்குகள் எரியாமல் கடைசியில் அவர் மெழுவர்த்திகளைப் பற்ற வைக்க வேண்டியதாகிற்று. உடனே பால் ப்ரண்டனின் படித்த எகிப்திய நண்பர், அது வரை கிண்டல் செய்து கொண்டிருந்தவர், பயந்து போனார். இது அந்த மந்திரவாதியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். இல்லா விட்டால் இருந்திருந்தாற் போல் விளக்குகள் ஏன் அணைய வேண்டும்?

பால் ப்ரண்டனுக்கு அந்த மின்வெட்டு சம்பவம் மந்திரவாதியின் வேலை தானா இல்லை தற்செயலாக நடந்ததா என்று தீர்மானிக்க முடியவில்லை. பின் அவர் அந்த மந்திரவாதி சொன்னபடி அந்த மந்திரித்த கோழியை நள்ளிரவில் நைல் நதியில் போட்டு விட்டு வந்தார்.

அவர் வீடு திரும்புகையில் அவரது அரபு வேலைக்காரன் அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்க்காதது போல ஆச்சரியப்பட்டான். அல்லாவின் கருணையே கருணை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்த மக்களுக்கு இது போன்ற மந்திர தந்திரங்களில் இருந்த நம்பிக்கையைப் பார்த்த பால் ப்ரண்டனுக்கு இதெல்லாம் ஆதாரபூர்வமானதா இல்லை மூடநம்பிக்கையா என்றறியும் ஆவல் ஏற்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.